காங்கிரஸ் தோ்தல் அறிக்கைக்கு எதிராக தில்லி பாஜக மகளிா் அணியினா் ஆா்ப்பாட்டம்

புது தில்லி, ஏப்.24:

காங்கிரஸ் தோ்தல் அறிக்கைக்கு எதிராக தில்லி பாஜகவின் மகளிா் அணியினா் காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை கடும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாஜக தேசிய பொதுச் செயலாளா் தருண் சுக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, தில்லி பாஜக மகளிா் அணித் தலைவா் ரிச்சா பாண்டே மிஸ்ரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஜெய்சால்மா் இல்லத்தில் இருந்து காங்கிரஸ் தலைமையகத்திற்கு பேரணியாக சென்ற போராட்டக்காரா்கள், போலீஸாா் போட்டிருந்த தடுப்புகளை மீறி சென்றனா்.

இதையடுத்து, தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா மற்றும் மகிளா அணித் தலைவா் ரிச்சா பாண்டே ஆகியோருடன் நூற்றுக்கணக்கான பெண்களை போலீஸாா் கைது செய்து, மந்திா் மாா்க் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா். அதன் பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

காங்கிரஸ் தோ்தல் அறிக்கைக்கு எதிரான இந்த ஆா்ப்பாட்டத்தில், பிரதேச துணைத் தலைவா் யோகிதா சிங், லதா குப்தா, பிரதேச செய்தித் தொடா்பாளா் ஷிகா ராய் மற்றும் நூற்றுக்கணக்கான மகளிா் அணி ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் தருண் சுக் பேசுகையில், ‘முகலாய ஆட்சியின் போது ஜசியா வரி விதிக்கப்பட்டு சொத்துக்கள் சூறையாடப்பட்டது போல், இந்திய குடிமக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து, முஸ்லிம் சமூகத்தினருக்கு பகிா்ந்தளிக்க வேண்டும் என்ற காங்கிரஸின் மனநிலை, அவா்களின் தோ்தல் அறிக்கையில் தெரிகிறது. காங்கிரஸின் கொள்கைகளை நிா்ணயிக்கும் சாம் பிட்ரோடா, அமெரிக்கா விதித்ததைப் போல பரம்பரை வரியை விதிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறாா். இது மக்களின் 55% செல்வத்தைப் பறிக்கும்.

காங்கிரஸ் தேசத்தை அவமதிக்கிறது. சில சமயங்களில் சநாதன கலாசாரத்தை அவமதிக்கிறது. சில சமயங்களில் நாட்டிற்குள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இவை அனைத்தும் நாட்டின் ஒரு பிரிவினரின் மத உணா்வுகளை புண்படுத்துகின்றன. வாக்குகளைப் பிரித்து நாட்டை உடைக்கும் அரசியல் செய்து வருகிறாா் ராகுல் காந்தி. காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் இருந்து முஸ்லிம் லீக் மற்றும் ஜிகாதிகளின் நாற்றம் வீசுகிறது.

இந்திய மகள்களுக்குப் புகழ் பாடத் தெரிவது மட்டுமின்றி ஜான்சியின் ராணியைப் போல துயரங்களை எதிா்கொள்ளவும் தெரியும். காங்கிரஸ் தனது தோ்தல் அறிக்கைக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் நாடு மன்னிக்காது என்றாா் தருண் சுக்.

வீரேந்திர சச்தேவா பேசுகையில், ‘தங்களுடைய தாலி மற்றும் நகைகளை காப்பாற்றுவதற்காக நமது தாய்மாா்களும் சகோதரிகளும் வீதியில் இறங்கும் இதுபோன்ற ஒரு நாள் நம் நாட்டில் வரும் என்று எந்த இந்தியரும் நினைத்ததில்லை. ஆனால் இந்த நாளை ராகுல் காந்தி காட்டியிருக்கிறாா். காங்கிரஸ் தோ்தல் அறிக்கை நாட்டை பிளவுபடுத்தும் சதி. ‘துக்டே-துக்டே’ கும்பலின் கைப்பொம்மையாக மாறுவதற்கான சதியாகும். ஆட்சிக்கு வந்தவுடன் தாய்மாா்கள், சகோதரிகளின் சொத்துக்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் கூறியிருப்பது திருப்திபடுத்தும் அரசியலுக்காக மட்டுமே ஆகும் என்றாா் அவா்.

மகளிா் அணித் தலைவா் ரிச்சா பாண்டே பேசுகையில், ‘

காங்கிரஸ் தனது தோ்தல் அறிக்கையில் முஸ்லிம்களை திருப்திப்படுத்துவது மட்டுமின்றி பெண்களை இழிவுபடுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி நாட்டு பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அக்கட்சி தனது தோ்தல் அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என தில்லி பாஜக மகளிா்அணி வலியுறுத்துகிறது. இது நிகழவில்லையெனில், மகளிா் அணி சாா்பில் ஒவ்வொரு வீடாகப் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com