Enable Javscript for better performance
வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் இசை!- Dinamani

சுடச்சுட

  
  22kon7

  மயிலிறகால் மனதை வருடும் இசைக்குச் சொந்தக்காரர் அருணா சாய்ராம். உலக இசை மேடைகளில் பிரபலமான பாடகர் டோமினிக் வெல்லார்டுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்தினாலும் சரி, மாண்டலின் ஸ்ரீநிவாஸூடன் இணைந்து நிகழ்ச்சி நடத்தினாலும் சரி, அருணா சாய்ராமின் குரலில் வெளிப்படும் கம்பீரம்தான் அவரது அடையாளம்.

  பத்மஸ்ரீ விருது, இசைப் பேரறிஞர் விருதைத் தொடர்ந்து "இந்திரா சிவசைலம் விருது'ம் அவரின்

  இசை மகுடத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. விருது பெற்ற மகிழ்ச்சியுடன் நமக்குஅருணா சாய்ராம் அளித்த

  பிரத்யேகப் பேட்டியிலிருந்து...

  ராஜலக்ஷ்மி சேதுராமன், டி. பிருந்தா, டி.ஆர்.சுப்பிரமணியம் ஆகிய குருக்களுடனான உங்களின் மறக்கமுடியாத அனுபவங்கள்...

   இசை ஆரம்பம் என்னுடைய தாயார் ராஜலக்ஷ்மி அவர்களிடம்தான் தொடங்கியது. இசையின் மீது எனக்கு பெரிய அளவில் ஈர்ப்பு வருவதற்கு அவரின் ஆரம்பப் பாடமுறைதான் காரணம். பிருந்தாம்மா பாட்டு சொல்லிக் கொடுக்கும் நேரத்தில் மிகவும் கண்டிப்போடு இருப்பார். பாடம் முடிந்ததும் சாப்பிடுவதற்குத் தின்பண்டங்களை அன்புடன் கொடுப்பார். தலைவாரிப் பூச்சூடி விடுவார். தோழி போல் பாவித்து எங்களுடன் விளையாடுவார். பாடுவதற்கு உட்கார்ந்துவிட்டால் நெருப்பாய் மாறிவிடுவார். அவரின் வார்ப்பில் உருவானது நான் செய்த பாக்கியம். சுப்பிரமணியம் சாரிடம் பல்லவி பாடுவதில் இருக்கும் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன்.

  நீங்கள் இளம் பாடகியாக இசை மேடைகளில் வலம் வந்த நாட்களுக்கும் இன்றைக்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

  ஆரோக்கியமான பல வித்தியாசங்களை உணர்கிறேன். அன்றைக்கெல்லாம் பத்துப் பதினைந்து சபாக்கள்தான் இருக்கும். இன்றைக்கு சபாக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடிக் கொண்டே இருக்கின்றது. அடுத்த தலைமுறை கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும் நிறைய மேடைகள் இன்றைக்குத் தயாராக இருக்கின்றன. அன்றைக்கு இசையில் பெரிய ஞானம் இருப்பவர்கள் ரசிகர்களாக இருந்தார்கள். இன்றைக்கு இசையில் ஞானம் இருப்பவர்களும் கச்சேரி கேட்பதற்கு வருகிறார்கள். நல்ல இசையைக் கேட்டு தங்களின் படபடப்பைக் குறைத்துக் கொள்வதற்கும் ரசிகர்கள் வருகிறார்கள்.

  "இந்திரா சிவசைலம் விருது' பெற்றது குறித்து...

  "டாஃபே' நிறுவனத் தலைவர் மல்லிகா சீனிவாசன் அவரின் தாயாரின் பெயரில் அளிக்கும் விருது இது. அறிவிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள் இந்த விருது குறித்த எதிர்பார்ப்பு அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அந்த விருதின் மேல் இருக்கும் நம்பகத்தன்மைதான். மியூஸிக் அகடமியின் ஒருங்கிணைப்போடு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு அளிக்கப்படும் விருது இது.

  கலையை வளர்க்கும் சபாக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தொழில் நிறுவன அதிபர்கள் கலையை வளர்க்கும் புரவலர்களாகவும் பெரிய தொழில் நிறுவனங்கள் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கியும் கெüரவிப்பதை ஆரோக்கியமாக நினைக்கிறேன். இந்தவகையில் தகுந்த சான்றோர்களின் பரிசீலனையுடன் எனக்கு இந்த ஆண்டு வழங்கப்பட்டிருக்கும் "இந்திரா சிவசைலம் விருதைப்' பெற்றதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

  நீங்கள் பாடும் "அபங்' பாடல்களைக் கேட்பதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் காத்திருக்கிறது. இதைப் பாடும் எண்ணம் எப்படித் தோன்றியது?

  நான் அதிகமாக வட நாட்டில்தான் இருந்தேன். அதனால் அபங் என்னைப் பெரிதும் கவர்ந்த வடிவமாக ஆரம்பத்திலிருந்தே இருந்தது. கச்சேரிகளில் ஐந்து, ஆறு ஆண்டுகளுக்கு முன்புதான் எதேச்சையாகப் பாடினேன். மிக எளிமையான வரிகளில் அபரிமிதமான பக்தியை வெளிப்படுத்தும் பாடல்கள் அவை. மீரா, கபீர்தாசர், ஞானதேவர், துக்காராம், சக்குபாய்... என்று பலரும் பல்வேறு சமூகப் பின்னணிகளிலிருந்து வந்தவர்கள். அவர்களிடையே இருக்கும் ஒற்றுமை, அவர்கள் அனைவருமே தங்களின் பாடலில் பக்தியை மட்டுமே முன்னிலைப்படுத்தியதுதான். மொழியைக் கடந்து மக்களிடம் இந்த அபங் பாடல்கள் ஊடுருவியிருப்பதற்குக் காரணம் பக்திதான்.

