Enable Javscript for better performance
அடுத்த ஸ்லாட்டுக்கு தயார்!- Dinamani

சுடச்சுட

  
  esai1

  இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சார்பில் புதன்கிழமை மதியம் 3 மணிக்கு லாவண்யா சுந்தரராமன் இசை நிகழ்ச்சி. இவர் நித்யஸ்ரீயின் சகோதரி மகள். குடும்பத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய துயரம் இந்த வளரும் கலைஞரை பாதித்துவிடுமோ என்கிற நமது நியாயமான பயத்தை போக்கியது அன்றைய கச்சேரி. தன்னால் சபாக்காரர்களோ ரசிகர்களோ பாதித்து விட கூடாது என்கிற பொறுப்புணர்வுள்ள ஒரு இசைக் கலைஞராக அவர் நடந்து கொண்டதற்குப் பாராட்டுக்கள். இசை துக்கத்தை தணிக்கவும் உதவும்.

  வில்லிவாக்கம் ரகுராமன் வயலின். அம்மன்குடி ராமநாராயணன் மிருதங்கம். லால்குடி சாருகேசி ராகத்தில் இயற்றிய "இன்னும் என் மனம்' என்கிற வர்ணத்துடன் தனது நிகழ்ச்சியை தொடங்கிய லாவண்யா தொடர்ந்து ஸ்வாதி திருநாளின் "கோபால பாகிமாம்' (ரேவகுப்தி) சாகித்யத்தைப் பாடினார். அடுத்தாற்போல விஸ்தாரமான ரஞ்சனி ராக ஆலாபனை. அவரது குரல்வளத்தில் ரஞ்சனி வழக்கத்தை விட ரஞ்சகமாக மிளிர்ந்தது. "துர்மார்க்கசரா'தான் சாகித்யம். பட்டம்மாள் குடும்ப பாரம்பரியத்தில் வந்த லாவண்யாவுக்கு கணக்கு வழக்குகள் அநாயாசமாக வருகிறது. ஏனைய கலைஞர்கள் சிரமப்பட்டு செய்யும் சங்கதிகளையெல்லாம் சிரித்துக்கொண்டே அவரால் கையாள முடிகிறது.

  கமலமனோகரியில் தீட்சிதரின் "கஞ்சதளாயதாக்ஷி', காபி ராகத்தில் நீலகண்ட சிவனின் "சண்முகனே', தியாகய்யர் மாளவி ராகத்தில் இயற்றிய "நேநருஞ்சினானு' என்று விறுவிறுப்பாக மூன்று சாகித்யங்களை பாடி ரசிகர்களை கொள்ளை கொண்டார் லாவண்யா.

  அன்றைய முக்கிய ஆலாபனைக்கான உருப்படியாக அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட ராகம் சாவேரி. சாகித்யம் சியாமா சாஸ்த்ரியின் "சங்கரி சங்குரு'. ஆலாபனையில் முதிர்ந்த கலைஞர்களுக்கு சவால் விடும் அளவுக்கு அபாரமான தேர்ச்சி. சாவேரி ராகத்தின் பரிமாணங்கள் அனைத்தையும் தொட்டுக் காட்டும் லாவகம். சாரீரமாகட்டும் ஆலாபனையின்போது உருண்டோடி வந்து வியப்பை ஏற்படுத்துகிறது. வழக்கம்போல "சியாமகிருஷ்ணசோதரி' என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக்கொண்டு கல்பனா ஸ்வரம் பாடினார். அமரிக்கையான தனியாவர்த்தனம் தொடர்ந்தது.

  சுத்தானந்த பாரதி கர்நாடக தேவ காந்தாரியில் இயற்றிய "எப்படிப் பாடினரோ'வைத் தொடர்ந்து, பாரதியாரின் "காக்கைச் சிறகினிலே' பாட்டை இசைத்தார். சாதாரணமாக இந்தப் பாடலை சிந்து பைரவி, சிவரஞ்சனி, தர்பாரி கானடா, காபி போன்ற ராகங்களில் பாடிக் கேட்டிருக்கிறோம். மிஸ்ர சிவரஞ்சனி ராகத்தில் இந்தப் பாடலை இசைப்பதற்கு நல்ல தேர்ச்சி வேண்டும். ஆனால் லாவண்யா சுந்தரராமன் அதை சர்வசாதாரணமாக கையாண்டதிலிருந்து, டி.கே. பட்டம்மாளின் கொள்ளுப் பேத்திக்கு இதெல்லாம் தண்ணீர் பட்டப்பாடு என்பது தெரிந்தது. மீனுக்கு நீந்தவா கற்றுக் கொடுக்க வேண்டும்?

  இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லாவண்யா வழக்கத்திற்கு அதிகமாக சத்தம் போட்டு பாடுகிறார் என்று நாம் குறிப்பிட்டிருந்தோம். இப்போது அந்த விஷயத்திலும் அவரை குறை சொல்ல முடியாது. முழுமையான பக்குவத்தை அடைந்துவிட்ட பாடகியாக பரிணமித்து இருக்கிறார். அடுத்த சீசனில் இவரை அடுத்த ஸ்லாட்டுக்கு சபாக்கள் உயர்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai