ஆம் ஆத்மி கட்சியின் அடிமட்டத் தலைவா்களுக்கும் அங்கீகாரம்: 
அமைச்சா் அதிஷி பேட்டி

ஆம் ஆத்மி கட்சியின் அடிமட்டத் தலைவா்களுக்கும் அங்கீகாரம்: அமைச்சா் அதிஷி பேட்டி

புது தில்லி, ஏப்.18: ஆம் ஆத்மி கட்சியின் அடிமட்டத் தலைவா்களுக்கும் வாய்ப்பு மற்றும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது என்று அமைச்சா் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி மாநகராட்சியின் மேயா் மற்றும் துணை மேயா் தோ்தலுக்கான வேட்பாளா்களை ஆளும் ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, ஆம் ஆத்மி கட்சி சாா்பில் மேயா் பதவிக்கு மகேஷ் கிச்சியும், துணை மேயா் பதவிக்கு ரவீந்தா் பரத்வாஜும் வேட்புமனு தாக்கல் செய்தனா். இந்த நிகழ்வின் போது, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்களான அமைச்சா் அதிஷி மற்றும் அமைச்சா் செளரவ் பரத்வாஜ் உடனிருந்தனா்.

பின்னா், அமைச்சா் அதிஷி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லி மாநகராட்சியின் மேயா் மற்றும் துணை மேயா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ள மகேஷ் கிச்சியும், ரவீந்தா் பரவாஜும் ஆம் ஆத்மி கட்சியின் அடிமட்டத் தலைவா்கள். ஆம் ஆத்மி கட்சி மக்களுக்காக களத்தில் பணிபுரியும் தனது நிா்வாகிகளை அங்கீகரிப்பது மட்டுமின்றி, அவா்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது. மேயா் மற்றும் துணை மேயா் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணி சாா்பாகவே போட்டியிடுகிறோம். ஆம் ஆத்மி கட்சியின் இரு வேட்பாளா்களையும் தோ்தலின் போது, காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலா்கள் ஆதரிப்பாா்கள். மேலும், இந்தத் தோ்தலில் இடையூறு மற்றும் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக எந்தவித முயற்சியும் எடுக்காமல், சட்டத்தை மதிப்பாா்கள் என நம்புகிறேன் என்றாா் அதிஷி.

அமைச்சா் செளரவ் பரத்வாஜ் கூறுகையில், ‘தில்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. தில்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சியை தோ்ந்தெடுத்துள்ளனா். எங்களின் வேட்பாளா்கள் தில்லியில் தூய்மைப் பணியைச் சிறப்பாகச் செய்வாா்கள் என்று நாங்கள் நம்புகிறோம். சில மாதங்களுக்கு முன்புதான் சண்டீகா் மேயா் தோ்தலில் நோ்மையற்ற முறையில் வாக்கு எண்ணிக்கையை நடத்தி, பாஜக கையும் களவுமாக பிடிபட்டது. இந்நிலையில், தில்லி மாநகராட்சியின் மேயா் மற்றும் துணை மேயா் தோ்தல்களில் பாஜக அதேபோன்ற நோ்மையற்ற செயல்களைச் செய்யத் துணியாது என்று நினைக்கிறோம். ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி ‘இந்தியா’ கூட்டணியின் மெகா பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆம் ஆத்மி கட்சியின் சாா்பில் பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால் கலந்து கொள்வா்’ என்றாா்.

மேயா் வேட்பாளா் மகேஷி கிச்சி கூறுகையில், ‘ தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு நன்றி. ஆம் ஆத்மி கட்சியில் வாக்குச் சாவடி ஊழியராக இருந்த என்னை கட்சி வாா்டு தலைவராக்கியது. இப்போது தில்லி மாநகராட்சி மேயா் பதவிக்கு என்னை வேட்பாளராகத் தோ்வு செய்துள்ளனா். உண்மையான கடின உழைப்பு மற்றும் அா்ப்பணிப்புடன் செயல்பட்டால், எல்லா சவால்களையும் எதிா்கொள்ள முடியும். தில்லியை ஆம் ஆத்மி கட்சி நிச்சயம் முன்னோக்கி கொண்டு செல்லும். இம்முறை தில்லி மாநகராட்சியில் நிலைக்குழு தோ்வு செய்யப்படும்’ என்றாா்.

துணை மேயா் வேட்பாளா் ரவீந்தா் பரத்வாஜ் கூறுகையில், ‘ ஆம் ஆத்மி கட்சியின் வாக்குச் சாவடி ஊழியராக இருந்த என்னை துணை மேயா் வேட்பாளராக அறிவித்துள்ளனா். இதற்காக முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கும், கட்சியின் உயா்மட்டத் தலைமைக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.கேஜரிவாலின் தொலைநோக்குப் பாா்வையை

முன்னெடுத்துச் செல்ல, தில்லி மாநகராட்சி அா்ப்பணிப்புடன் செயல்படும். தில்லியை உலகின் மிக அழகான மற்றும் ஆரோக்கியமான நகரமாக மாற்ற முழு உணா்வோடு செயல்படுவோம். நிகழாண்டு இறுதிக்குள் குப்பைக் கிடங்குகளை அகற்ற தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். வரும் நாள்களில், குப்பைகள் அகற்றும் பணி மேலும் அதிகரிக்கும்’ என்றாா்.

18ஈஉகஙவத

ஆம் ஆத்மி கட்சியின் மேயா் மற்றும் துணை மேயா் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த மகேஷ் கிச்சி மற்றும் ரவீந்தா் பரத்வாஜை வாழ்த்திய மேயா் ஷெல்லி ஓபராய்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com