ஃபுல் பார்மில் மஹதி!

ஜெட் வேகத்தில் முன்னேறி கொண்டிருக்கும் இசைக் கலைஞர்கள் வரிசையில் மஹதிக்கு முன்வரிசை இடத்தை கொடுக்கலாம். அடேயப்பா என்னவொரு மனோதர்மம்.
ஃபுல் பார்மில் மஹதி!

ஜெட் வேகத்தில் முன்னேறி கொண்டிருக்கும் இசைக் கலைஞர்கள் வரிசையில் மஹதிக்கு முன்வரிசை இடத்தை கொடுக்கலாம். அடேயப்பா என்னவொரு மனோதர்மம். குரல்வளத்துடன் கூடிய ஆழம். ஒருமுறை கேட்டவர்கள் அடுத்த கச்சேரி எங்கே என்று தேடிச் செல்லும் ரகம் மஹதியின் சங்கீதம். இந்த வருடம் முத்ராவில் நான்கு மணி நேர கச்சேரி பாடப் போகிறாராமே... மஹதியின் வளர்ச்சியும் அவரது சங்கீதத்தின் முதிர்ச்சியும் எப்படிப்பட்டது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

பிரம்மகான சபாவில் நான் நுழையும்போது சற்று நேரமாகிவிட்டது. கச்சேரி தொடங்கி இரண்டு உருப்படியை பாடி முடித்து விட்டிருந்தார் மஹதி. அரங்கத்துக்குள் அடியெடுத்து வைக்கும்போது அப்போதுதான் ஆலாபனையை தொடங்கியிருந்தார். என்னடா புதிதாக இருக்கிறதே என்று பார்த்தால், அட, ராகவர்த்தினி. இது ஒரு அபூர்வமான ராகம். 72 மேளகர்த்தா ராகங்களில் ஒன்று. மிகச் சில கலைஞர்கள் மட்டுமே இந்த ராகத்தை விரும்பி கையாண்டு கேட்டிருக்கிறேன். அவர்களில் ஒருவர் மதுரை சோமு. ஸ்த்ரீ சாரீரத்தில் கேட்கும்போது இன்னும் சுகமாகவே இருக்கிறது.

அன்று சாகித்யத்தை இயற்றிய கோட்டீஸ்வர அய்யர் அங்கே இருந்திருந்தால் மஹதியை மேடைக்கே வந்து பாராட்டியிருப்பார். கேட்டவர்கள் அனைவரும் சொக்கிவிட்டனர்.

விறுவிறுப்புக்கு ஜெகன்மோகினியில் சோபில்லு பாடிவிட்டு தோடி ஆலாபனை. கார்த்திகேய காங்கேயதான் சாகித்யம். வழக்கம்போல மால்மருகு ஷண்முகாவில் நிரவல் செய்யாமல் வேல்மருவும் அமல கரகமலாவில் நிரவல் செய்தது வித்தியாசமாக இருந்தது. ராகம் தானம் பல்லவிக்கு எடுத்துக்கொண்டது தர்மவதி ராகத்தை. பாலமுரளியின் தில்லானாவைப் பாடி கச்சேரியை நிறைவு செய்தார்.

மஹதி ஃபுல் பார்மில் இருக்கிறார். சஞ்சாரங்களில் அப்படியொரு நேர்த்தி. சாரீரம் என்ன வேண்டுமானாலும் பேசும் போலிருக்கிறது. முன்பே சொன்னது போல, ஒருமுறை கேட்டால், மறுமுறை கச்சேரி எங்கே என்று தேடிப் போய் கேட்க வைக்கிறார் மஹதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com