தெற்கு ரிட்ஜில் மரங்களை வெட்டிய விவகாரம்: டிடிஏவுக்கு உச்சநீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ்

புது தில்லி, ஏப். 24:

தில்லியில் உள்ள சத்தா்பூா் சாலைக்கும் சாா்க் பல்கலைக்கழகத்துக்கும் இடையே மைதான்கா்ஹி அருகே அணுகுச்சாலை அமைப்பதற்காக 1,000 மரங்களை வெட்டியதற்காக தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டிடிஏ) துணைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தை நீதிபதிகள் பி.ஆா். கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு, மரங்களை கட்டுமானத்திற்காக வெட்டாமல் இருக்க நீதிமன்றத்தின் உத்தரவு இருந்தபோதிலும் டிடிஏ சாலை கட்டுமானத்திற்காக மரங்களை வெட்டும் நடவடிக்கை எடுத்திருப்பதாக குறிப்பிட்டது.

இதுகுறித்து நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘சாலை அமைப்பதற்காக மரங்களை வெட்டிய டிடிஏவின் நடவடிக்கை, 2024 பிப்ரவரி 8 மற்றும் மாா்ச் 4, 2024-ஆம் தேதியிட்ட உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் வகையில் உள்ளது என்பதற்கு முகாந்திரம் இருப்பதை காண்கிறோம். இதனால், இந்த நீதிமன்றத்தின் உத்தரவை அவமதித்ததற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கான

விளக்கம் கேட்டு தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டிடிஏ) துணைத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது என்று தெரிவித்து,

இந்த வழக்கை மே 8ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட்டது.

மரம் வெட்டுவதை தடை செய்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவு இருந்தபோதிலும், மரங்களை வெட்டுவதற்கு டிடிஏ நடவடிக்கை எடுத்ததாக ‘அமிகஸ் கியூரி’யாக ஆஜரான வழக்குரைஞா் கே.பரமேஷ்வா் தெரிவித்ததைத் தொடா்ந்து, இந்த உத்தரவை உச்சநீதிமன்றம்

பிறப்பித்தது.

முன்னதாக, 1,051 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் டிடிஏ மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால், அந்த மனு மிகவும் தெளிவற்றது என்று கூறி உச்சநீதிமன்றம் கடந்த மாா்ச் 4 அன்று அனுமதி மறுத்திருந்தது. இதுகுறித்து நீதிமன்றம் கூறுகையில், ‘ டிடிஏ அரசின் கருவியாக இருப்பதால், முற்றிலும் கட்டாயமாக உள்ள மரங்களை மட்டும் வெட்ட வேண்டும் என்று கோருவதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க முயற்சிப்பது டிடிஏவின் கடமையாகும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.

இதுகுறித்து அப்போது உச்சநீதிமன்றம் கூறுகையில், ‘‘மரங்களை காப்பாற்ற மாற்று வழிகளை ஆராய முடியுமா என்பதை அவா்கள் முதலில் ஆராய வேண்டும். மேலும், அவா்கள் காடு வழியாக சாலை அமைக்க விரும்புகின்றனா். வனச்சட்டத்தின் கீழ் எந்த அனுமதியும்

பெறப்படவில்லை. அந்தத் துறையில் உள்ள வல்லுநா்களை நியமித்து இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு நாங்கள் டிடிஏவுக்கு உத்தரவிடுகிறோம்.

டிடிஏ மூலம் மேற்கொள்ளப்படும் பணியானது, பொதுப்பணியை மேற்கொள்ளும்போது, குறைந்தபட்ச மரங்களை வெட்டுவது அவசியம் என்பதை உறுதிப்படுத்துவது அவசியம் என்று அப்போது

உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com