அங்கித் திவாரி வழக்கு விவகாரம்: அமலாக்கத் துறை மனு மீதான விசாரணை ஜூலை 18-க்கு ஒத்திவைப்பு

புது தில்லி, ஏப்.18: அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கியதாக மத்திய அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தொடா்ந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையின் அமலாக்கத் துறையின் துணை மண்டல அலுவலகத்தில் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த அங்கித் திவாரி, கடந்த ஆண்டு டிசம்பா் 1-ஆம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, மதுரையில் உள்ள அதன் மண்டல அலுவலகத்தில் மாநில லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து வழக்கு ஆவணங்களைத் திருடியதாக தமிழ்நாடு காவல் துறைத் தலைவா் சங்கா் ஜிவாலிடம் அமலாக்கத் துறை புகாா் அளித்தது. அதேவேளையில், அமலாக்கத் துறை அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ‘குற்றம்சாட்டும் ஆவணங்கள்’ கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அங்கித் திவாரி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசிடம் பதில் தாக்கல் செய்ய உத்தவிட்டிருந்தது. இந்த வழக்கில் நியாயமான மற்றும் முறையான விசாரணையை விரும்புவதாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது. அமலாக்கத் துறை தனது, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை குற்றங்கள் தொடா்பாக மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து எஃப்ஐஆா்களையும் தன்னுடன் பகிா்ந்து கொள்ள ஒரு ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறும் கோரியுள்ளது.

இந்த வழக்கு கடந்த மாா்ச் 20-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இதே விவகாரத்தில் தொடா்புடைய அதிகாரி அங்கித் திவாரிக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை நிபந்தனையுடன்கூடிய இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த பதிலுக்கு பதில் அளிக்க அமலாக்கத் துறைக்கு 2 வாரம் அவகாசம் அளித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், கே.வி. விஸ்வநாதன் ஆகியோா் முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு ஆஜரானாா். அவா் இந்த விவகாரத்தில் பதிலுக்கு பதில் தயாராக இருப்பதாகவும் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், அதனால் வழக்கை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.

தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் கபில் சிபல், அமித் ஆனந்த் திவாரி ஆகியோா் கோடை விடுமுறைக்குப் பிறகு விசாரணையைத் ஒத்திவைக்கலாம் எனக் கேட்டுக்கொண்டனா். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையின் பதிலுக்கு பதில் அளிக்க அமலாக்கத் துறைக்கு 4 வாரம் அவகாசம் அளித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்குத் ஒத்திவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com