  இன்றைய இளம் கலைஞர்களின் பலம், பலவீனமாக எதை நினைக்கிறீர்கள்?

  கர்நாடக இசை உலகில் இளம் கலைஞர்கள் இருப்பதையே பெரிய பலமாக நினைக்கிறேன். இன்றைய கலைஞர்கள் நன்றாகப் பயிற்சி செய்கிறார்கள். சிறந்த தொழில்முறைக் கலைஞர்களாக தங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். அதற்கான முயற்சிகள் அவர்களிடம் சிறப்பாக வெளிப்படுகின்றன. பலவீனமாக நான் எதையும் அவர்களிடம் பார்க்கவில்லை.

  விமர்சனங்கள் எப்படி இருக்கவேண்டும்? கலையின் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு அது உதவுகிறது?

  கலையை மேம்படுத்துவதுதான் ஒரு நல்ல விமர்சனத்தின் நோக்கம். தவறை இடித்துரைக்காமல், நாசூக்காக சுட்டிக் காட்டும் வகையில், "பூனை தன் குட்டி'யைக் கவ்விக் கொண்டு போவது போல் ஆரோக்கியமான விமர்சனமாக இருக்க வேண்டும்.

  பொதுவாக தஞ்சை மூவரின் சாகித்யங்களைப் பாடும் அளவுக்கு கச்சேரிகளில் சீர்காழி மூவரின் பாடல்கள் இடம்பெறுவது இல்லையே?

  பரவலாகப் பாடுவது இல்லை என்பது உண்மைதான். ஆனால் ஆங்காங்கே பல மேடைகளில் சீர்காழி மூவரின் சாகித்யங்கள் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. தமிழ் இசைச் சங்கத்தின் மேடைகளில் நான் தொடர்ந்து சீர்காழி மூவரின் பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறேன்.

  உள்நாட்டு இசைக் கலைஞர்களுடன் இணைந்து ஜூகல் பந்தி, மேற்கத்திய இசைக் கலைஞர்களுடன் இணைந்து ஃபியூஷன் நிகழ்ச்சிகளில் இடம்பெறுவதற்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

  கர்நாடக இசையின் கட்டமைப்பு வேறு. ஹிந்துஸ்தானி இசையின் கட்டமைப்பு வேறு. மேற்கத்திய இசையின் கட்டமைப்பு வேறு. ஜூகல் பந்தியாக இருக்கட்டும் மேற்கத்திய இசை வடிவமாக இருக்கட்டும் எல்லாமே ஒரு புள்ளியில் சேரும் வகையில் நிகழ்ச்சியைக் கொண்டு செல்வதின் மூலம் ரசிகர்களைப் பரவசப்படுத்துவதற்கான முயற்சியை ஜூகல் பந்தி, ஃப்யூஷன் போன்ற நிகழ்ச்சிகளின் மூலமாகச் செய்கிறோம். வேற்றுமைகளில் இருக்கும் ஒற்றுமையை அறிவிப்பதுதான் இதன் பிரதான நோக்கம்.

  உங்களின் "மாடு மேய்க்கும் கண்ணா' இடம்பெறாமல் கச்சேரியை ரசிகர்கள் முடிக்கவிடுவதில்லையே... இந்த "கிரேஸ்' எப்படி வந்தது?

  ஒரு தீம் கன்சர்டிற்காக ஆறு ஆண்டுகளுக்கு முன் இந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்துப் பாடினேன். அதிலிருந்து "மாடு மேய்க்கும் கண்ணா' பாடலுக்கு ஒரு ரசிகர் கூட்டமே உருவாகிவிட்டது. பத்திரிகைகளில் வரும் விமர்சனத்தில் இந்தப் பாடலைக் குறிப்பிட்டு பலர் எழுதியதும் இந்தப் பாட்டின் பிரபல்யத்திற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

  ரசிகர்களின் ரசனை மாறியிருக்கிறதா?

  மாற்றம்தான் நிலையானது என்பார்கள். ரசிகர்களின் ரசிப்புத் திறனும் நாளுக்கு நாள் மாறிக் கொண்டேதான் இருக்கிறது. கர்நாடக இசையையும் ரசிக்கிறார்கள், ஹிந்துஸ்தானி இசையையும் ரசிக்கிறார்கள், மேற்கத்திய இசையையும் ரசிக்கிறார்கள். திரை இசைப் பாடல்களையும் விரும்பிக் கேட்கிறார்கள். அவர்களின் மனதுக்குப் பிடித்த எந்த இசையையும் ரசிக்கிறார்கள். "மனதுக்குப் பிடிக்கிறதா?' என்பதுதான் தற்போது நல்ல இசைக்கான அளவுகோலாக இருக்கின்றது.

  இளம் கலைஞர்களுக்கு உங்களின் அறிவுரை என்ன?

  உங்களுக்குள் இருக்கும் திறமையை உணர்ந்து அதை வெளிக்கொண்டு வாருங்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai