கற்பகமே கண்பாராய்...

சஹானா ராகத்தில் "ஸ்ரீவாதாபி' என்கிற சாகித்யத்துடன் தனது நிகழ்ச்சியைத் தொடங்கிய அசோக் ரமணி
கற்பகமே கண்பாராய்...

பாபநாசம் அசோக் ரமணி ஒரு புத்திசாலி இசைக் கலைஞர். ஒரு கச்சேரி எப்படி அமைந்தால் ரசிகர்களுக்கு திருப்தியாக இருக்கும் என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருப்பவர். நிகழ்ச்சிக்கு உருப்படிகளை தேர்ந்தெடுப்பதிலும் அவற்றை வரிசைக்கிரமமாக அமைத்துக் கொள்வதிலும் சமர்த்தர். அசோக் ரமணியின் கச்சேரி என்று சொன்னால் ஏமாற்றாது என்கிற தைரியத்துடன் போய் அமரலாம். கடந்த புதன்கிழமை கிருஷ்ணகான சபா சார்பில் நடந்த அவரது இரவு 7 மணி கச்சேரி அதற்கு விதிவிலக்காக அமையவில்லை.

எம்.ஏ. சுந்தரேசன் வயலின். தஞ்சாவூர் ராமதாஸ் மிருதங்கம். அனிருத் ஆத்ரேயா கஞ்சிரா. அன்று அசோக் ரமணிக்கு வாய்த்த பக்கவாத்தியமும் அற்புதமாக அமைந்திருந்தது அன்றைய நிகழ்ச்சியின் வெற்றியை உறுதி செய்தது.

சஹானா ராகத்தில் "ஸ்ரீவாதாபி' என்கிற சாகித்யத்துடன் தனது நிகழ்ச்சியைத் தொடங்கிய அசோக் ரமணி அடுத்ததாக ஆபோஹி ராக ஆலாபனையில் இறங்கினார். அப்பழுக்கு சொல்ல முடியாத, அடிக்கு ஒரு தரம் "ஆஹா' போட வைத்த ஆலாபனை. எடுத்துக்கொண்ட சாகித்யம் கோபாலகிருஷ்ண பாரதியாரின் "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?'

"ஒருதரம் சிவ சிதம்பரம்' என்ற இடத்தில் நிரவல் அமைத்துக்கொண்டு கல்பனா ஸ்வரமும் பாடினார்.

அடுத்தாற்போல, பூர்விகல்யாணியில் "தசரதாத்மஜம்'. இந்த சாகித்யத்தில் என்ன விசேஷம் என்றால் தமிழில் மிக அதிகமான சாகித்யங்களை இயற்றியிருக்கும் பாபநாசம் சிவன் இயற்றிய சம்ஸ்கிருத சாகித்யம் என்பது. பூர்விகல்யாணி ராக ஆலாபனைக்குப் பிறகு சாகித்யம் மட்டும் பாடிவிட்டு விறுவிறுப்பாக பூர்ணசந்திரிகா ராகத்தில் "தெலிசிராமசிந்தனத்தோ'. அசோக் ரமணியின் குரலுக்கும் பக்கவாத்தியக்காரர்களின் ஒத்துழைப்புக்கும் இடையில் மூன்று நிமிடங்கள் அரங்கமே அந்தப் பாடலுடன் ஒன்றிவிட்டது.

அன்றைக்கு முக்கிய ஆலாபனைக்கு அசோக் ரமணி தேர்ந்தெடுத்துக் கொண்ட ராகம் கரகரப்ரியா. விஸ்தாரமாக ராகத்தை இசைத்து தியாகய்யரின் "சக்கனி ராஜமார்கமு' சாகித்யத்தை பாடத் தொடங்கினார். கண்டகி சுந்தராவில் நிரவல் அமைத்துக் கொண்டு கல்பனா ஸ்வரமும் பாடினார். ஏற்கெனவே "தெலிசிராமசிந்தனத்தோ'வில் களைக்கட்டியிருந்த கச்சேரி "சக்கனி ராஜமார்கமு' பாடியபோது அசோக் ரமணியிடம் சபையே வசப்பட்டிருந்தது. அன்றைய தனியாவர்த்தனமும் தனித்துவத்துடன் மிளிர்ந்ததை குறிப்பிட்டாக வேண்டும். "ஒருதரம் சரவணபவா' என்கிற கந்தர்அநுபூதியை ஹம்சாநந்தி, காபி, சந்திரகவுன்ஸ் ராகங்களில் ராகமாலிகையாக பாடி "நாளை வரும் என்று' என்கிற ஜி.எஸ். மணியின் பாடலை சந்திரகவுன்ஸ் ராகத்தில் பாடினார்.

நிகழ்ச்சியை நிறைவு செய்ய தனது பாட்டனார் பாபநாசம் சிவன் மத்யமாவதி ராகத்தில் இயற்றிய "கற்பகமே கண்பாராய்' பாடியபோது, நாமும் இந்த அற்புதமான இளம் கலைஞனை, "கற்பகமே கண்பாராய்' என்று வேண்டிக்கொண்டோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com