கிழக்கு உத்தரப் பிரதேசம்: தொடருமா பாஜக ஆதிக்கம்?

கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கிழக்கு உத்தரப் பிரதேசத்திலுள்ள 13 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியிருந்தது.
கிழக்கு உத்தரப் பிரதேசம்: தொடருமா பாஜக ஆதிக்கம்?

கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கிழக்கு உத்தரப் பிரதேசத்திலுள்ள 13 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியிருந்தது. ஆனால், அதே நிலை தற்போதும் தொடருமா என்பது மிகப் பெரும் கேள்விக்குறி.

உலகின் மிகப் பெரும் ஜனநாயகத் திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் நாட்டை ஆளப்போவது யார் என்பது தெரிந்துவிடும். 483 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடந்துமுடிந்துள்ள நிலையில், மீதமிருக்கும் 59 தொகுதிகளில் வரும் 19-ஆம் தேதி இறுதிக்கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முக்கியமாக உத்தரப் பிரதேசத்திலுள்ள வாராணசி உள்பட 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்குப் பெரும் சவாலாக விளங்கி வருவது சமாஜவாதி-பகுஜன் சமாஜ்-ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சிகளின் மகா கூட்டணியே. 
அக்கட்சிகள் காங்கிரஸை கூட்டுசேர்த்துக்கொள்ளாததால், மாநிலத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. 
இன்னும் சொல்லப்போனால், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸை போட்டியாளராகவே பாஜக கருதவில்லை என்றே தோன்றுகிறது. ஆனால், சமாஜவாதி-பகுஜன் சமாஜ்-ராஷ்ட்ரீய லோக் தளம் கூட்டணி சவாலாக விளங்கிவருகிறது.
இதையடுத்து, கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள தொகுதிகளில் ஜாதிய அடிப்படையிலான வாக்குகளை பாஜக குறிவைக்கத் தொடங்கியுள்ளது.
மகா கூட்டணியின் ஸ்திரத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பிவரும் பிரதமர் மோடி, தனது பேச்சுகளின் மூலம் தலித் மக்களையும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் கவர பெரிதும் முயன்று வருகிறார்.
வரும் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள 13 தொகுதிகளையும் கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது பாஜக கைப்பற்றியிருந்தது. 
ஆனால், கடந்த 2018-ஆம்ஆண்டு கோரக்பூர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுடன் சமாஜவாதி வெற்றிபெற்றது. 
இதனால், மகா கூட்டணியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அத்தொகுதிகளில் 8 எம்.பி.க்களை மீண்டும் களமிறக்கியுள்ள பாஜக, 5 எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கவில்லை. அதே வேளையில், சமாஜவாதி 8 வேட்பாளர்களையும், பகுஜன் சமாஜ்  5 வேட்பாளர்களையும் மகா கூட்டணி களமிறக்கியுள்ளது. 
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், 13 தொகுதிகளில் 8இல் பாஜகவின் கை ஓங்கியிருக்கும் என்று தெரிகிறது. 
அதே வேளையில், மற்ற 5 தொகுதிகளில் மகா கூட்டணி எதிர்பார்க்கும் ஜாதியரீதியிலான வாக்குகள் அதிகம் காணப்படுகின்றன. 
இத்தொகுதிகளுக்கான போட்டியில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய  அமைச்சர்கள் மனோஜ் சின்ஹா, அனுப்ரியா படேல் ஆகியோரும் களத்தில் உள்ளனர். 

வாராணசி
வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுவார் என்று பாஜக ஆரம்பத்திலேயே அறிவித்துவிட்டது. இதையடுத்து, காங்கிரஸ் சார்பிலும், மகா கூட்டணி சார்பிலும் மோடியை எதிர்த்து யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் எழுந்தது. மோடியை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளரை மகா கூட்டணி முதலில் அறிவிக்க, பிஎஸ்எஃப் முன்னாள் வீரர் தேஜ் பகதூர் யாதவ் சுயேச்சையாகப் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து, தனது வேட்பாளரைத் திரும்பப்பெற்ற மகா கூட்டணி, தேஜ் பகதூர் யாதவுக்கு ஆதரவைத் தெரிவித்தது. ஆனால், அவரது இரு வேட்பு மனுக்களில் முரண்பாடான தகவல்கள் இருப்பதாகக் கூறி, அவரது வேட்புமனுவைத் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.இதைத் தொடர்ந்து, தற்போது சமாஜவாதி கட்சி சார்பில் ஷாலினி யாதவ் களமிறக்கப்பட்டுள்ளார்.
மகா கூட்டணியின் நிலை இவ்வாறு இருந்த நேரத்தில், மோடியை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்காவை வேட்பாளரைக் களமிறக்க அக்கட்சி முடிவுசெய்திருப்பதாகச் செய்திகள் பரவின. பிரியங்காவும் பிரசாரங்களில் அவ்வப்போது இதுதொடர்பாகப் பேசி பரபரப்பை ஏற்படடுத்தினார். ஆனால், ஊகங்கள் அனைத்தையும் பொய்யாக்கி சட்டப்பேரவை உறுப்பினர் அஜய் ராயை வாராணசி தொகுதியின் வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது.
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி, 3.73 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரைத் தோற்கடித்து வெற்றிபெறுவது என்பது மற்ற வேட்பாளர்களுக்குச் சற்று சிரமமான காரியமே.

குஷிநகர்
புத்தர் நிர்வாணம் எய்திய பகுதியான குஷிநகரில் பாஜக சார்பில் விஜய் துபே களமிறங்கியுள்ளார். 
தற்போதைய எம்.பி. ராஜேஷ் பாண்டேவை பாஜக ஓரங்கட்டியுள்ளது. காங்கிரஸ் சார்பில் குன்வர் ஆர்பிஎன் சிங் களத்தில் உள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டுத் தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் இவரே போட்டியிட்டார். அதே வேளையில், முஸ்லிம், தலித், பிற்படுத்தப்பட்டோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நாதுனி பிரசாதை மகா கூட்டணி களமிறக்கியுள்ளது.

மிர்சாபூர்
விந்தியவாசினி துர்கை கோயிலுக்குப் புகழ் பெற்ற பூமியான மிர்சாபூரில் பாஜக, மகா கூட்டணி, காங்கிரஸ் இடையே மும்முனைப்போட்டி. மத்திய அமைச்சரும், மதச்சார்பற்ற அப்னா தளம் தலைவருமான அனுப்ரியா படேல் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் மீண்டும் வெற்றிபெற அவர் முனைப்புடன் உள்ளார்.  அதே வேளையில், அவரைத் தோற்கடிக்கும் தீவிரத்தில், மாநில முன்னாள் முதல்வர் கமலாபதி திரிபாதியின் பேரன் லலிதேஷ்பதி திரிபாதியை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. மகா கூட்டணி சார்பில் ராம்சரித்ர நிஷாத் போட்டியிடுகிறார்.

சந்தெளலி
வாராணசிக்கு அருகிலுள்ள சந்தெளலி தொகுதியில்  மாநில பாஜக தலைவரும், எம்.பி.யுமான மகேந்திர நாத் பாண்டே மீண்டும் போட்டியிடுகிறார். 
அவரை எதிர்த்து புதுமுகமான சஞ்சய் செளஹானை மகா கூட்டணி களமிறக்கியுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காஜிபூர் தொகுதியில் சமாஜவாதி கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த சிவ்கன்யா குஷ்வாஹா, இந்த முறை காங்கிரஸ் கட்சி சார்பில் சந்தெளலியில் போட்டியிடுகிறார்.

தேவரியா
தற்போதைய எம்.பி. கல்ராஜ் மிஸ்ராவுக்கு வாய்ப்பு மறுத்துவிட்டு, மாநில பாஜக முன்னாள் தலைவர் ரமாபதிராம் திரிபாதிக்கு அக்கட்சி வாய்ப்பளித்துள்ளது.
 இத்தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வினோத் ஜெய்ஸ்வால் போட்டியிடுகிறார். 
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட நியாஸ் அகமது தற்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

கோரக்பூர்
கோரக்பூர் தொகுதியில் கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முறை தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத் எம்.பி.யாக இருந்தார்.  
முதல்வராகப் பதவி ஏற்பதற்காக வேண்டி, தனது எம்.பி. பதவியைக் கடந்த 2017-ஆம் ஆண்டு ராஜிநாமா செய்தார். அதையடுத்து, இத்தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சமாஜவாதி கட்சி வெற்றிபெற்றது. இதனால், யோகி ஆதித்யநாத்துக்குப் பெரும் கெளரவப் பிரச்னையாக இத்தொகுதி திகழ்கிறது. 
பாஜக சார்பில் ரவி கிஷனும், சமாஜவாதி கட்சியின் ராம்புவால் நிஷாதும், காங்கிரஸ் சார்பில் மதுசூதன் திரிபாதியும் களத்தில் உள்ளனர்.

கோசி
தனது கூட்டணிக் கட்சியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சிக்கு இத்தொகுதியை பாஜக முதலில் ஒதுக்கியிருந்தது.
ஆனால், பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவர் ஓ.பி. ராஜ்பர் அறிவித்ததையடுத்து, கோசி தொகுதியின் தற்போதைய எம்.பி. ஹரிநாராயண் ராஜ்பரை பாஜக நிறுத்தியுள்ளது.
மகா கூட்டணி சார்பில் அதுல் ராயும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.பி. லால் கிருஷ்ண செளஹானும் போட்டியிடுகின்றனர்.

காஜிபூர்
பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா, மகா கூட்டணியில் அங்கம் வகிக்கும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அஃப்சல் அன்சாரியின் சவாலை எதிர்கொண்டுள்ளார். இத்தொகுதியில் பெரும்பான்மை வகிக்கும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளைக் கவரும் நோக்கில், அஜீத் பிரதாப் குஷ்வாஹாவை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 32,000 வாக்குகள் வித்தியாசத்திலேயே மனோஜ் சின்ஹா வெற்றி பெற்றிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com