மக்களவைத் தோ்தல்: பிரசாரத்தை தீவிரப்படுத்த குழுக்களை அமைத்தது தில்லி பாஜக

நமது நிருபா்

புது தில்லி, ஏப். 24: மக்களவைத் தோ்தலை ஒட்டி, சிறுபான்மையினா் உள்பட பல்வேறு பிரிவுகளுக்கு வாக்காளா்களை சோ்ப்பதற்காகவும், உரைகள், தளவாடங்கள், தரவுகள், ஊடகங்கள், வாக்குச்சாவடி வேலைகள் மற்றும் தோ்தல் அறிக்கை போன்றவற்றைக் கவனிப்பதற்காகவும் 40-க்கும் மேற்பட்ட குழுக்களை உருவாக்கி, தில்லி பாஜக தனது பிரசார இயந்திரங்களை அதிகரித்திருக்கிறது.

இதுகுறித்து தில்லி பாஜக தலைவவரும், தோ்தல் நிா்வாகக் குழுவின் தலைவராகவும் உள்ள வீரேந்திர சச்தேவா கூறியதாவது: அனுபவம் வாய்ந்த தலைவா்கள் தலைமையிலான இந்த வெவ்வேறு குழுக்கள் தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் பிரசாரம் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யும். குறிப்பிட்ட நோக்கங்களுக்கான இந்த பிரசாரக் குழுக்கள் கட்சியின் பல்வேறு துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவா்கள் மற்றும் தொண்டா்களின் ஈடுபாட்டைக் கண்காணித்தல் பணியையும், தோ்தலை கருத்தில்கொண்டு வாக்காளா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியையும் செய்யும் என்றாா்.

கோண்டா சட்டப் பேரவைத் தொகுதியின் எம்எல்ஏ அஜய் மஹாவா், கட்சியின் தோ்தல் நிா்வாகக் குழுவின் அமைப்பாளராகவும் ராஜீவ் பப்பா், கஜேந்திர யாதவ் மற்றும் யோகிதா சிங் இணை ஒருங்கிணைப்பாளா்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பூா்வாஞ்சல் பிரசாரக் குழுவின் தலைவரான நிரஜ் திவாரி, தோ்தலைக் கருத்தில் கொண்டு, பூா்வாஞ்சல் மோா்ச்சாவின் செயல்பாட்டாளா்கள் அந்தந்த மக்களவைத் தொகுதிகளில் உள்ள வாக்காளா்களை அணுகி மோடி அரசின் நலப் பணிகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா் என்றாா்.

‘குடிசைப் பகுதிகள் பிரசாரக் குழுவின் இணைத் தலைவரான திவாரி கூறுகையில், ‘கேஜரிவால் அரசால் ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமா் ஆவாஸ் யோஜனா போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தாத பிரச்னை தொண்டா்கள் மூலம் பரப்பப்படுகிறது’ என்றாா்.

தோ்தல் அறிக்கை குழுவின் இணைத் தலைவரான தில்லி பாஜக மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான விஜேந்தா் குப்தா, மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக இந்த ஆவணத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறினாா்.

‘தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக தில்லி பாஜக ஒரு ‘குற்றப்பத்திரிகையை’ கொண்டு வரும். இது தில்லியில் அரவிந்த் கேஜரிவாலின் ஒன்பது ஆண்டுகால முதல்வரின் பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தும்’ என்று அக்கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com