இறுதிக்கட்ட தேர்தல் களத்தில் இவர்கள்...

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த மாதம் 11-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்த நிலையில், ஏழாவது
இறுதிக்கட்ட தேர்தல் களத்தில் இவர்கள்...


நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த மாதம் 11-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்த நிலையில், ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் மே 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் களத்திலிருக்கும் முக்கிய வேட்பாளர்கள் குறித்த விவரம்...

ரவிசங்கர் பிரசாத்
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பிகார் மாநிலம், பாட்னா சாகிப் மக்களவைத் தொகுதியில் களத்தில் உள்ளார். இதுவரை மாநிலங்களவை உறுப்பினராகவே தேர்வாகி வந்த இவர், முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் களமிறங்கியுள்ளார். பாட்னா சாகிப் தொகுதியில் பாஜக எம்.பி.யாக இருந்து வந்த சத்ருகன் சின்ஹா, கட்சி மேலிடத்தை கடுமையாக விமர்சித்து வந்தார். இதனால் அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்காத பாஜக, ரவிசங்கர் பிரசாத்தை களமிறக்கியது. இதைத் தொடர்ந்து, பாஜகவிலிருந்து விலகிய சத்ருகன் சின்ஹா, காங்கிரஸில் இணைந்து அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் கடந்த இரு தேர்தல்களில் இத்தொகுதியில் வெற்றி பெற்றவர் என்பதால் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடும் சவாலாக இருப்பார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். உச்சநீதிமன்ற வழக்குரைஞரான ரவிசங்கர் பிரசாத், உயர் வகுப்பான காயஸ்த் சமூகத்தைச் சேர்ந்தவர். சத்ருகனும் இதே சமூகத்தைச் சேர்ந்தவர்தான். இந்த தேர்தல் வெற்றியானது, இருவருக்கும் முக்கியமானதாகும்.

மனோஜ் சின்ஹா
உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை தோற்கடிக்கும் முனைப்பில் சமாஜவாதி-பகுஜன்சமாஜ்-ராஷ்ட்ரீய லோக் தளம் அடங்கிய மகா கூட்டணி களமிறங்கியுள்ள நிலையில், காஜிப்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் மீண்டும் போட்டியிடும் மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹாவுக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்  காஜிப்பூர் தொகுதியில் வெறும் 32, 000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனோஜ் சின்ஹா, அப்போது வாக்குறுதி அளித்த திட்டங்களில், தரமான சாலை வசதி, நால்வழிச் சாலை, நவீன ரயில் நிலையம், விளையாட்டு அரங்கம் உள்பட சுமார் 90 சதவீத வளர்ச்சித் திட்டங்களை தொகுதியில் நிறைவேற்றியுள்ளார். இந்த வளர்ச்சித் திட்டங்களே அவருக்கு வெற்றி வாய்ப்பை தரும் என்று கருதினாலும், ஜாதி வாக்குகளை கணக்கில் கொண்டு,  மனோஜ் சின்ஹாவுக்கு எதிராக,  பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அஃப்சல் அன்சாரியை மகா கூட்டணி களமிறக்கியுள்ளது . இந்த தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளைக் கவரும் நோக்கில், அஜீத் பிரதாப் குஷ்வாஹாவை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது.

காஜிப்பூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் உள்ள 18. 51 லட்சம் வாக்காளர்களில், யாதவ் சமூகத்தில் 3. 60 வாக்காளர்களும், தலித் சமூகத்தில் 2. 60 வாக்காளர்களும், 1. 60 லட்சம் முஸ்லிம் வாக்காளர்களும் உள்ளனர். 
அதே நேரத்தில் மனோஜ் சின்ஹாவின் "பூமிகார்' சமூகத்தில் அந்த தொகுதியில் வெறும் 55, 000 வாக்காளர்களே உள்ளனர். இதையெல்லாம் கணக்கில் கொண்டே, காங்கிரஸூம், மகா கூட்டணியும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். 

