Enable Javscript for better performance
நினைவுத் திரையில்...- Dinamani

சுடச்சுட

  

  மாயவரம் பெரிய கோயில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமானது. அதில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமி சந்நிதி மட்டும் தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். அது ஏன் அப்படி என்று எனக்குத் தெரியாது. அந்தக் காலத்தில் நாதமுனி பேண்ட் என்பது மிகவும் பிரசித்தம். அந்தக் குழுவில் ஐம்பது அறுபது பேர் இருப்பார்கள். டிரம்ஸ், கிளாரினெட் போன்று என்னென்னவோ வாத்தியங்கள் இருக்கும். அந்தக் குழுவினர் போட்டிருக்கும் யூனிபாரத்தையும் தொப்பியையும் அவர்களிடம் இருக்கும் மேல்நாட்டு வாத்தியங்களையும் பார்ப்பதற்கே கூட்டம் கூடும்.

  மாயவரம் பெரிய கோயிலில் திருவிழா. நாதமுனி பேண்ட் குழுவினரின் இசையைக் கேட்க பட்டமங்கலம் தெரு முழுவதும் நிற்க இடமில்லாமல் கூட்டம். அன்றைக்கு திருவீழிமிழலை சகோதரர்களையும் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். காளியாக்குடி ஹோட்டலுக்கு பக்கத்தில் திருவீழிமிழலை சகோதரர்கள்- சுப்பிரமணியப் பிள்ளை, நடராஜப் பிள்ளை- வாசிக்க வேண்டும். நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளைதான் தவில். அவருடைய தவில் சத்தத்தைக் கேட்டே இது நீடாமங்கலத்தின் வாசிப்பு என்று சொல்லிவிடுவார்கள். அவ்வளவு பிரபலம்.

  பட்டமங்கலம் தெருவில் நாதமுனி பேண்ட் முழுமூச்சில் வாசித்துக் கொண்டிருக்கும்போது திருவீழிமிழலையின் நாகஸ்வரம் எப்படி எடுபடப் போகிறது என்கிற ஐயப்பாடு எனக்கும் நண்பர்களுக்கும் இருந்தது. ஆனால், சகோதரர்களுக்கும் சரி, நீடாமங்கலத்தாருக்கும் சரி, கிஞ்சித்தும் கவலை இருந்ததாகத் தெரியவில்லை. அப்படி ஒரு தன்னம்பிக்கை.

  "தொடங்குங்கள்' என்று சுப்பிரமணியப் பிள்ளையிடமிருந்து சமிக்ஞை கிடைத்ததும், நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தவில் வாசிக்கத் தொடங்கினார். சகோதரர்கள் "சங்கராபரண'த்தில் "ஸ்வர ராக சுதா' வாசிக்கத் தொடங்கியதுதான் தாமதம். அடுத்த பத்து நிமிடங்களில் பட்டமங்கலம் தெருவில் இருந்த ஒட்டுமொத்த கூட்டமும் காளியாக்குடி அருகில் கூடிவிட்டது. வேடிக்கை என்னவென்றால் பேண்ட் வாசிப்பவர்களேகூட நாயனம் கேட்க வந்துவிட்டதுதான்!

  

  அந்த நாளில் மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளை வயலின் என்றால் அவ்வளவு உசத்தி. நாயினாப் பிள்ளை பூச்சி சீனிவாச  அய்யங்கார், மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், முசிரி சுப்பிரமணிய அய்யர் போன்றவர்கள் மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளையின் வயலினைத் தங்களுக்கு பக்கவாத்தியமாக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். "சங்கராபரண'த்தில் கோவிந்தசாமி பிள்ளை எக்ஸ்பெர்ட்.

  அவருக்கு ஜார்ஜ் ஓக்ஸிலிருந்து ஷூ வரும். இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிளாஸ்கோ மல்தான் கட்டுவார். தனது சிரம தசையில் கூட யாரும் தனக்கு தானம் தருவதை ஏற்றுக்கொள்ளாதவர். மானஸ்தர். அவமானத்தை தாங்கிக் கொள்ள மாட்டார். அதே சமயத்தில் ரொம்பவும் இளகிய மனசு.

  சென்னையில் ஒரு பெரிய மருந்துக் கடை முதலாளி. அவர் வடநாட்டுக்காரர் என்று நினைவு. அவரது ஒரே பிள்ளைக்கு சித்த பிரமை. என்னவெல்லாமோ மருத்துவம் பார்த்தும் சரியாகவில்லை. அந்தப் பணக்காரரிடம் யாரோ போய் சங்கீதத்தின் மூலம் சித்த பிரமையை குணப்படுத்த முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள். மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளை வயலின் வாசித்ததை ஒரு கச்சேரியில் கேட்ட மருந்துக் கடை முதலாளிக்கு இவரை வைத்து தனது பையனை குணப்படுத்தினால் என்ன என்கிற எண்ணம் வந்தது.

