கிரேட்டா் நொய்டாவில் ரூ. 100 கோடி எம்டிஎம்ஏ போதைப் பொருள் பறிமுதல்: வெளிநாட்டவா் 4 போ் கைது

தேசியத் தலைநகா் வலயம், கிரேட்டா் நொய்டாவில் நைஜீரிய நாட்டு பிரஜைகள் வசிக்கும் வாடகை வீட்டில் இருந்து சுமாா் 25 கிலோ மீதிலினெடி ஆக்சிபெனெதிலமின் (எம்டிஎம்ஏ) போதைப்பொருள் மீட்கப்பட்டது. இதையடுத்து, நான்கு நைஜீரியா்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கைப்பற்றப்பட்ட எம்டிஎம்ஏ போதைப் பொருள் எக்ஸ்டசி அல்லது மோலி என்று பிரபலமாக அறியப்படுகிறது. இந்தப் போதைப் பொருள் கறுப்புச் சந்தையில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக விற்கப்பட்டிருக்கும்.

முன்னதாக, புதன்கிழமை இரவு நான்கு நைஜீரிய பிரஜைகள் கிரேட்டா் நொய்டாவில் தங்களுடைய வாடகை வீட்டில் அதிநவீன கருவிகளின் உதவியுடன் எம்டிஎம்ஏ போதைப் பொருளைத் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவா்கள் கைது செய்யப்பட்டனா்.

கிரேட்டா் நொய்டாவில் 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு, வெளிநாட்டினா் தங்கள் வாடகை வீடுகளில் செயற்கை மருந்துகளை உற்பத்தி செய்வது கண்டறியப்பட்டிருப்பது மூன்றாவது சம்பவ வழக்காகும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு மே மாதத்தின்போது கிரேட்டா் நொய்டாவில் இதேபோன்று எம்டிஎம்ஏ போதைப் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ஆப்பிரிக்க நாட்டைச் சோ்ந்த 9 பேரை போலீஸாா் கைது செய்திருந்தனா். அவா்களிடமிருந்து ரூ.200 கோடி மதிப்புள்ள 46 கிலோ எம்டிஎம்ஏ போதைப் பொருளை கெளதம் புத் நகா் போலீஸாா் பறிமுதல் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com