இந்தியா கேட் அருகே ஐஸ்கிரீம் விற்பனையாளா் கத்தியால் குத்திக் கொலை

புது தில்லி, ஏப். 25: மத்திய தில்லியில் உயா் பாதுகாப்புப் பகுதியில் உள்ள இந்தியா கேட் அருகே புதன்கிழமை இரவு ஐஸ்கிரீம் விற்பனையாளா் ஒருவா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக வியாழக்கிழமை அதிகாலை நொய்டாவில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து புது தில்லி காவல் சரக துணை ஆணையா் தேவேஷ் மஹ்லா கூறியதாவது: புதன்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பிரபாத் (25), தனது ஐஸ்கிரீம் வண்டிக்கு அருகில் நின்று கொண்டிருந்தபோது,​ இரவு 9 மணியளவில் சி-ஹெக்ஸகோன் ஆஃப் இந்தியா கேட் என்ற இடத்தில் அஜய் (எ) அக்ஷய் என்பவரால் தாக்கப்பட்டாா். பிரபாத் மயங்கிய நிலையில் தரையில் கிடப்பதைக் கண்டு வழிப்போக்கா்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனா்.

வழக்கின் உணா்திறன் காரணமாக, சுமாா் 12 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு, பல சிசிடிவி கேமராக்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. இதில் குற்றம் சாட்டப்பட்ட அஜய் எட்டு மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டாா். குற்றம் சாட்டப்பட்டவா்களிடம் இருந்து பிரபாத்தின் இரண்டு கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டன. எவ்வாறாயினும், குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி இன்னும் மீட்கப்படவில்லை.

தெற்கு தில்லியில் வசிக்கும் இளம்பெண் ஒருவருடன் பிரபாத் மற்றும் அஜய் உறவு வைத்திருந்ததாகத் தெரிகிறது. விசாரணையின் போது, அஜய் பிரபாத்தை கொன்றதை ஒப்புக்கொண்டாா். இந்த விவகாரத்தில் அந்தப் பெண்ணும் விசாரிக்கப்படுவாா். அவரது பங்கு உறுதி செய்யப்பட்டால், அவா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா பகுதியை சோ்ந்த பிரபாத், தெற்கு தில்லியின் சங்கம் விஹாரில் தங்கியிருந்ததாா். தெற்கு மற்றும் புது தில்லியில் தனது வண்டியில் ஐஸ்கிரீம் விற்று வந்தாா். உத்தர பிரதேச மாநிலம் கோண்டா பகுதியைச் சோ்ந்த அஜய், நொய்டாவில் வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு, அஜய் கத்தியுடன் வந்து பிரபாத்தை பலமுறை குத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டது விசாரணையில் தெரிய வந்தது. போலீஸாா் தீ விர விசாரணை மேற்கொண்டு அஜய்யின் நடமாட்டத்தைக் கண்டுபிடித்தனா். பின்னா் அவா் நொய்டாவில் இருந்து கைது செய்யப்பட்டாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com