  கோவிந்தசாமி பிள்ளையிடம் விஷயத்தைச் சொன்னார் அவர். பிள்ளைவாள், "நான் கச்சேரி வாசிக்க வந்திருக்கிறேன். சங்கீதத்தின் மூலம் சித்த பிரமை குணமாகுமா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. இது வீண் முயற்சி' என்று தட்டிக் கழித்தார். ஆனால் அந்த முதலாளி விடவில்லை. ஏதோ ஒரு பையனுக்கு இதனால் விடிவு காலம் வந்தால் வரட்டுமே என்று திருச்சிக்கு திரும்பிப் போக வாங்கியிருந்த டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு அந்தப் பணக்காரரின் வீட்டிற்குப் போனார் கோவிந்தசாமி பிள்ளை.

  அங்கே அந்த இளைஞனை சங்கிலியால் கட்டி வைத்திருந்தார்கள். இவரைப் பார்த்தவுடனேயே அவன் வெறி பிடித்தது போல கத்தினான். இவரைப் பார்த்து அவன் முறைத்த முறைப்பே பயப்படும்படியாக இருந்தது. பிள்ளைவாள் வயலினை எடுத்து பக்கவாத்தியம் எதுவும் இல்லாமல் "சங்கராபரணம்' வாசிக்கத் தொடங்கினார். முதல் மூன்று நாட்களில் பெரிய மாற்றம் இருக்கவில்லை. நான்காவது நாள் அந்தப் பையன் சற்று சாதுவானான். அவனுடைய பார்வையிலும் பழக்கத்திலும் அசாத்திய மாற்றம். கோவிந்தசாமி பிள்ளை அவனுடைய சங்கிலியை அவிழ்த்துவிடச் சொன்னார். ஒரு வாரம் அங்கேயே தங்கியிருந்து வாசித்து வாசித்து அந்தப் பையனின் சித்த பிரமையை மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளை குணப்படுத்திவிட்டார் என்று சொல்வார்கள். அந்தப் பணக்காரர் தந்த பணத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாராம் அவர்.

  

  அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் ரொம்ப நாளைக்கு குருநாதர் பூச்சி ஸ்ரீநிவாச அய்யங்காரிடம் குருகுல வாசம் நடத்தி வந்தார். அப்போதெல்லாம் குருநாதர் அனுமதி கொடுத்தால்தான் சிஷ்யர்கள் தனியாக கச்சேரி செய்யத் தொடங்குவார்கள். எல்லா கச்சேரிக்கும் பூச்சி அய்யங்காருடன் அரியக்குடி செல்வார். அவருக்குப் பின்னால் அமர்ந்து பின்பாட்டுப் பாடுவார்.

  ஒரு நாள் கச்சேரியில் திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர் வயலின். பூச்சி அய்யங்காருக்குப் பின்னால் சற்று தள்ளி உட்கார்ந்திருந்தார் சிஷ்யர் அரியக்குடி. அன்றைக்கு அரியக்குடிக்கு ஸ்வரம் பாட விட்டுக் கொடுத்தார் பூச்சி. ரொம்பவும் பின்னால் உட்காரந்திருந்ததால் வயலின் வாசித்துக் கொண்டிருந்த திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர், "கொஞ்சம் முன்னுக்கு வாடா ராமானுஜம்' என்று உரிமையுடன் சத்தம் போட்டுச் சொன்னாராம். அதைக் கேட்ட குருநாதர் பூச்சி ஸ்ரீநிவாச அய்யங்கார் அந்த மேடையிலேயே அறிவித்துவிட்டாராம்- "ஆமாம். நீங்க சொல்றது ரொம்ப சரி. ராமானுஜன் இனிமேல் முன்னுக்கு வந்துவிட வேண்டியதுதான்' என்று.

  குருநாதரே ஆசிர்வாதம் செய்து அரியக்குடி ராமானுஜ அய்யங்காருக்கு தனிக் கச்சேரியும் ஏற்பாடு செய்து கொடுத்தார் என்பார்கள்.

  

  செம்பை வைத்தியநாத பாகவதரின் சாரீரம் உலகப் பிரசித்தம். கணீரென்று இருக்கும். அவரை வெங்கலக் குரல் வைத்தா என்றுதான் அப்போது அழைப்பார்கள். ஒருமுறை செம்பை வைத்தியநாத பாகவதருக்கு பாலக்காடு அருகில் உள்ள சாத்தப்புரத்தில் கச்சேரி. வயலினில் செüடையா, மிருதங்கத்தில் பாலக்காடு மணி அய்யர் என்று பக்கவாத்தியம். ராமசந்திர அய்யர் என்று ஒருவர்தான் ஏற்பாடு. செம்பை கச்சேரி என்பதால் நல்ல கூட்டம்.

  பக்கத்தில் ஏதோ கோயிலில் நாயனக் கச்சேரி. செம்பை "என்னோட சாரீரத்திற்கு சக்தி இருந்தா அந்த மேளச் சத்தம் கேட்காது' என்று கூறிவிட்டு பாடத் தொடங்கினாராம். அடுத்த மூன்று மணி நேரமும் கூட்டம் அசைய வேண்டுமே. ராமசந்திர அய்யர் சொன்னாராம், "நாதஸ்வரமா இல்லை, வைத்தாவின் நாதக் கட்டு சாரீரமா என்றால் ஜெயிப்பது வைத்தாவாகத்தான் இருக்கும்.'

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai