Enable Javscript for better performance
தேர்தல் வானில் திரை நட்சத்திரங்கள்!- Dinamani

சுடச்சுட

  

  தேர்தல் வானில் திரை நட்சத்திரங்கள்!

  By - மணிகண்டன் தியாகராஜன்  |   Published on : 15th May 2019 11:07 AM  |   அ+அ அ-   |    |  

  actors


  இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் கூட திரையில் ஜொலித்த முன்னணி நட்சத்திரங்கள் அரசியலில் களம் இறங்கி வெற்றி வாகை சூடியுள்ளனர்.
  தென் இந்தியாவில் நடிகர்கள், நடிகைகளின் அரசியல் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதேபோல், வட இந்தியாவிலும் கொடிகட்ட பறந்த பல முன்னணி நடிகர்களும், நடிகைகளும் அரசியலில் கோலோச்சி வருகின்றனர். 

  அவர்களில் சிலரைப் பற்றிய குறிப்பு..

  ஹேமமாலினி
  தஞ்சாவூர் மாவட்டம், அம்மன்குடியில் பிறந்தவர் நடிகை ஹேமமாலினி. 1999ஆம் ஆண்டில் பாஜக வேட்பாளராக களம் இறங்கிய மறைந்த  நடிகர் வினோத் கன்னாவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹேமமாலினி, 2004ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார். மாநிலங்களவை  உறுப்பினராகவும் பதவி வகித்துள்ள இவர், தற்சமயம் உத்தரப் பிரேதச மாநிலம், மதுரா மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக உள்ளார். இந்தத் தேர்தலிலும் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார்.

  ஜெயப்ரதா
  ஆந்திரப் பிரதேச மாநிலம், ராஜமுந்திரியில் பிறந்த நடிகை ஜெயப்ரதா, ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமா ராவின் அழைப்பின் பேரில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தவர். பின்னர், சந்திரபாபு நாயுடு அணியில் இணைந்து 1996ஆம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினரானார். சந்திரபாபு நாயுடுவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அக்கட்சியிலிருந்து விலகிய ஜெயப்ரதா, உத்தரப் பிரேதசத்தில் பிரபல கட்சியான சமாஜவாதியில் சேர்ந்தார். 2004 மக்களவைத் தேர்தலில் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். பின்னர், 2009ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார்.சமாஜவாதியின் முன்னாள் பொதுச் செயலர் அமர் சிங்கை ஆதரித்த காரணத்தால், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, அவரை கடந்த 2010ஆம் ஆண்டில் சமாஜவாதி கட்சியைவிட்டு நீக்கியது. கடந்த மார்ச் 26ஆம் தேதி, பாஜகவில் இணைந்து ராம்பூரில் போட்டியிட்டுள்ளார். இவரை எதிர்த்து சமாஜவாதி சார்பில் மூத்த தலைவர் ஆஸம் கான் களமிறக்கப்பட்டுள்ளார்.

  பிரகாஷ் ராஜ்
  கர்நாடக மாநிலம், பெங்களூரில் 1965ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி பிறந்தார். மேடை நாடகக் கலைஞர், திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட திறமைசாலி. முன்னணி நடிகராக இருந்துவரும் பிரகாஷ் ராஜ், கர்நாடகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கெளரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட பிறகு மனம் உடைந்து போனார். அப்போது முதல், பேட்டிகள், சமூக வலைதளங்கள் மூலமாக நேரடியாக அரசியல் கட்சிகளை விமர்சித்து வந்தார். திடீரென 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார்.

  சத்ருகன் சின்ஹா
  பிகார் மாநிலம், பாட்னாவில் 1945ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி பிறந்தவர் சத்ருகன் சின்ஹா. ஹிந்தி திரையுலகில் நடிகராக ஜொலித்து வந்த இவர், பாஜகவில் இணைந்து எம்.பி.யானார். பாட்னா சாஹிப் தொகுதியில் எம்.பி.யாக உள்ள இவர், கட்சியின் மீது கடும் அதிருப்தியில் இருந்ததால், மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். அவருக்கு பாட்னா சாஹிப் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்தது. மாநிலங்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ள சத்ருகன் சின்ஹா, காங்கிரஸில் இணைந்துவிட்டார். தற்போது, பாட்னா சாஹிப் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார். 