அஸ்வனி சௌபே
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணையமைச்சர் அஸ்வனி சௌபே, பிகார் மாநிலம், பக்ஸார் மக்களவைத் தொகுதியில் மீண்டும் களமிறங்கியுள்ளார். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான சௌபே, மோடியின் தீவிர ஆதரவாளர். ஹிந்துத்துவ அரசியலை தீவிரமாக முன்னெடுப்பவர். இவர், பிகாரில் 5 முறை எம்எல்ஏ-வாக பதவி வகித்திருக்கிறார். சௌபேக்கு எதிராக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் ஜகதானந்த் சிங் களத்தில் உள்ளார். இவர், ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர். இத்தொகுதியில் ஜாதி அரசியல் முக்கிய பங்கு வகிப்பதால், ராஜபுத்திர சமூக வாக்குகள் ஆர்ஜேடி வேட்பாளருக்கே செல்லும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். பக்ஸார் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டப் பேரவை தொகுதிகள் அடங்கியுள்ளன. இதில், 3 பேரவை தொகுதிகள் ஐக்கிய ஜனதா தளம் வசம் உள்ளது. பாஜக, காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகிய கட்சிகள் தலா ஓரிடத்தை கொண்டுள்ளன.

ஆர்.கே.சிங்
ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து அரசியலில் நுழைந்த ஆர்.கே.சிங், மோடி தலைமையிலான அமைச்சரவையில் மின்சாரத் துறை அமைச்சராக உள்ளார்.

மத்திய உள்துறைச் செயலராகவும் பதவி வகித்தவர். ஆரா மக்களவைத் தொகுதியில் மீண்டும் களமிறங்கியுள்ள இவருக்கு, இம்முறை கடும் சவால் காத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஆர்.கே.சிங்கை எதிர்த்து, ஆர்ஜேடி கட்சியின் ஆதரவு பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சி வேட்பாளர் ராஜு யாதவ் களத்தில் உள்ளார். யாதவர்கள் அதிகமுள்ள இத்தொகுதியில், கடந்த தேர்தலில் மோடி அலையால் ஆர்.கே.சிங் வெற்றி பெற்றுவிட்டார். ஆனால், இந்த முறை மோடி அலை இல்லை. எனவே, ராஜு யாதவ் வெற்றி பெறுவது உறுதி என்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.

ராம் கிருபால் யாதவ்
பிகார் மாநிலத்தில் உள்ள பாடலிபுத்திரம் மக்களவைத் தொகுதியில், மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் ராம் கிருபால் யாதவ் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, முன்னாள் முதல்வர் லாலு பிரசாதின் மகள் மிசா பாரதி போட்டியிடுகிறார். 

ஒரு காலத்தில் லாலு பிரசாதுக்கு நெருக்கமானவராக இருந்தவர் ராம் கிருபால் யாதவ். மிசா பாரதிக்கு வலுவான போட்டியாளராக ராம் கிருபால் யாதவ் இருப்பதால், பாடலிபுத்திரம் தொகுதி பரபரப்புடன் காணப்படுகிறது. 

கடந்த 2004-இல் பாட்னா சாகிப் தொகுதியில் பாஜக வேட்பாளர் சி.பி.தாக்குரை தோற்கடித்தவர் ராம்கிருபால் யாதவ். 2009-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாடலிபுத்திரம் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், அந்தத் தொகுதியில் லாலு பிரசாத் போட்டியிட விரும்பியதால், அவருக்கு அந்தத் தொகுதியை விட்டுக் கொடுத்தார்.

2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், பாடலிபுத்திரம் தொகுதியில் போட்டியிட விரும்பினார் ராம்கிருபால் யாதவ். ஆனால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தியில் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அந்த தேர்தலில், தாம் விரும்பிய பாடலிபுத்திரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார் ராம் கிருபால் யாதவ். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் மிசா பாரதி. அந்த தேர்தலில் மிசா பாரதியை தோற்கடித்து எம்.பி.யானார் ராம் கிருபால் யாதவ். கூடவே, யாதவுக்கு மத்திய இணையமைச்சர் பதவியும் கிடைத்தது.

மீராகுமார்
நாட்டின் முக்கிய தலித் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் துணை பிரதமருமான பாபு ஜகஜீவன் ராமின் சொந்த மக்களவைத் தொகுதி, பிகார் மாநிலம் சாசாராம். 1952-இல் நடந்த முதல் மக்களவைத் தேர்தல் முதல் 1985-இல் இறக்கும் வரையிலும், அவர் எந்தக் கட்சியில் இருந்தாலும் சாசாராம் தொகுதியில் தொடர்ந்து வெற்றி கண்டார். தற்போது அவரது மகளும், 15-ஆவது மக்களவைத் தலைவராக இருந்தவருமான மீரா குமார், இங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். முன்னாள் இந்திய அயலகப் பணிஅதிகாரியான மீரா குமார், 1985 முதல் அரசியலில் ஈடுபட்டு 5 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். 2004 முதல் பத்தாண்டுகளுக்கு சாசாராம் தொகுதியின் எம்.பி.யாக இருந்த அவர், 2014 தேர்தலில் வீசிய மோடி அலை காரணமாக பாஜகவின் சேடி பாஸ்வானிடம் தோல்வியடைந்தார். தற்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார், மீரா குமார். கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளை நம்பி சேடி  பாஸ்வான் மீண்டும் களமிறங்கியுள்ளார். மத்திய அரசுக்கு எதிரான வாக்குகளும், தனது குடும்பத்தின் செல்வாக்கும் "கை' கொடுக்கும் என்று நம்புகிறார் மீரா குமார். இது தாழ்த்தப்பட்டோருக்கான தனித் தொகுதியாகும். சில நாள்களுக்கு முன்னால் இங்கு பிரசாரம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, ஜகஜீவன் ராமின் கடைசி காலத்தில் காங்கிரஸ் கட்சி அவரை அவமதித்ததாகக் கூறி, கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஹர்சிம்ரத் கெளர்
கடந்த 2009 முதல் பஞ்சாப் மாநிலம் பதிந்தா மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக இருக்கும் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல், தற்போது மூன்றாவது முறையாக அதே தொகுதியில் சிரோண்மணி அகாலி தளம் சார்பில் போட்டியிடுகிறார். 52 வயதான இவர், பஞ்சாப் மாநில முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலின் மனைவி. 1984-இல் நடந்த சீக்கியர் படுகொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஒரு அரசியல் அமைப்பை நடத்தி வருகிறார். இந்தத் தொகுதியில் நிறுவப்பட்டுள்ள பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகம், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது உள்ளிட்டவை இவரது சாதனைகள். இந்த மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகள் 2 மட்டுமே தற்போது சிரோண்மணி அகாலி தளத்தின் வசம் உள்ளன. காங்கிரஸ் சார்பில் அம்ரீந்தர் சிங், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் பஞ்சாப் ஏக்தா கட்சி நிறுவனருமான சுக்பால் சிங் கைரானா உள்ளிட்டோர் எதிரணியில் நிற்கின்றனர். எதிர்க்கட்சிகளின் பன்முகப் போட்டிகளும், எம்.பி.யாக மேற்கொண்ட சாதனைகளும் ஹர்சிம்ரத் கெளரின் பலம்.

சிபு சோரன்
ஜார்க்கண்ட் முதல்வராக 3 முறை பதவி வகித்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன் (75). ஜார்க்கண்டின் மூன்றாவது முதல்வராகப் பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்கா மக்களவைத் தொகுதியில் மீண்டும் களம் இறங்கியுள்ளார் சிபு சோரன்.
இவர், 1980ஆம் ஆண்டு முதல்முறையாக எம்.பி.யானார்.

1989, 1991, 1996, 2002, 2004, 2009 ஆகிய தேர்தல்களில் எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டார்.

2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் சிபு சோரன், இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய பாஜக வேட்பாளர் சுனில் சோரன், 2019மக்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com