சர்ச்சையின் நாயகி பிரக்யா!

ஆக்ரோஷமான பேச்சுகளும், ஆவேசமான உரைகளும் தேர்தல் பிரசாரத்தில் இருந்து எப்போதுமே பிரிக்க முடியாது. ஒவ்வொரு கட்சித் தலைவர்களின்
சர்ச்சையின் நாயகி பிரக்யா!


ஆக்ரோஷமான பேச்சுகளும், ஆவேசமான உரைகளும் தேர்தல் பிரசாரத்தில் இருந்து எப்போதுமே பிரிக்க முடியாது. ஒவ்வொரு கட்சித் தலைவர்களின் வார்த்தை வசீகரமும், பேச்சாற்றலும்தான் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதே நேரத்தில் அத்துமீறிய விமர்சனங்களும், சர்ச்சைக்குரிய கருத்துகளும் தேர்தல்களத்தில் பரபரப்பையும், தேர்தல் ஆணையத்தின் கண்டனத்தையும் பெற்று வருகின்றன. அந்த வகையில், இந்த மக்களவைத் தேர்தலில் அதிகமாக சர்ச்சையில் சிக்கியவர் மத்தியப் பிரதேச மாநிலம் போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர்.

கடந்த மாதம் பாஜகவில் இணைந்த சாத்விக்கு 30 ஆண்டுகள் பாஜகவின் கோட்டையாக உள்ள போபால் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. போபால் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் போட்டியிடுகிறார். ஹிந்து பயங்கரவாதம் என்ற வார்த்தை மூலம் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பை அதிகம் விமர்சிக்கும் திக்விஜய் சிங்குக்கு எதிராக வலுவான வேட்பாளர் பிரக்யா என்றே கருதப்படுகிறார்.

ஏனெனில், மத்தியப் பிரதேசத்தை சொந்த மாநிலமாகக் கொண்ட சாத்வி, ஆர்எஸ்எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். மகாராஷ்டிரத்தின் மாலேகானில் கடந்த 2008ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு வழக்கில் சாத்வி கைது செய்யப்பட்டார். எனினும், குண்டுவெடிப்பில் அவருக்குத் தொடர்பில்லை என்று தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துவிட்டது. அதேநேரத்தில், விசாரணை நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக தொடர்ந்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சாத்வி இப்போது ஜாமீனில்தான் வெளியே உள்ளார்.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்த அடுத்த நாளிலேயே தனது பேச்சு மூலம் சர்ச்சையில் சிக்கினார் சாத்வி. "மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் விசாரணையில், என்னை துன்புறுத்திய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு முன்னாள் தலைவர் ஹேமந்த் கர்கரே, நான் சபித்த காரணத்தால்தான் மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தார்' என்று பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியது கடும் கண்டனத்துக்கு உள்ளானது. இதையடுத்து, தனது பேச்சுக்காக சாத்வி மன்னிப்புக் கோரினார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் சாத்வியிடம் விளக்கம் கேட்டது. அவர் அளித்த விளக்கத்தை ஏற்காத தேர்தல் ஆணையம் அவர் பிரசாரத்தில் ஈடுபட மூன்றுநாள்களுக்கு தடை விதித்தது. இதைத் தொடர்ந்து, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் தனக்கும் பங்கு இருப்பதாகவும், அதற்காக பெருமிதம் கொள்வதாகவும் கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். இதுவும் கடும் கண்டனத்துக்கு உள்ளானது.

இறுதியாக, நாதுராம் கோட்சே ஒரு "தேச பக்தர்' என்று பேசி மீண்டும் சர்ச்சைக்குவித்திட்டார். இதில் சாத்வி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியதை அடுத்து, அவர் மன்னிப்புக் கோரினார். இப்படி இந்த மக்களவைத் தேர்தலில் அதிகம் சர்ச்சையில் சிக்கியவர் சாத்வி என்றால் அதுமிகையல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com