போபால் - 30 ஆண்டுகளாக காங்கிரஸின் கை நழுவிய தொகுதி!

மத்தியப் பிரதேச மாநிலம், போபால் மக்களவைத் தொகுதி, கடந்த 1989-ஆம் ஆண்டிலிருந்து பாஜகவின் கோட்டையாக திகழ்கிறது.
போபால் - 30 ஆண்டுகளாக காங்கிரஸின் கை நழுவிய தொகுதி!

மத்தியப் பிரதேச மாநிலம், போபால் மக்களவைத் தொகுதி, கடந்த 1989-ஆம் ஆண்டிலிருந்து பாஜகவின் கோட்டையாக திகழ்கிறது. இங்கு காங்கிரஸ் கட்சி கடைசியாக வெற்றி பெற்றது, கடந்த 1984 மக்களவைத் தேர்தலில். அதன் பிறகு, 30 ஆண்டுகளாக "கை' நழுவி வரும் இத்தொகுதியை, இந்த முறை கைப்பற்ற வேண்டும் என்ற வியூகத்துடன் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது.
 போபால் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் களத்தில் உள்ளார். அவருக்கு எதிராக, பாஜக சார்பில் சாத்வி பிரக்யா சிங் தாக்குர் போட்டியிடுகிறார். இவர், 2008-ஆம் ஆண்டில் நிகழ்ந்த மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்.
 கடந்த மாதம் 17-ஆம் தேதி பாஜகவில் இணைந்த சாத்வி பிரக்யாவுக்கு, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த போபால் தொகுதியில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பளித்தது. ஹிந்து தீவிரவாதம் என்ற சொல்லாடலை அதிகம் கையாளும் திக்விஜய் சிங்குக்கு எதிராக சாத்வி பிரக்யாவை பாஜக களமிறக்கியது அக்கட்சியின் வியூகமாக பார்க்கப்படுகிறது.
 போபால் தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 19.5 லட்சம். இதில் ஆண்கள் சுமார் 10.3 லட்சம் பேர். பெண்கள் 9.2 லட்சம் பேர். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட அலோக் சஞ்சார், காங்கிரஸ் வேட்பாளர் பி.சி.சர்மாவைவிட சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் பாஜகவின் வாக்கு சதவீதம் 63.19. காங்கிரஸின் வாக்கு சதவீதம் 30.39 ஆகும்.
 மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் 15 ஆண்டு கால பாஜக ஆட்சி முடிவுக்கு வந்தது. முதல்வராக கமல்நாத் பதவி வகித்து வருகிறார். இந்தச் சூழலில், மக்களவைத் தேர்தலில் போபால் தொகுதியில் திக்விஜய் சிங் போட்டியிடுவது, அவரது சொந்த முடிவு அல்ல என்றும், முதல்வர் கமல்நாத் விருப்பத்தின் பேரிலேயே போபாலில் திக்விஜய்சிங் களமிறங்கியதாகவும் கூறப்படுகிறது.
 ஒரே பாணி பிரசாரம்: போபாலில் மொத்தமுள்ள 19.5 லட்சம் வாக்காளர்களில், 4.5 லட்சம் பேர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 4 லட்சம் பேர் முஸ்லிம்கள். 3.5 லட்சம் பேர் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இத்தொகுதியில் சாத்வி பிரக்யாவின் பிரசாரம், தீவிர ஹிந்துத்துவத்தை முன்வைத்தே இருந்தது. வேட்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சாத்வி பிரக்யா, இது தனக்கும் திக்விஜய் சிங்குக்கும் இடையிலான தர்ம யுத்தம் என்று கூறினார்.
 மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரே தொடர்பாக இவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருந்தபோது தன்னை ஹேமந்த் கர்கரே மோசமாக நடத்தியதாகவும், அப்போது, தான் கொடுத்த சாபத்தால் அவர் உயிரிழந்ததாகவும் பிரக்யா கூறியிருந்தார்.
 அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தபோதும், உள்ளூர் விஹெச்பி பிரமுகர்கள் ஆதரவளித்தனர். அவருக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தையும் அவர்கள் முன்னெடுத்தனர். அதேசமயம், திக்விஜய் சிங்கும் ஹிந்துத்துவ அடையாளத்தை பிரசாரத்தில் பயன்படுத்தினார். ஒரு ஹிந்துவான தன்னை, ஆர்எஸ்எஸ் அமைப்பு ஏன் எதிர்க்கிறது என்று திக்விஜய் சிங் கேள்வியெழுப்பினார்.
 சாதுக்கள் ஆதரவு: திக்விஜய் சிங்குக்கு ஆதரவாக சாதுக்கள் பேரணி நடத்தியதும் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசால் அண்மையில் நதிகள் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட "கம்ப்யூட்டர் பாபா' என்று அழைக்கப்படும் நாம்தேவ் தியாகி, திக்விஜய் சிங்குக்கு ஆதரவளித்தார்.
 அவரது அழைப்பின்பேரில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து போபாலுக்கு வந்த நூற்றுக்கணக்கான சாதுக்கள், திக்விஜய் சிங்குடன் இணைந்து போபால் நகரில் பேரணியாக சென்றனர். அப்போது, "ஜெய் ஸ்ரீராம்' என்ற கோஷத்தை சாதுக்கள் எழுப்பியபடி சென்றனர். பொதுவாக வட இந்தியாவில் பாஜகவுக்கு ஆதரவாக நடைபெறும் பேரணிகளில்தான் காவிக் கொடிகளும், சாதுக்களும் அதிகம் தென்படுவார்கள். ஆனால், போபாலில் காங்கிரஸுக்கு ஆதரவாக இந்தக் காட்சிகள் அரங்கேறின.
 இது தொடர்பாக கருத்து தெரிவித்த கம்யூட்டர் பாபா, "அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவார்கள் என்பதற்காகவே பாஜகவுக்கு ஆதரவு அளித்தோம். கடந்த 5 ஆண்டுகளில் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காத மோடி, இனி எங்களுக்குத் தேவையில்லை' என்றார்.
 போஜ்புரி மக்களின் ஆதரவைப் பெற...: பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த போஜ்புரி மொழி பேசும் மக்கள், போபால் தொகுதியில் கணிசமாக உள்ளனர். இவர்கள் பாரம்பரியமாக பாஜகவின் ஆதரவாளர்களாக கருதப்படுகின்றனர். ஆனால், இம்முறை போஜ்புரி மக்களின் வாக்குகளை கவர வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக செயலாற்றியது. அதற்காக, பூர்வாஞ்சல் பகுதியைச் சேர்ந்தவரான திக்விஜய் சிங்கின் மனைவி அமிர்தா ராய், பிரசாரத்தில் களமிறக்கப்பட்டார். இவர் பிகாரின் புக்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த 1990-களில் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக பதவி வகித்தவர். போபாலில் போஜ்புரி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று அமிர்தா ராய் பேசினார். போஜ்புரி மக்களின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அவர் உறுதியளித்தார். கடந்த தேர்தல்களில் போஜ்புரி மக்களின் வாக்குகளை கவர காங்கிரஸ் எந்த முயற்சியும் மேற்கொண்டதில்லை. ஆனால், இந்த முறை அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அதற்கு நல்ல பலன் கிடைக்கும் என்று திக்விஜய் சிங்குக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
 போபால் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை (மே 12) வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இத்தொகுதி தொடர்ந்து பாஜகவின் கோட்டையாக திகழுமா அல்லது காங்கிரஸின் கைக்கு வருமா என்பது மே 23-இல் தெரியும்.
 -கணேஷ் முத்து
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com