  ஊர்மிளா மடோண்கர்
  1995ஆம் ஆண்டு அமீர் கான் நடிப்பில் வெளியான ரங்கீலா திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் ஊர்மிளா. தற்போது, காங்கிரஸ் கட்சியின் சார்பில் வடக்கு மும்பை வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளார். திரைத்துறையில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தேபாது மகிழ்ச்சியாக இருந்தேன். திரைத்துறையில் இருப்பவர்களுக்கு சமூகப் பொறுப்பு இருக்க வேண்டியது அவசியம் என்று எனது தந்தை கூறுவார். அதை நிரூபிக்கும் வகையில் அரசியலில் இறங்கியுள்ளேன் என்று அரசியல் வருகை குறித்து கூறினார் ஊர்மிளா. 

  ரவி கிஷன்
  ரவி கிஷன், போஜ்புரி திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரவி கிஷன். தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 49 வயதாகும் இவர், 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.  தற்போது பாஜகவில் உள்ளார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பல முறை வெற்றி பெற்ற கோரக்பூர் தொகுதியில் போட்டியிட ரவி கிஷனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

  மனோஜ் திவாரி
  போஜ்புரி நடிகரும், பாடகருமான மனோஜ் திவாரி, வடமேற்கு தில்லி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீட்சித்தை எதிர்த்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். சமாஜவாதி கட்சியில் இருந்தபோது, கோரக்பூர் தொகுதியில், தற்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவியர் மனோஜ் திவாரி. பின்னர், பாஜகவில் இணைந்து கடந்த  மக்களவைத் தேர்தலைச் சந்தித்தார். அதில், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரான ஆனந்த் குமாரை 1,44,084 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி எம்.பி.யானார். மீண்டும் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளார் மனோஜ் திவாரி.

  மூன் மூன் சென்
  மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல நடிகை சுசித்ரா சென்னின் மகளான நடிகை மூன் மூன் சென், திரிணமூல் காங்கிரஸ் சார்பில் அஸன்சோல் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் தற்போது நடிகரும், பாடகருமான பாபுல் சுப்ரியோ எம்.பி.யாக உள்ளார்.  அவர் மீண்டும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

  பாபுல் சுப்ரியோ
  மத்திய இணை அமைச்சராக இருக்கும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாபுல் சுப்ரியோ, ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் களமிறங்கியுள்ள ராஜீவ் குமார் பாண்டே, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூன் மூன் சென், சிவசேனையின் அவிஷேக் சிங், காங்கிரஸ் கட்சியின் விஸ்வரூப் மொண்டல் ஆகியோரை இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியாளர்களாக எதிர்கொண்டுள்ளார். 
  இந்தத் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி தேர்தல் முடிந்துவிட்டது. மூன் மூன் சென்னுக்கும் செல்வாக்கு இருப்பதால் யார் வெற்றி பெறுவார்கள் என்பதில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

  நஸ்ரத் ஜஹான்
  மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் 1990ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி பிறந்தவர் நஸ்ரத் ஜஹான் (29).  இளம் வயதிலேயே திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள இவருக்கு, பஸிர்ஹட் மக்களவைத் தொகுதியில் போட்டியிட  அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வாய்ப்பு வழங்கியுள்ளார். 2009ஆம் ஆண்டு முதல் திரிணமூல் காங்கிரஸின் கோட்டையாகத் திகழ்ந்துவரும் இந்தத் தொகுதியில் இவர் வெற்றி பெற அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இவரை எதிர்த்து பல்லவ் சென்குப்தா (இந்திய கம்யூனிஸ்ட்), சயந்தன் பாஸு  (பாஜக) உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

  நிகில் கெளடா
  முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவெ கெளடாவின் பேரன் நிகில் கௌடா. கர்நாடக முதல்வர் குமாரசாமியின் புதல்வரான இவர், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர், அரசியலுக்கு வரவில்லை என்றால்தான் ஆச்சரியம். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பில் இந்த முறை மாண்டியா தொகுதியில் போட்டியிடும் நிகில் கெளடாவை எதிர்த்து, சுயேச்சை வேட்பாளராக நடிகை சுமலதா போட்டியிட்டுள்ளார். கடந்த 2 மக்களவைத் தேர்தலிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வசமே இந்தத் தொகுதி உள்ளது. கடும் போட்டி நிலவும் என்பதால் இங்கு யார் வெற்றி பெறுவார் என்பதை கர்நாடக அரசியல்வாதிகள் உற்று நோக்குகியுள்ளனர்.

