மக்களவைத் தேர்தலின் மையம் மோடி
By DIN | Published On : 18th May 2019 05:27 AM | Last Updated : 18th May 2019 05:27 AM | அ+அ அ- |

இறுதிக் கட்டத் தேர்தலில் இந்த அளவுக்கு மிகுந்த முக்கியத்துவம் பெற காரணமாக இருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி. அவர் போட்டியிடும் வாராணசி தொகுதியிலும் மே 19-இல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தல் முழுவதுமே பிரதமர் மோடியை மையமாகவைத்தே அமைந்துள்ளது. ஏனெனில், பாஜக முழுமையாக மோடியை முன்னிறுத்தியது. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் தரப்பில் மோடி கூடாது என்பதே முன்னிறுத்தப்பட்டது.
வாராணசியில் மோடியின் வெற்றிபெறுவது உறுதி என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. கடந்த தேர்தலைவிட இந்த முறை எவ்வளவு அதிக வாக்குகளைப் பெறுகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளவே இந்தத் தேர்தல் என்பது அத்தொகுதி பாஜகவினரின் கருத்தாக உள்ளது.
இதனால், மோடி தனது தொகுதி குறித்து அதிகம் கவலைகொள்ளாமல், நாடு முழுவதும் சுறாவளிச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பாஜகவுக்கு கூட்டணிக் கட்சிக்கும் ஆதரவு திரட்டினார். அதே நேரத்தில் வேட்புமனு தாக்கலின்போது தங்கள் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாது அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனும் வாராணசியில் மோடி மனு தாக்கல் செய்தார்.
இந்தத் தேர்தல் மூலம் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக மக்களவைத் தேர்தலைச் சந்திக்கிறார். கடந்த முறை குஜராத்தின் வதோதரா, உத்தரப் பிரதேசத்தின் வாராணசி என இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட மோடி, இரண்டிலும் வெற்றி பெற்றார்.
அதில் வாரணசியை தக்கவைத்துக் கொண்ட மோடி, இப்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
வாராணசி தொகுதியின் காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் வாராணசியில் மோடியை எதிர்த்துப் போட்டியிட்டவர்தான். அப்போது மோடி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரை அடுத்து மூன்றாவது இடத்தை அஜய் ராய் பிடித்தார். அந்தத் தேர்தலில் மோடி 5.81 லட்சம் வாக்குகளும், கேஜரிவால் 2.09 லட்சம் வாக்குகளும் பெற்றனர். அஜய் ராய்க்கு 75,615 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
கடந்த முறை அரவிந்த் கேஜரிவால் மோடியை எதிர்த்துப் போட்டியிட்டதால், வாராணசியில் சற்று எதிர்பார்ப்பு மிகுந்து இருந்தது. ஆனால், இந்த முறை மோடியை எதிர்த்து பெரிய தலைவர்கள் யாரும் போட்டியிடவில்லை. மேலும், கடந்த 5 ஆண்டுகளாக பிரதமரின் சொந்தத் தொகுதி என்ற சிறப்பு அந்தஸ்தைப் பெற்றுள்ள வாராணசியில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளன. இவை மோடிக்கு கூடுதல் வாக்குகளை உறுதி செய்யும் என்பது அந்த மாநில பாஜக தலைவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி சமாஜவாதியின் ஷாலினி யாதவ் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். எனினும், மோடியை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக களமிறங்கப்போவதாக, எல்லை பாதுகாப்புப் படையின் முன்னாள் வீரர் தேஜ் பகதூர் யாதவ் அறிவித்தார்.
இதையடுத்து ஷாலினி யாதவை விலக்கிக் கொண்ட சமாஜவாதி, தங்களது அதிகாரப்பூர்வ வேட்பாளராக தேஜ் பகதூர் யாதவை முன்னிறுத்தியது. எனினும், எல்லைப் பாதுகாப்புப் படையில் இருந்து அவரை பணிநீக்கம் செய்து 5 ஆண்டுகள் நிறைவடையாததாலும், அவர் மீதான நடவடிக்கை குறித்த விவரங்களை வேட்புமனுவில் தெரிவிக்காததாலும் அவரது வேட்புமனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து தேஜ்பகதூர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் நிராகரிக்கப்பட்டுவிட்டது.