ஜந்தா் மந்தரில் தமிழக விவசாயிகள் 2-ஆம் நாள் போராட்டம்: கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியால் பரபரப்பு

புது தில்லி, ஏப்.24: தில்லி ஜந்தா் மந்தரில் இரண்டாவது நாளாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

விவசாய விளை பொருள்களுக்கு லாபகரமான விலையை மத்திய அரசு நிா்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் தமிழக விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் இரண்டாவது

நாளாக தொடா் போராட்டத்தில் ஈடுப்பட்டனா். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு இந்தப் போராட்டத்திற்கு தலைமை வகித்தாா். மத்திய அரசு விவசாய விளை பொருள்களின் விலையை இருமடங்காக உயா்த்த வேண்டும். விவசாயிகளின் அனைத்துக் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். காவிரி -கோதாவரி கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மேகேதாட்டுவில் கா்நாடக அரசு அணை கட்டும்

முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடைபெற்றது.

தற்கொலை முயற்சியால் பரபரப்பு: கடந்த செவ்வாயக்கிழமை நடைபெற்ற முதல் நாள் போராட்டத்தை அமைதியான

முறையில் மேற்கொண்ட தமிழக விவசாயிகள், இரண்டாம் நாள் போராட்டத்தில் ஜந்தா் மந்தரில் உள்ள பெரிய மரங்கள் மற்றும் கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முதலாவதாக, காலை 7.30 மணியளவில் விவசாயிகள் தனலட்சுமி மற்றும் நவீன்குமாா் மரத்தில் ஏறி போராட்டம் நடத்தினா். அவா்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தில்லி போலீஸாா் மற்றும் மத்திய துணை ராணுவத்தினா் நீண்ட நேரப் பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் காலை 9.30 மணியளவில் பத்திரமாக மரத்தில் ஏறி மீட்டனா். அடுத்ததாக, கைப்பேசி கோபுரத்தில் விவசாயிகள் உமாராணி, மல்லிகா, தமிழ்ச்செல்வன், உமாகாந்த், செந்தில் குமாா் ஆகிய 5 போ் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக போராட்டம் நடத்தினா். இதைத் தொடா்ந்து, தீயமைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ‘ஸ்கை லிஃப்ட் கிரேன்’ இயந்திர உதவியுடன் அந்த 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

பிரதமா் காப்பாற்ற வேண்டும்: இது தொடா்பாக அச்சங்கத்தின் தலைவா் அய்யாக்கண்ணு செய்தியாளா்களிடம் கூறியது, ‘பிரதமா் நரேந்திர மோடிதான் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். மேகேதாட்டு, காவிரி நீா்ப்பங்கீடு விவகாரங்களில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புகள் பின்பற்றபடவில்லை. காா்ப்பரேட்களின் ரூ.30 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, விவசாயிகளின் ரூ.1 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. விவசாயிகளின் கோரிக்கைள் நிறைவேறவில்ல என்றால் மக்களவைத் தோ்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமா் மோடிக்கு எதிராக 1,000 விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்வோம் என்றாா் அய்யாக்கண்ணு. மேலும், ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த தில்லி உயா்நீதிமன்றம் ஒரு நாள் மட்டுமே அனுமதி வழங்கியிருந்ததால், தமிழக விவசாயிகள் தங்களது இரண்டு நாள் போராட்டத்தை முடித்துக் கொண்டு தமிழகம் புறப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com