சித்தார் இசைக் கலைஞர் ரவி சங்கர் காலமானார்

உலகின் புகழ்பெற்ற சித்தார் இசைக் கலைஞர் பண்டிட் ரவி சங்கர்
சித்தார் இசைக் கலைஞர் ரவி சங்கர் காலமானார்

உலகின் புகழ்பெற்ற சித்தார் இசைக் கலைஞர் பண்டிட் ரவி சங்கர் புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 92.

சில ஆண்டுகளாக இதய நோயால் அவதிப்பட்டு வந்த அவர், கலிபோர்னியோவில் உள்ள ஸ்கிரிப்ஸ் மெமோரியல் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை அவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் புதன்கிழமை காலை ரவி சங்கர் உயிரிழந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ரவி சங்கர், உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் 1920ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி பிறந்தார். இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், நாரஹ் ஜோன்ஸ், அனுஷ்கா சங்கர் என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்களுடன் 3 பேரக் குழந்தைகளும், 4 கொள்ளுப் பேரன்களும் அவருக்கு உள்ளனர்.

மேற்கத்திய நாடுகளில் இந்திய பாரம்பரிய இசையை வழங்கி அனைவரையும் வசீகரித்த ரவி சங்கருக்கு, 1999ஆம் ஆண்டு "பாரத ரத்னா விருது' அளிக்கப்பட்டது.

1967ஆம் ஆண்டு மெனுஹின் என்ற இசைக் கலைஞருடன் இணைந்து உருவாக்கிய "வெஸ்ட் மீட்ஸ் ஈஸ்ட்' எனும் இசை ஆல்பத்துக்கு முதல் தடவையாக "கிராமி விருதை' இவர் பெற்றார். மொத்தம், 3 கிராமி விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

"தி லிவிங் ரூம் செசன்ஸ் பார்ட் 1' என்ற இவரது இசை ஆல்பத்துக்கு, 2013ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுக்கும் ரவி சங்கர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மகசேசே விருது பெற்றவரான ரவி சங்கர், 1986இல் மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

கலிபோர்னியாவில் கடந்த நவம்பர் 4ஆம் தேதி, தனது மகள் அனுஷ்காவுடன் இணைந்து நடத்திய கச்சேரியே ரவி சங்கரின் கடைசி இசை நிகழ்ச்சியாகும்.

நாடாளுமன்றம் இரங்கல்: புதன்கிழமை நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்கியவுடன் ரவி சங்கருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரு அவைகளிலும் உள்ள உறுப்பினர்கள் அமைதியாக எழுந்து நின்றி அவருக்கு மெüன அஞ்சலி செலுத்தினர்.

"சிறந்த குடிமகனை இந்தியா இழந்து விட்டது. பன்முக திறமை கொண்ட ரவி சங்கரின் மரணம் துக்கத்தில் ஆழ்த்தியதாக' மக்களவை உறுப்பினர் மீரா குமார் தெரிவித்தார்.

"அவரது மரணம் இசை உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு' என்று மாநிலங்களவை உறுப்பினர் ஹமீது அன்சாரி தெரிவித்தார்.

இசை உலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு: இசைக் கலைஞர் ரவி சங்கரின் மரணம் இசை உலகுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

பிரதமர் இரங்கல்: ரவி சங்கர் தேசிய சொத்து. இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகுக்கு பறைசாற்றிய தூதர் என்று பிரதமர் மன்மோகன் சிங் தனது இரங்கல் செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com