Enable Javscript for better performance
நினைவுத் திரையில்...- Dinamani

சுடச்சுட

  

  மகாராஜபுரம் விஸ்வநாத அய்யருடைய நகைச்சுவை உணர்வு ஜகப்பிரசித்தம். சொல்லி முடிப்பதற்குள் அவரிடமிருந்து பளிச் பளிச்சென்று பதில் வந்து விழுந்துவிடும். மகாவித்வான். சின்னப் பையனாக இருக்கும்போதே அவரது வித்வத் அவரைத் தலைசிறந்த பாடகராக அடையாளம் காட்டியது.

  திருவையாறில் தியாகராஜ உற்சவம் நடந்து கொண்டிருந்தது. அப்போது மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை என்கிற பிரபல பிடில் வித்துவான்தான் உற்சவக் கமிட்டியின் பொறுப்பாளராக இருந்தார். அப்போது மதுரை மணி அய்யரின் சித்தப்பா மதுரை புஷ்பவனம் அய்யர் முதல் வரிசை வித்வான்களில் முதன்மையாக இருந்த நேரம். பல மாதங்கள் முன்னாலேயே அவரது கச்சேரிகளுக்கு முன் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

  திருவையாறு தியாகராஜ உற்சவத்திற்கு குறிப்பிட்ட தினத்தில் வந்து சேரவேண்டிய மதுரை புஷ்பவனம் அய்யர் வந்து சேர முடியவில்லை. அந்த நாளில் இப்போது இருப்பதுபோலப் பிரயாண வசதிகள் இல்லாத நிலைமை. கூட்டமோ, புஷ்பவனம் அய்யரின் கச்சேரியைக் கேட்பதற்காகவே காத்திருக்கிறது. வெளியூரிலிருந்தெல்லாம் ரசிகர்கள் வந்து குவிந்திருக்கிறார்கள்.

  ""இப்படியாகிவிட்டதே என்ன செய்வது?' என்று தெரியாமல் மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை தவித்துக் கொண்டிருந்தபோது, மிருதங்க வித்வான் அழகியநம்பியாப் பிள்ளை தயங்கித் தயங்கி, அவரிடம் ஒரு யோசனை சொன்னார். ""விசுவநாதன்னு ஒரு பிள்ளையாண்டான் வந்திருக்கிறான். ரொம்ப நன்றாகப் பாடுகிறான். அவனைப் பாடச் சொன்னால் என்ன? புதிதாக ஒரு வித்வானை உற்சாகப் படுத்துவோமே...'' என்று இழுத்தார் அழகியநம்பியாப் பிள்ளை.

  கோவிந்தசாமிப் பிள்ளைக்குக் கோபம் வந்துவிட்டது. ""புஷ்பவனம் அய்யர் சங்கீதத்தைக் கேட்க ஜனங்கள் திரண்டு வந்திக்கிறார்கள். அந்த இடத்தில் ஒரு ஜூனியர் வித்வானை எப்படிப் பாடச் சொல்வது?'' என்று எரிந்து விழுந்தாராம்.

  ""புஷ்பவனம் அய்யர் வர்ர மட்டும் இந்தப் புள்ளையாண்டான் பாடட்டும். வந்ததும் எழுந்து போய்விடட்டும். இல்லையென்றால் கூட்டத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது?'' என்று மற்றவர்களும் வற்புறுத்தவே, மனதில்லா மனதுடன் அந்த இளம் வித்வானை மேடை ஏற்றினார்கள். திருவையாறு தியாகப்பிரம்ம உற்சவத்தில் அதுதான் மகாராஜபுரம் விஸ்வநாத அய்யரின் முதல் கச்சேரி.

  கச்சேரி தொடங்கும்போது, எப்போதும் வயலின் வித்வான்கள் உட்காருவதுபோல பாகவதரைப் பார்த்தபடி அமராமல். சின்னப் பையன் என்பதால் சபையைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாராம் மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை.

  மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் பாடத் தொடங்கினார். மெல்ல மெல்ல அவரை நோக்கித் திரும்பியது மட்டுமல்ல, இரண்டு உருப்படிகள் முடிந்ததுமே, மேடையிலேயே மைக்கில் சத்தம் போட்டு "சின்னப் புஷ்பவனம் வந்தாச்சு' என்று அறிவித்து விட்டாராம் பிள்ளைவாள்.

  ***

  எல்லா வித்வான்களும் இரண்டு மூன்று நாள்கள் தங்கியிருந்து விவாதிக்கும் விதத்தில், கலாúக்ஷத்திராவில் ஒரு சதஸ். மகாராஜபுரம் விஸ்வநாத அய்யரும் அதில் கலந்துகொண்டார்.

  ருக்மிணிதேவி, விஸ்வநாத அய்யரிடம் "சிரமமா இல்லையே!' என்று வாத்சல்யத்தோடு விசாரித்தாராம். மகாராஜபுரத்திடமிருந்து வந்த பளிச் பதில் - ""ஆசிரமத்தில் என்ன சிரமம்?''

  ***

  ஒரு கச்சேரிக்காகத் தனது சிஷ்யர்களுடன் பாலக்காடு போயிருந்தார் மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர். ""கொஞ்சம் ஸ்ட்ராங்காகக்  காபி வேண்டும்' என்று கேட்ட பக்கவாத்தியக்காரருக்கு காபி கன்னங்கரேரென்று என்று வந்திருந்தது. "என்னங்காணும் இது, காபி கேட்டா டிகாக்ஷனைத் தந்திருக்கா' என்று சலித்துக் கொண்டாராம் அவர்.

  பக்கத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விஸ்வநாத அய்யர் சொன்னாராம் - ""பாலக்காட்டானாச்சே, அப்படித்தான் இருக்கும்!''

  ***

  கச்சேரிக்காக வெளியூர் போயிருந்தது விஸ்வநாத அய்யரின் குழு. அவர்கள் தங்க ஜாகை ஏற்பாடாகி இருந்தது. சாயங்காலம்தான் கச்சேரி. சாயங்காலக் கச்சேரிக்குத் தம்புரா போட ஏற்பாடாகி இருந்த உள்ளூர் கத்துக்குட்டி சங்கீத வித்வான், மகாராஜபுரம் விஸ்வநாத அய்யரையும் குழுவினரையும் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார். ஏதோ கேட்க வேண்டும் என்று வந்திருப்பது நன்றாகத் தெரிந்தது.

  பிடில் ராஜமாணிக்கம் பிள்ளை, ""யாரப்பா, நீ, குட்டி போட்ட பூனை மாதிரி இங்கே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டவுடன், தான் தம்புரா போட வந்திருப்பதைச் சொல்லாமல், தம்புராவுக்கு என்ன ஸ்ருதி வைத்துக் கொள்வது என்று கேட்காமல், ""அண்ணாவுக்கு எத்தனை கட்டை?'' என்று கல்மிஷம் இல்லாமல் கேட்டுவிட்டார்.

  தன் சரீரத்தையே குனிந்து ஒரு முறை பார்த்துவிட்டு, அருகிலிருந்த மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் சொன்னாராம் - ""அதை இப்பவே எப்படியப்பா சொல்ல முடியும்?''

  - "ஆஸ்திக சமாஜம்' நரசிம்மன்

  (நினைவுகள் தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai