சுடச்சுட

  
  bhihar

  கனிம வளம் மிக்க பிகார் மாநிலத்தில் தற்போது நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது நாடு முழுவதும் பாஜக அலை வீசிய போது, நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பிகாரில் தனித்து போட்டியிட்டது. அதேசமயம் பாஜகவும், ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி ஓரணியிலும், லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சி மற்றொரு அணியிலும் போட்டியிட்டன.
   2014இல் மொத்தமுள்ள 40 தொகுதிகளில், பாஜக 22 தொகுதிகளிலும்,லோக் ஜனசக்தி கட்சி- 6, ராஷ்ட்ரீய ஜனதாதளம்-4, தேசியவாத காங்கிரஸ்-1, ஐக்கிய ஜனதாதளம்-2, ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி (ஆர்எல்எஸ்பி)-3, காங்கிரஸ்-2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
   இந்த முறை, ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜக, லோக் ஜனசக்தி கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், ஆர்எல்எஸ்பி ஆகிய கட்சிகள் எதிரணியில் கூட்டணி அமைத்து 2019ஆம் ஆண்டுக்கான தேர்தலை சந்திக்கின்றன.
   வடக்கு பிகாரில் வால்மீகி நகர், மேற்கு சம்பாரண் மற்றும் கிழக்கு சம்பாரண் ஆகிய 3 மக்களவைத் தொகுதிகள் அடங்கியுள்ளன. இந்த மூன்று தொகுதிகளிலும், கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி வாகை சூடியது. இந்த முறை, ஐக்கிய ஜனதாதளமும், பாஜகவும், லோக் ஜனசக்தியும் இணைந்து போட்டியிடுவதால் எளிதான வெற்றியை பெற்று விட முடியும் என தேசிய ஜனநாயக கூட்டணி கருதுகிறது.
   பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற பிரச்னைகளால் பாஜக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதால் தங்களால் எளிதில் வெற்றி பெற முடியும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளமும், காங்கிரஸும் நம்புகிறது. ஆனால், பாலாகோட் தாக்குதலுக்கு பிறகு தங்களுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதால், எளிதில் வெற்றி பெற்று விட முடியும் என்று பாஜக கருதுகிறது.
   இருப்பினும், வடக்கு பிகாரை பொருத்தவரை ஜாதிவாரியான வாக்குகளே வெற்றி, தோல்விகளை நிர்ணயிக்கிறது.
   வால்மீகி நகர் தொகுதி: வால்மீகி நகர் தொகுதியில் கணிசமான அளவில் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் வசிக்கும் பகுதி புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ளதால், தங்களை காட்டை விட்டு வெளியேற்றி விடுவார்களோ என்ற அச்சத்துடனேயே வசிப்பதால், அவர்களது வாக்குகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமையுமா என்பது சந்தேகமே. வால்மீகி நகருக்கு உள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வால்மீகி நகர் தனி சட்டப்பேரவைத் தொகுதியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் வாக்குகளை அதிகமாக பெறுபவர்களே வெற்றி பெற முடியும்.
   கடந்த தேர்தலின்போது இத்தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சதீஷ்சந்திரதுபே, காங்கிரஸ் வேட்பாளர் பூர்ணமசி ராமை 1,17,793 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று எம்.பி.யானார். இம்முறை, நிதீஷ்குமார் மீது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளதும், ஆளுங்கட்சிக்கு சாதகமாக உள்ளது.
   2019ஆம் ஆண்டுக்கான தேர்தலில், இந்த முறை வால்மீகி நகர் தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் வைத்தியநாத் பிரசாத் மஹதோவுக்கும், காங்கிரஸ் வேட்பாளர் சாஸ்வத் கேதார் ஆகியோரிடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
   மேற்கு சம்பாரண் தொகுதி: வடக்கு பிகாரின் மற்றொரு தொகுதியான மேற்குபஸ்சிம் சம்பாரண் தொகுதியில் கடந்த 2014ல் பாஜக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சஞ்சய் ஜெய்ஸ்வால், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் வேட்பாளர் பிரகாஷ் ஜாவை 1,10,254 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
   கடந்த முறை, எதிரெதிர் திசையில் போட்டியிட்ட பாஜகவும், ஐக்கிய ஜனதாதளமும் தற்போது ஒரே கூட்டணியில் போட்டியிடுவதால் வெற்றி நிச்சயம் என மார்தட்டுகின்றனர்.
   இம்முறை பாஜக சார்பில் டாக்டர் சஞ்சய் ஜெய்ஸ்வாலுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து ஆர்எல்எஸ்பி வேட்பாளர் பிரஜேஷ்குமார் குஷ்வாஹா களத்தில் இறங்கியுள்ளார்.
   இந்த தொகுதியிலும் ஜாதி வாக்குகளே வெற்றியை நிர்ணயிக்கின்றன. இத்தொகுதியில் மட்டும் 1.30 லட்சம் குஷ்வாஹா சமுதாயத்தை சேர்ந்தவர்களின் வாக்குகளும், 80 ஆயிரம் படேல் சமுதாயத்தினரும், 40 ஆயிரம் பிராமணர் சமுதாயத்தினரும், இவர்களைத் தவிர யாதவர்களும், தலித் பிரிவினரும் கணிசமான அளவில் வாக்காளர்களாக உள்ளனர்.
   கிழக்கு சம்பாரண் தொகுதி: கடந்த 2014ஆம் ஆண்டு இங்கு போட்டியிட்ட ராதாமோகன் சிங் (பாஜக), தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் வேட்பாளர் வினோத்குமார் ஸ்ரீவாஸ்தவாவை 1,92,163 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.பி.யானார்.
   மத்திய அமைச்சராக உள்ள ராதாமோகன் சிங்குக்கே இம்முறையும்,, போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது. இவரை எதிர்த்து ஆர்எல்எஸ்பி கட்சியை சேர்ந்த ஆகாஷ்குமார் சிங் போட்டியிடுகிறார்.
   இத்தொகுதியில் மட்டும் 22 வேட்பாளர்கள் போட்டியிகின்றனர். இத்தொகுதியில் யாதவர் மற்றும் முஸ்லிம்களின் வாக்குகளை நம்பி ஆர்எல்எஸ்பி கட்சியினர் களம் இறங்கியுள்ளனர். அதேசமயம், வழக்கமாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ஆதரவாளர்களான பிராமணர், பூமிஹார் பிராமணர்கள் மற்றும் ராஜபுத்திரர்களின் வாக்குகளும் தங்களுக்கு சிந்தாமல், சிதறாமல் கிடைக்கும் என்று பாஜக பெரிதும் நம்புகிறது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai