போர் பதற்றத்தை விரும்பாத பஞ்சாப் மக்கள்; மும்முனை போட்டியில் வெல்லப் போவது யார்?

பசுமை சூழலும், நீர் வளமும், கனிம வளமும், வேளாண் சூழலும் நிறைந்த பஞ்சாப் மாநிலம் மொத்தம் 13 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கியது.
போர் பதற்றத்தை விரும்பாத பஞ்சாப் மக்கள்; மும்முனை போட்டியில் வெல்லப் போவது யார்?

பசுமை சூழலும், நீர் வளமும், கனிம வளமும், வேளாண் சூழலும் நிறைந்த பஞ்சாப் மாநிலம் மொத்தம் 13 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. வேளாண் தொழிலும், பல்வேறு தொழில் நிறுவனங்களும் கொண்ட வளமான மாநிலங்களில் பஞ்சாப் முக்கிய இடத்தை வகிக்கிறது. 1999-2000 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி நாட்டிலேயே வறுமைக் கோட்டுக்குகீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள (6.16 %) மாநிலங்களில் பஞ்சாப்பும் ஒன்று.  வேளாண்மையுடன், தொழில் வளம் நிறைந்த இந்த மாநிலத்தில் சீக்கியர்கள் பெரும்பான்மையினத்தவராகவும், ஹிந்துக்கள், முஸ்லிம் மக்கள் கணிசமான  அளவிலும் வசிக்கின்றனர். 
இத்தொகுதிகளில் கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக 2 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் கட்சி 4 தொகுதிகளிலும், தனித்து போட்டியிட்ட ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. நடப்பு 2019ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலில் சிரோமணி அகாலிதளம் மற்றும் பாஜக கூட்டணி அமைத்தும், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்தும் போட்டியிடுகின்றன. 
இந்த முறையும் 13 தொகுதிகளிலும் மும்முனை போட்டி நடைபெற உள்ள நிலையில், வெற்றிக்கனியை பறிப்பதற்காக கட்சியினர் வரிந்துக் கட்டிக் கொண்டு களம் இறங்கியுள்ளனர். 
  கடந்த 1984-ஆம் ஆண்டு, இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு, சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தால் காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியடைந்திருந்த இந்த மாநில மக்கள்,  அதன்பிறகு நடைபெற்ற தேர்தல்களில் மீண்டும் காங்கிரஸுக்கு எதிர்பார்த்த அளவுக்கு ஆதரவளிக்கவில்லை. பெரும்பாலும் பாஜக மற்றும் சிரோமணி அகாலிதளம் கூட்டணி கட்சிகளுக்கே சட்டப்பேரவையிலும், மக்களவைத் தேர்தல்களிலும் வெற்றி வாய்ப்பை அள்ளி வழங்கினர். இந்த வாய்ப்புகளை இவ்விரு கட்சிகளும் முழுமையாக பயன்படுத்திக் கொண்டதாக தெரியவில்லை. 
வெற்று வாய்ஜாலமும், பாகிஸ்தானுக்கு எதிரான போர் குறித்தும், எல்லைப்பகுதிகளில் அவ்வப்போது ஏற்படும் பதற்றமான சூழ்நிலைகளாலும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். பாகிஸ்தான் உடனான போர் குறித்து அவ்வப்போது பதற்றம் ஏற்படுவது போன்ற பல்வேறு பிரச்னைகளால் பாஜக- சிரோமணி அகாலிதளம் கூட்டணி மீது எல்லைப்பகுதியில் வசிக்கும் மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். இதன் விளைவாகவே, கடந்த 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, எல்லைப்பகுதியை சேர்ந்த மக்கள் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளில் வெற்றியை அள்ளித் தந்து, மாநிலத்தில் ஆட்சியமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தனர். 
இந்நிலையில், தற்போது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி, அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக  நடைபெற உள்ளது. இந்த தேர்தலை பொருத்தவரை, சீக்கியர்களுக்கு எதிராக காங்கிரஸார் நடத்திய கலவரம் தொடர்பான முழக்கங்கள் சற்று ஓய்ந்து விட்டன. அதேசமயம், எல்லைப்பகுதியில் அவ்வப்போது ஏற்படும் பதற்றத்தை தணிக்க முயற்சி மேற்கொள்ளாமல், எல்லையோர கிராமங்களில் அவ்வப்போது நடைபெறும் ராணுவத் தாக்குதல் சம்பவங்கள் அங்குள்ள கிராம மக்களை பாதிக்கிறது. 
இதுகுறித்து, குருதாஸ்பூர் தொகுதியில் தமன் கிராமத்தில் வசிக்கும் விவசாயி குர்தீப் சிங் கூறுகையில், எல்லைப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் போர் பதற்றத்தால் இங்கு வசிக்கும் மக்கள்தான் அதிகம் பாதிக்கின்றனர். இதனால், எங்களது, கால்நடைகளை அழைத்துக் கொண்டு வேறு இடங்களுக்கு அகதிகளை போல புலம் பெயர்ந்து செல்ல வேண்டியுள்ளது. நாங்கள் வசிக்கும் வீடுகள் தாக்குதலுக்கு ஆளாவதோடு, பயிர்களையும் காப்பாற்ற முடியாமல் போகிறது. எனவே, போர் பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். உண்மையில், எல்லைப்பகுதியில் வசிக்கும் மக்களின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் தேவையான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்; அப்போதுதான் இங்கு வசிக்கும் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும்.
  இதுவரையிலும், எல்லைப்பகுதி மக்கள் பாதுகாப்புடனும்,  அமைதியுடனும் வாழ்வதற்கான சூழலையும், இப்பகுதியின் வளர்ச்சிக்கான பணிகளை மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள ஆளுங்கட்சியினர் மேற்கொள்ளவில்லை. ராவி ஆற்றைக் கடந்து செல்ல படகு வசதி மட்டுமே உள்ளது. இங்கு பாலம் கட்டித்தருமாறு பலகாலமாக போராடிய போதிலும் அரசு கண்டுக்கொள்ளவில்லை. எனவே, எல்லையோர பகுதிகளில்  வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வதாக உறுதியளிப்பவர்களுக்கே எங்கள் வாக்குகளை செலுத்துவோம்  என்றார் அவர். 
தரண்தரன் மாவட்டம் சக்த்ரா கிராமத்தை சேர்ந்த ஹர்ஜீந்தர் சிங் கூறுகையில், இந்தியா- பாகிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். அமைதியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அரசியல் கட்சிகள் அமைதியான சூழல் ஏற்படுவதை விரும்பாததுதான் எங்கள் பிரச்னை என்றார். 
இந்த தேர்தலில், குரு கிராந்த் சாஹேப் நினைவிடம் இடிக்கப்பட்ட விவகாரத்தை கிளப்பி காங்கிரஸார் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், பாஜக- சிரோமணி அகாலிதளம் கட்சியினர் 1984ஆம் ஆண்டில் சீக்கியர்களுக்கு எதிரான காங்கிரஸார் நடத்திய கலவரத்தை மேற்கோள் காட்டி பிரசாரம் செய்து வருகின்றனர். அதேசமயம், ஆம் ஆத்மி கட்சியினர் கெஜரிவாலின் சாதனைகளையும், ஊழலற்ற ஆட்சி அமைக்கப் போவதாகவும் கூறி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். 
பஞ்சாப் முதல்வரான அமரீந்தர் சிங் தனது பிரசாரத்தின்போது கூறுகையில்: பாலாகோட் வான்வழித் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு பதிலடி தந்ததாக பிரதமர் மோடி கூறிக் கொள்கிறார்.  ஆனால், அந்த தாக்குதல் தொடர்பாக எந்த ஒரு புகைப்படத்தையும் வெளியிடவில்லை. பஞ்சாப் மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை. கடந்த 2014ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவான அலை வீசிய போதிலும், பாஜக-எஸ்ஏடி கூட்டணி கட்சியால் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸும், ஆம்ஆத்மியும் 7  தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக வெறும் 8.7 % வாக்குகளை மட்டுமே கூடுதலாக பெற்றது என்று தெரிவித்துள்ளார் அமரீந்தர் சிங். 


பஞ்சாப் மாநில எல்லையோர விவசாயிகள் யூனியன் துணைத்தலைவர் சுர்ஜித் சிங் பாகூர் கூறுகையில், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ஏறத்தாழ 220 கிராமங்கள் அமைந்துள்ளன. இந்திய-பாகிஸ்தான் எல்லையில் மட்டும் 6 மாவட்டங்கள் உள்ளன. தேசப்பாதுகாப்பு என்பது முக்கியம் என்று பிரதமர் மோடி கூறுகிறார். அதேசமயம், இப்பகுதியில் வசித்து வரும் மக்களும், அவர்களின் குடியிருப்புகள் சேதமடையாமல் பாதுகாப்புடன் இருக்க வேண்டியதும் முக்கியம். இங்கு போர் மூண்டால், முதலில் இங்கு பாதிப்படையப் போவது மக்கள் தான். எனவே, இந்தப்பகுதியில் போர் கூடாது என்று மக்கள் கருதுகிறார்கள். எனவே, எல்லைப்பகுதி மக்கள் நிம்மதியுடன் வாழ, இருநாடுகளிடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். மேலும், வேலைவாய்ப்புகளை பெருக்கி, வேளாண் பண்ணைகளை நடத்துவதில் உள்ள இடர்பாடுகளை களைந்து, கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். 
கடந்த 2014ஆம் ஆண்டு கட்சிவாரியாக  வெற்றி பெற்ற தொகுதிகள்: 
அமிருதசரஸ்,  ஜலந்தர், லூதியானா  --- காங்கிரஸ் 3 தொகுதிகளில் வெற்றி
குருதாஸ்பூர், காதூர் சாஹேப், ஹோசியார்பூர், பதிண்டா,  அனந்த்பூர் சாஹேப், ஃபிரோஸ்பூர்- சிரோன்மணி, பாஜக கூட்டணி 6 தொகுதிகளில் வெற்றி
ஃபதேகார் சாஹேப், ஃபரீத்கோட், சங்ரூர், பாட்டி யாலா-ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளில் வெற்றி

நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதிகள்: 
குருதாஸ்பூர் : இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் சன்னி தியோல், பாலிவுட் திரையுலகின் பிரபல ஹிந்தி திரையுலக நட்சத்திரம் ஆவார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சுனில் ஜகார், ஆம் ஆத்மி சார்பில் பீட்டர் மாசியும் களம் இறங்கியுள்ளனர். 
பதிண்டா :  பாஜக மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதலை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ள அமரீந்தர் சிங் ராஜா வாரிங், தற்போதைய இளைஞர் காங்கிரஸின் தலைவராக இருந்து வருகிறார். மேலும், கித்தர்பாஹா தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும் இவர் இருந்து வருகிறார். இவரை எதிர்த்து, ஆம் ஆத்மி கட்சி சார்பில் பல்ஜிந்தர் கவுர் போட்டியிடுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com