  சுமலதா
  பிரபல நடிகர் அம்பரீஷின் மனைவியான சுமலதா சென்னையில் பிறந்தவர். தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் நிகில் கெளடாவை எதிர்த்து மாண்டியாவில் சுயேச்சையாக களம் கண்டுள்ளார். இந்த தொகுதியில் ஏப்ரல் 18ஆம் வாக்குப் பதிவு முடிந்தது.

  இன்னோசன்ட்
  கேரள திரையுலகில் நகைச்சுவை நடிகராக ஜொலித்த இன்னோசன்ட், சாலக்குடி மக்களவைத் தொகுதியில் 2014 இல்  சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு இடது ஜனநாயக முன்னணி ஆதரவளித்தது. 

  ஸ்மிருதி இரானி
  தொலைக்காட்சித் தொடர் நடிகையாக இருந்த ஸ்மிருதி இரானி முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மத்திய அமைச்சர் பதவியை வகித்துவரும் ஸ்மிருதி,  உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் மீண்டும் போட்டியிட்டுள்ளார். 

  சன்னி தியோல்
  பிரபல ஹிந்தி நடிகரான சன்னி தியோல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி பாஜகவில் இணைந்தார். அவருக்கு உடனடியாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு வழங்கியது. பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். (குருதாஸ்பூரில் பிரபல நடிகர் வினோத் கன்னா எம்.பி.யாக 2 முறை பதவி வகித்தார்). சன்னி தியோலை  எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சுனில் குமார் ஜாக்கர் போட்டியிட்டுள்ளார். 19ஆம் தேதி இத்தொகுதியில் தேர்தல்நடைபெறவுள்ளது.

  முன்னாள் எம்.பி.க்கள்

  வைஜயந்திமாலா
  சென்னை திருவல்லிக்கேணியில் கடந்த 1936ஆம் ஆண்டு ஆஸக்டு 13ஆம் தேதி பிறந்தார் வைஜயந்திமாலா.  இந்திய சினிமாவின் முதல் லேடி சூப்பர்ஸ்டார் என்றழைக்கப்பட்டவர். 1949ஆம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் வெளிவந்த வாழ்க்கை திரைப்படத்தில் அறிமுகமானவர். பரதநாட்டியக் கலையில் தேர்ந்தவரான வைஜயந்திமாலா, இந்திய சினிமாவின் நடன முறையையே மாற்றியமைத்தார் என்று கூறலாம். 1984ஆம் ஆண்டில் காங்கிரஸ் சார்பில் தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளராக களம் இறங்கிய வைஜயந்தி மாலா, 48,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1989ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட அவர், திமுக வேட்பாளர் ஆலடி  அருணாவை வீழ்த்தி மீண்டும் எம்.பி.யானர். 1993இல் மாநிலங்களவை உறுப்பினராகவும்  பரிந்துரைக்கப்பட்டார். 1999ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

  ராமராஜன்
  மக்கள் நாயகன் என்றழைக்கப்பட்டவர் ராமராஜன். கரகாட்டக்காரன், வில்லுப்பாட்டுக்காரன் என  இவர் நடித்த திரைப்படங்களெல்லாம் வெற்றி கண்டன. ரஜினி, கமலுக்கு நிகராக திரைத்துறையில் வசூல் மன்னராகத் திகழ்ந்துவந்தார். மதுரை அருகே உள்ள மேலூரில் 1958ஆம் ஆண்டு பிறந்த ராமராஜன், திரைத்துறையில் கொடி கட்டி பறந்த காலத்தில் அரசியலில் இணைந்தார். அதிமுக சார்பில் 1998ஆம் ஆண்டில் திருச்செந்தூர் (இப்போது தூத்துக்குடி) மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யானார். தற்போது, சினிமா அரசியல் இரண்டையும் தவிர்த்துவிட்டார்.

  அமிதாப் பச்சன்
  ஹிந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். கடந்த 1984ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேச மாநிலம், அலாகாபாத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

  கோவிந்தா
  ஹிந்தி நடிகரான கோவிந்தா, 1980 காலகட்டத்தில் பல திரைப்படங்களில் நடித்து முத்திரை பதித்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் வடக்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டு 5,59,763 வாக்குகள் பெற்று வென்றார்.

  ராஜேஷ் கன்னா
  ஹிந்தி திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா. ஒரு காலத்தில் இவர் நடிப்பில் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்த 15 படங்கள் மிகப் வெற்றியை அடைந்தன.
  150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். காங்கிரஸ் சார்பில் 1991ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை எதிர்த்து போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் 1,589 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியைத் தழுவினார். வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார் அளித்தார். அந்தத் தொகுதிக்கு 1992ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், பாஜக சார்பில் போட்டியிட்ட சத்ருகன் சின்ஹாவை 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி எம்.பி.ஆனார். பதவிக் காலம் முடிந்த பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும், காங்கிரஸ் கட்சிக்காக 2012ஆம் ஆண்டு வரை பிரசாரம் செய்தார். அதே ஆண்டு ஜூலை 18ஆம் தேதி அவர் காலமானார்.

  வினோத் கன்னா
   பஞ்சாபி ஹிந்து குடும்பத்தில் பிறந்தவரான வினோத் கன்னா, பாஜகவில் 1997ஆம் ஆண்டில் இணைந்தார். பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதியில் அதற்கு அடுத்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
  1999ஆம் ஆண்டில் அதே தொகுதியில் மீண்டும் ஜெயித்தார். 2002ஆம் ஆண்டு, மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராகவும், பின்னர் வெளியுறவுத் துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தார். குருதாஸ்பூரில் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மக்களவை அலுவல்களில் பங்கேற்றார். 2009 தேர்தலில் தோல்வியைத் தழுவிய அவர், 2014 பொதுத் தேர்தலில் மீண்டும் குருதாஸ்பூர் தொகுதியில் வென்றார்.
  2017ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி மும்பையில் அவர் காலமானார். திரையில் ஜொலித்ததை போன்று தன் வாழ்நாள் காலம் முடியும் வரை அரசியலிலும் ஜொலித்தார்.

  சுனில் தத்
  நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், அரசியல்வாதி என பன்முகத் திறமை கொண்டவர் சுனில் தத். 1984ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்த இவர், மும்பை வடமேற்கு தொகுதியில் 5 முறை எம்.பி.யாக இருந்து சாதனை புரிந்துள்ளார். 1984, 1989, 1991, 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சுனில் தத் வெற்றிபெற்றார்.
  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்த இவர், 2005ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானார்.

  ராஜ் பப்பர்
  உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் பிறந்த ராஜ்பப்பர், 3 முறை மக்களவைத் தொகுதி எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹிந்தி, பஞ்சாபி மொழி திரைப்படங்களில் நடித்துள்ள இவர், 1989ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளம் கட்சியில் இணைந்து அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார். சமாஜவாதி கட்சியில் இருந்த அவர், பின்னர் காங்கிரஸில் இணைந்தார். 2014 தேர்தலில் காஜியாபாத் தொகுதியில் போட்டியிட்டு வி.கே.சிங்கிடம் தோல்வி அடைந்தார். தற்போது உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவராக உள்ளார்.

  பரேஷ் ராவல்
  ஹிந்தி திரையுலகில் நகைச்சுவை நடிகரான இவர், பாஜக சார்பில் 2014 மக்களவைத் தேர்தலில்  குஜராத் மாநிலம், ஆமதாபாத் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு 6,33,582 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

  தர்மேந்திரா
  நடிகர் தர்மேந்திரா, பாஜக சார்பில் ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் மக்களவைத் தொகுதியில் கடந்த 2004ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2012ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருதை பெற்றார்.

  ஜே.கே.ரித்தீஷ்
  இலங்கையில் கண்டி நகரில் பிறந்த ஜே.கே.ரித்தீஷ், நாயகன், எல்கேஜி, பெண் சிங்கம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதிமுகவிலும், திமுகவிலும் உறுப்பினராக இருந்துள்ளார். 2009 பொதுத் தேர்தலில் திமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

  கிரண் கெர்
  முன்னணி ஹிந்தி நடிகர் அனுபம் கெரின் மனைவியான கிரண் கெர், சண்டீகர் மக்களவைத் தொகுதியில் 2014 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஹிந்தி, பஞ்சாபி மொழி திரைப்படங்ளில் இவர் நடித்துள்ளார்.

  நிதீஷ் பரத்வாஜ்
  ஹிந்தி நடிகர் நிதீஷ் பரத்வாஜ், ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் 1996இல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai