பாஜகவின் வெற்றி தொடருமா? ஹிமாசலப் பிரதேசம்

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் பரபரப்புடன் காணப்பட்டாலும், சில மாநிலங்கள் மிகவும் அமைதியாகத் தேர்தலை
பாஜகவின் வெற்றி தொடருமா? ஹிமாசலப் பிரதேசம்


நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் பரபரப்புடன் காணப்பட்டாலும், சில மாநிலங்கள் மிகவும் அமைதியாகத் தேர்தலை சந்திக்கின்றன. அந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பது ஹிமாசலப் பிரதேசம். மலையும் மலை சார்ந்த இடங்களும் உள்ள இந்த மாநிலம், நாட்டின் வடக்கு எல்லையான இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது.

பாஜக ஆட்சி நடைபெறும் இந்த மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு பெரும் கட்சிகள்தான் அரசியல் களத்தில் உள்ளன. இதனால், இந்த மாநிலத்தில் இரு முனைப் போட்டி நிலவுகிறது. மாநிலத்தில் மொத்தம் 4 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 4 தொகுதிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை (மே 19) தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில், ஹமீர்பூர் தொகுதியில், பாஜக சார்பில் ஏற்கெனவே 3 முறை வெற்றிபெற்றுள்ள அனுராக் தாக்குர், நான்காவது முறையாகப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் எம்எல்ஏ ராம்லால் தாக்குர் போட்டியிடுகிறார்.

கங்கரா தொகுதியில், ஜெய்ராம் தாக்குரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த கிருஷண் கபூர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இரு முறை எம்எல்ஏவாக இருந்த பவன் கஜல் களத்தில் உள்ளார்.

மண்டி தொகுதியில் பாஜகவுக்கும், காங்கிரஸூக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக சார்பில் தற்போதைய எம்.பி.யான ராம் ஸ்வரூப் சர்மா மீண்டும் போட்டியிடுகிறார். முதல்வர் ஜெய்ராம் தாக்குருக்கு மிகவும் நெருக்கமானவர். இவரை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமின் பேரன் ஆஷ்ராய் சர்மா களமிறக்கப்பட்டுள்ளார்.

சிம்லாவில் பாஜக சார்பில் இந்திய விமானப் படையின் முன்னாள் அதிகாரி சுரேஷ் காஷ்யப்பும், அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஓய்வுபெற்ற துணை ராணுவ அதிகாரி டேனி ராம் சாண்டிலும் போட்டியிடுகிறார்கள்.

விவசாயம், தோட்டக்கலை, நீர்மின் உற்பத்தி, சுற்றுலாத் துறை ஆகியவை மாநிலத்தின் செல்வ வளத்தைப் பெருக்குகின்றன. கடந்த 2016-ஆம் ஆண்டிலேயே மாநிலத்தில் உள்ள 99.5 சதவீத வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது. அதே ஆண்டில் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் மாநிலமாக ஹிமாசலப் பிரதேசம் அறிவிக்கப்பட்டது.

அதைவிட முக்கியமாக, பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம், நாட்டிலேயே மிகவும் குறைவாக ஊழல் நடைபெறும் மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் ஹிமாசலப் பிரதேசம் இருப்பதாக, கடந்த 2017-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

மாநிலத்தில் நிலப்பரப்பைவிட, மலைகளும், பள்ளத்தாக்குகளும் அதிகம் காணப்படுகின்றன. கோடையில் பனிப்பாறைகள் உருகுவதாலும், மழைக்காலத்தில் மழை பெய்வதாலும், இங்குள்ள அனைத்து ஆறுகளிலும் பெரும்பாலும் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடுவதைக் காண முடிகிறது. இதனால் தண்ணீர் பிரச்னை இல்லை. விவசாயத்துக்கோ, குடிநீருக்கோ வேறு எந்த மாநிலத்தையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை.

பெரிய அளவிலான அரசியல் சச்சரவுகள் இல்லாத இந்த மாநிலத்தில், கடந்த 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், மொத்தமுள்ள நான்கு தொகுதிகளிலும் பாஜகவே வெற்றி பெற்றது. அதே வெற்றியை இந்த முறையும் பெற்றுவிடலாம் என்ற முனைப்பில் பாஜக உள்ளது. இருப்பினும், ஆளும் பாஜக எம்.பி.க்கள் மீதான அதிருப்தி காரணமாக, அதே வெற்றியை மீண்டும் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ளூர் அளவில் சில பிரச்னைகள் உள்ளன. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை; விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை ஆகியவை ஆளும் பாஜக அரசின் மீதான குற்றச்சாட்டுகளாகும். அதுமட்டுமன்றி, ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கு மாநில அரசு குழு அமைக்காததால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.  அதுமட்டுமன்றி, ரயில்வே பாதை விரிவாக்கம்; விவசாயிகள் கடன் தள்ளுபடி, பெண்களின் பாதுகாப்பு ஆகிய பிரச்னைகளும் உள்ளன.

அண்டை மாநிலமான ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் பாலாகோட்டில் இருந்த பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப் படை அழித்தது. இந்த பதிலடி தாக்குதலை மக்களிடம் எடுத்துக் கூறி, பாஜக தலைவர்கள் வாக்குசேகரித்தனர். மறுபுறம் காங்கிரஸ் கட்சியோ, ஆப்பிள் இறக்குமதிக்கான வரியை உயர்த்துவதாக பாஜக அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி வருகிறது. மேலும், பழத்தோட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்து குளிர்பானங்களிலும் 5 சதவீத பழச்சாறு சேர்ப்பது கட்டாயமாக்கப்படும்; பழங்கள் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்; கிரி பகுதிக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளும் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளன. இந்த வாக்குறுதிகளை நினைவுபடுத்தி காங்கிரஸ் கட்சி மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறது.

கடந்த 2017-இல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெய்ராம் தாக்குர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவுமில்லை.

மறுபுறம், காங்கிரஸ் கட்சி கோஷ்டி மோதலில் உள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான வீரபத்ர சிங், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்கொண்டுள்ளார். வேட்பாளர்கள் தேர்வில் வீரபத்ர சிங்கை கட்சித் தலைமை அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியில் இருந்த அவர், தேர்தல் பிரசாரத்தில் அதிக ஆர்வம் காட்டவில்லை. மேலும், ஒரு கட்டத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்குரை "ஜென்டில்மேன்', "ஹிமாசலில் வளர்ச்சியை மேம்படுத்துவதில் உறுதிகொண்டவர்' என்றெல்லாம் பாராட்டிப் பேசியது காங்கிரஸ் தலைமைக்கு கோபத்தை உண்டாக்கியது.

இந்தச் சூழலில், பாஜக மீண்டும் வெற்றியைத் தக்கவைக்குமா, இல்லையா என்பது வரும் 23-ஆம் தேதி தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com