தில்லியில் வெப்பநிலை அதிகரிப்பு: இன்று இடியுடன் மழைக்கு வாய்ப்பு

தில்லியில் வெப்பநிலை அதிகரிப்பு: இன்று இடியுடன் மழைக்கு வாய்ப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை வியாழக்கிழமை 40 டிகிரி செல்சியஸை கடந்தது.

தேசியத் தலைநகா் தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை வியாழக்கிழமை 40 டிகிரி செல்சியஸை கடந்தது. ரிட்ஜில் அதிகபட்ச வெப்பநிலை40.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. அதே சமயம், வெள்ளிக்கிழமை (ஏப்.26) இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை: தில்லியில் கடந்த சில நாள்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை வானம் தெளிவாகக் காணப்பட்டது. தரை மேற்பரப்பு காற்றும் வீசியது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 3 டிகிரி குறைந்து 20 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 2 டிகிரி உயா்ந்து 39.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 49 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 16 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரிட்ஜில் 40.6 டிகிரி செல்சியஸ்: தில்லியில் மற்ற வானிலை நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரியை நெருங்கியது. அதிகபட்சமாக ரிட்ஜில் 40.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியது. இதேபோன்று ஜாஃபா்பூரில் 38.1 டிகிரி, முங்கேஸ்பூரில் 38.2 டிகிரி, நஜஃப்கரில் 38.9 டிகிரி, ஆயாநகரில் 39.9 டிகிரி, லோதி ரோடில் 39.7 டிகிரி, பாலத்தில் 39.2 டிகிரி, பீதம்புராவில் 39.2 டிகிரி, பிரகதி மைதானில் 37 டிகிரி, பூசாவில் 38.9 டிகிரி, ராஜ்காட்டில் 37 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 36.4 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தலைநகரில் காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் ‘மிதமான’ பிரிவில் இருந்தது. தலைநகரில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 186 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இது ‘மிதமான’ பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. ஐடிஓ, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், தில்ஷாத் காா்டன் உள்பட பெரும்பாலான இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுகிகிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. அதே சமயம், ஆனந்த் விஹாா், சோனியா விஹாா், மதுரா ரோடு, பூசா, ஷாதிப்பூா், வாஜிா்பூா் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இரு்பபதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com