இரு தொகுதிகள்... ஒரு தலைவர்...

தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி, கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இரு தொகுதிகள்... ஒரு தலைவர்...

தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி, கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் ஏற்கெனவே அமேதி தொகுதியின் எம்.பி.யாக இருந்து வரும் நிலையில், தற்போது வயநாட்டிலும் போட்டியிடுவது தோல்வி பயத்தின் காரணமாகவே என்று பாஜகவினர் விமர்சிக்க, கடந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியினர் பதிலடி கொடுத்தனர். 
உண்மையில், ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் நிற்பதில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படியும், மரபு ரீதியாகவும் எந்தத் தவறையும் காண முடியாது. 1951-இல் அமலுக்கு வந்த மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, ஒரு வேட்பாளர்  அதிகபட்சம் மூன்று தொகுதிகளில் போட்டியிடலாம். பின்னர், 1996-இல் அதிகபட்சம் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும் என்று சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. 
நமது நாட்டைப் பொருத்தவரை, பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறை தான் இங்கும் பின்பற்றப்படுகிறது. அதன்படி, பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சியமைக்க முடியும்.  குறிப்பிடட்ட நபர் வெற்றி பெற்றால் அவரது ஆடட்சி என்னும், அதிபர் முறை இந்தியாவில் இல்லை. ஆனால், யதார்த்தத்தில் கட்சியின் தலைவரோ அல்லது முக்கியப் பிரமுகர்களோ தான் பிரதமராக, முதல்வராக, அமைச்சர்களாகப் பதவியேற்கிறார்கள். அப்படியிருக்கையில், அவர்களது வெற்றியை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. அதனால், ஒரு தொகுதியில் தோல்வியடைந்தாலும், மறு தொகுதியில் வெற்றி பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கை தான், அரசியல் தலைவர்கள் இரு தொகுதிகளில் நிற்பதற்குக் காரணம். அது மட்டுமின்றி குறிப்பிட்ட தொகுதியில் வெற்றி வாய்ப்பு குறித்த நம்பிக்கை, அந்தத் தொகுதி மீதான வசீகரம், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கான யுக்தி, குறிப்பிட்ட பிரதேசத்திலுள்ள ஆதரவாளர்களைத் திருப்திப்படுத்துவது ஆகியவையும் இரண்டாவது தொகுதியைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணிகளாக அமைகின்றன. 
காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக முன்னிறுத்தப்படும் வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிடுவது இது முதல் முறையல்ல.
முன்னாள் பிரதமரும், ராகுல் காந்தியின் பாட்டியுமான இந்திரா காந்தி, நெருக்கடி நிலைக்குப் பிறகு 1977-இல் நடைபெற்ற தேர்தலில் தனது சொந்த தொகுதியான உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் படுதோல்வியடைந்தார். அடுத்து 1980-இல் மக்களவைத் தேர்தல் நடந்தபோது ரேபரேலி தொகுதியுடன், தற்போது தெலங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் தொகுதியிலும் போட்டியிட்டார்.  இரண்டு தொகுதிகளிலும் இந்திரா காந்தி வெற்றி பெற்றார்.
 இந்திராவின் மருமகளும், ராகுல் காந்தியின் தாயுமான சோனியா காந்தி, 1999-இல் நடந்த மக்களவைத் தேர்தலில் அமேதியிலும், கர்நாடக மாநிலம் பெல்லாரியிலும் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பின்னர், பெல்லாரி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.
தற்போதைய ஆளும்கட்சியான பாஜகவும் இதில் விதிவிலக்கல்ல. 1952-இல் பாரதிய ஜன சங்கம் தொடங்கிய பிறகு, 1957-இல் மக்களவைக்கு நடந்த இரண்டாவது பொதுத்தேர்தலில், அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட அடல் பிகாரி வாஜ்பாய் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்ராம்பூர், மதுரா, லக்னெள ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிட்டு, பல்ராம்பூர் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார். 
அடுத்து 1962-இல் தேர்தலில் பல்ராம்பூர், லக்னெள ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார். பின்னர், 1991 தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள, மத்தியப் பிரதேசத்தின் விதிஷா ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற வாஜ்பாய், 1996 தேர்தலில் லக்னெளவுடன் குஜராத் மாநிலம் காந்திநகரிலும் போட்டியிட்டு மீண்டும் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இவற்றில் முறையே விதிஷா, காந்திநகர் தொகுதிகளின் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். வாஜ்பாயின் நண்பரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி, 1991 தேர்தலில் காந்திநகர், புதுதில்லி  தொகுதிகளில் போட்டியிட்டு, இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பின்னர், புதுதில்லி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.
காங்கிரஸ், பாஜகவைத் தவிர பிற கட்சித் தலைவர்களும் இவ்வாறு இரு தொகுதிகளில் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, 1989 தேர்தலில் பிஜ்னோர், ஹரித்துவார் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு, பிஜ்னோரில் மட்டும் வெற்றி பெற்றார்.
1991 தேர்தலில் இந்த இரு தொகுதிகளுடன், புலந்த்ஷாஹர் தொகுதியிலும் போட்டியிட்ட போதும் மூன்றிலும் தோல்வியடைந்தார். அவரது வழிகாட்டியும், அக்கட்சியின் நிறுவனருமான கான்ஷிராம், 1989 தேர்தலில் அமேதி, கிழக்கு தில்லி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் தோற்றார். 1991-இல் உத்தரப் பிரதேசத்தின் இடாவா தொகுதியில் வென்ற அவர், கிழக்கு தில்லியில் தோற்றார். அதேபோல, 1996 தேர்தலில் பஞ்சாபிலுள்ள ஹோசியாபூர் தொகுதியில் வென்ற அவர், உத்தரப் பிரதேசத்தின் புல்பர் தொகுதியில் தோல்வியடைந்தார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் லாலு பிரசாத் யாதவ், 2004 தேர்தலில் பிகாரிலுள்ள சாப்ரா, மாதேபுரா ஆகிய தொகுதிகளில் வென்று, மாதேபுரா எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார். அப்போது, ரயில்வே அமைச்சராகவும் பொறுப்பேற்றார். 2009 தேர்தலில் சாப்ரா தொகுதியின் பெயர், மறுசீரமைப்பின் காரணமாக சரண் என்று மாறியது. அந்தத் தொகுதியிலும், பாடலிபுத்திரத்திலும் போட்டியிட்ட லாலு பிரசாத், இரு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார்.
உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர்களும், சமாஜவாதி கட்சியின் தலைவர்களுமான முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோரும் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களே. 1999 தேர்தலில் சம்பல், கனெளஜ் தொகுதிகளிலும், 2014 தேர்தலில் மைன்புரி, ஆஸம்கர் தொகுதிகளிலும் போட்டியிட்ட முலாயம் சிங், இரு  தொகுதிகளிலும்  வெற்றி பெற்றார். 2009 தேர்தலில் கனெளஜ், ஃபிரோஸாபாத் தொகுதிகளில் போட்டியிட்ட அகிலேஷ் யாதவும் இரு தொகுதிகளிலும் வென்றார்.
எனினும், இந்த வரிசைக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்கு ஒன்றில், ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடலாம் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை ஆதரித்துள்ள தேர்தல் ஆணையம், இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் வெற்றி பெறும் வேட்பாளர், ஒரு தொகுதியின் பதவியை ராஜிநாமா செய்து விடுகிறார். இதனால் இடைத்தேர்தலுக்கு அதிகமாக செலவாகிறது என்று தெரிவித்துள்ளது. அந்த மனுவின் நிலை குறித்து இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com