சுடச்சுட

  

  1893-ம் ஆண்டு தீபாவளித் திருநாளில் பெங்களூரில் பிறந்தவர் துவாரம் வெங்கடசுவாமி நாயுடு. விசாகப்பட்டினத்தில் வளர்ந்தார். ÷வெங்கடசுவாமிக்கு சிறு வயதில் கண்பார்வைக் குறைபாடு இருந்தது. பள்ளிக்கூடத்தில் மற்ற மாணவர்களுடன் சரிசமமாக நடத்தப்படாததால் அவருடைய பள்ளிக்கூடப் படிப்பையே நிறுத்திவிட்டார் தந்தையார்.

  வீட்டில் அடிக்கடி பஜனை நிகழ்ச்சிகள் நடைபெறும். தந்தை ஓரளவுக்குப் பாடுவார், வயலினும் வாசிப்பார். தமையனார் வெங்கடகிருஷ்ணய்யா நன்றாகவே வயலின் வாசிப்பார். வெங்கடசுவாமியும் பஜனைகளில் சேர்ந்து பாடுவார்.

  ஒருமுறை வீட்டில் ஒருவரும் இல்லாதபோது தமையனாரின் வயலினை எடுத்து வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தமையனார், தம்பியின் வாசிப்பைக் கேட்டு மனம் குளிர்ந்து அவருக்கு முறைப்படி வயலின் கற்றுத்தர முடிவுசெய்து அவரே முதல் குருவானார்.

  பிறவிக் கலைஞரான வெங்கடசுவாமி மிக எளிதாக வயலின் கற்றுக்கொண்டார். கலை அவருக்கு கைகட்டிச் சேவகம் செய்தது. இதைக்கண்டு பிரமித்த அண்ணன் அவரை பல ஜாம்பவான்களின் கச்சேரிகளுக்குத் தொடர்ந்து அழைத்துச் சென்றார்.

  வீணை சேஷண்ணா, சங்கமேஸ்வர சாஸ்திரி, கோனேரிராஜபுரம் வைத்யநாத ஐயர் போன்றோரின் கச்சேரிகளைக் கேட்டு தன்னுடைய இசை அறிவை மேலும் கூர் தீட்டிக்கொண்டார்.

  நண்பர்களின் இல்லங்களிலும் கோயில்களிலும் சிறு கச்சேரிகளைச் செய்தார். 1919-ல் விஜயநகரம் மகாராஜா இசைக் கல்லூரியில் மாணவராகச் சேர விண்ணப்பித்தார். நேர்முகத் தேர்வில் இவருடைய வாசிப்பைக் கேட்ட கல்லூரி நிர்வாகத்தினர் இவரை கல்லூரியின் பேராசிரியராகவே நியமித்துவிட்டனர்.

  1927-ல் இந்திய காங்கிரஸ் மாநாட்டை ஒட்டி நடந்த இசை மாநாட்டில் வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றார். கர்நாடக இசைக்கு ஒரு நல்ல வயலின் கலைஞர் அறிமுகமானார். மூத்த கலைஞர்கள் ரத்தினக் கம்பளம் விரித்து அவரை வரவேற்றனர். தமிழ்நாட்டு மகா வித்வான்களான காஞ்சிபுரம் நாயனா பிள்ளை, அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், பல்லடம் சஞ்சீவ ராவ், முசிரி சுப்பிரமணிய ஐயர் முதலானோருக்கு வாசித்தது, வானொலி கச்சேரி, இசைத் தட்டு வெளியீடு ஆகியவை மூலம் இவர் புகழ் மேலும் பரவியது.

  உலகப் புகழ்பெற்ற வயலின் மேதை யஹுதி மெனுஹின் இவருடைய வாசிப்பைக் கேட்டு மயங்கினாராம். பிறகு தன்னுடைய வயலினையே கொடுத்து வாசிக்கச் சொல்லி மகிழ்ந்தாராம். அழுத்தமான விரல் நுணுக்கத்துக்கும், சுகமான, மிருதுவான வில் வாசிப்புக்கும் சொந்தக்காரர் துவாரம்.

  சென்னை சங்கீத வித்வத் சபை 1941-ம் வருடம் இவருக்கு சங்கீத கலாநிதி பட்டம் கொடுத்து கெüரவித்தது. 1953-ல் சங்கீத நாடக அகாதமி விருதையும் 1957-ல் பத்மஸ்ரீ விருதையும் பெற்றார்.

  1964-ல் ஆந்திர சங்கீத நாடக அகாதமி ஏற்பாடு செய்திருந்த விழாவுக்காக ஹைதராபாத் சென்றார். அப்போது மாரடைப்பால் உயிர் பிரிந்தது.

  1993-ம் ஆண்டு இவருடைய பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு இந்திய தபால்துறை சிறப்பு தபால்தலை வெளியிட்டது.

  -சுவாதி

  இத்துடன் கலாரசிகனின் "இசை உலா' நிறைவு பெறுகிறது. கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் வெளிவந்த "இசை உலா' விமர்சனங்கள் விரைவில் புத்தக வடிவம் பெற இருக்கின்றன.

   - ஆசிரியர்

  தகவல் உதவி: கே. ஸ்ரீநிவாசன், சந்திரிகா ராஜாராம், ஜெயஸ்ரீ, சுவாதி, ஹம்சினி, உமா சரஸ், ராஜ்கண்ணன்

  படங்கள்: ராகி - விஜி ரவி -கணேஷ்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai