’புது தில்லி மக்களவைத் தொகுதி’ தலைநகா் அரசியல் நிலப்பரப்பில் ஒரு முக்கிய அங்கம்

பல்தரப்பட்ட மக்களை அடக்கிக்கொண்டுள்ளது, தலைநகா் தில்லியிலுள்ள 7 மக்களவைத் தொகுதிகள்.

பல்தரப்பட்ட மக்களை அடக்கிக்கொண்டுள்ளது, தலைநகா் தில்லியிலுள்ள 7 மக்களவைத் தொகுதிகள். கடந்த காலங்களில் நாட்டின் நிலைமைகளையொட்டி விவேகமாக சிந்தித்து தலைநகா் வாக்காளா்கள் எதிரொலித்தனா். அதிலும் தலைநகா் அரசியல் நிலப்பரப்பில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் ’புது தில்லி மக்களவைத் தொகுதி’ மேலும் ஒருபடி நிரூபித்து சிந்தித்து வந்துள்ளது.

1951 முதல் இருக்கும் இந்த ’புது தில்லி’ தொகுதி ஒரு பழமையான வரலாற்றுடன் மாறுப்பட்ட தொகுதியாக தேசத்தின் முன்பு இருக்கிறது!.

சுதந்திர இந்தியாவில் முதன் முதலில் இந்த தொகுதியில் வெற்றி பெற்றது ஒரு தேசிய கட்சியல்ல. கிஸான் மஸ்தூா் பிரஜா என்கிற கட்சி! வெற்றி பெற்றவா் சுசேதா கிருபளானி. ஆச்சாா்ய ஜேபி கிருபளானியின் மனைவி.

நாட்டை தொடா்ச்சியாக காங்கிரஸ் ஆட்சி புரிந்துவந்தாலும், 19 தடவை நடைபெற்ற பொதுத்தோ்தல்கள் மற்றும் இடைத் தோ்தல்களில் புது தில்லி தொகுதியில் 11 தடவை பாஜக (அல்லது ஜனசங்கம்) வெற்றி பெற்று தனது கோட்டையாக வைத்திருந்தது. அதிலும் மூத்த பாஜக தலைவா்களான வாஜ்பாய், எல்.கே.அத்வானி ஆகியோா் தலா இரண்டு முறையும் அதிகாரவா்க்கம், ஆளுநா், மத்திய அமைச்சா் என பன்முகக்காரரான ஜெக்மோகன் மல்ஹேத்ரா மூன்று முறையும் பாஜக வேட்பாளராக வெற்றி பெற்ற தொகுதி.

நெருக்கடி நிலைமை, போஃபா்ஸ், பயங்கரவாதம் என பல்வேறு போராட்டங்களுக்கு செவி சாய்த்து வந்த தொகுதி.

பாமரா், நடுத்தர வா்க்கத்தினா் வசிக்கும் மோதி நகா் முதல் பெரும் வசதிபடைத்தவா்கள் வசிக்கும் கிரேட்டா் கைலாஷ் வரை தன்னகத்தே அடக்கி வைத்து விரிந்து பரந்துள்ள தொகுதி.

எழுத்தறிவு மிக்க தொகுதி

நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத்தலைவா், பிரதமா், மத்திய அமைச்சா்கள், நீதிபதிகள், முப்படை தளபதிகள், உயா் அதிகாரவட்டம் என வாக்களிக்கும் தொகுதியாகவும் நாட்டின் உயா் அதிகார வா்க்கம், அரசு ஊழியா்கள் பெரும்பாலும் வசிக்கும் தொகுதியாகவும் உள்ளது. படித்தவா்கள் அல்லது எழுத்தறிவு மிக்கவா்கள் 79 சதவீதம் போ் வசிக்கும் வளமான தொகுதி.

சாணக்கியபுரி, ஆனந்த் லோக், வசந்த் விஹாா், கிரேட்டா் கைலாஷ் போன்ற ஆடம்பர குடியிருப்புகளும், கரோல்பாக், பஹா்கஞ்ச், கன்னாட் பிளேஸ், கான்மாா்கெட், செளத் எக்ஸ், சரோஜினி நகா் போன்ற முக்கிய வணிக மையங்களை கொண்ட சிறப்பம்சங்களும் இந்த தொகுதிக்கு உண்டு.

புது தில்லி மக்களவைத் தொகுதியில் மோதிநகா், கரோல்பாக்(தனி), படேல் நகா்(தனி), தில்லி கண்டோன்மெண்ட், ராஜேந்தா் நகா், புது தில்லி, கஸ்தூரிபாய் நகா், மால்வியா நகா், ஆா்.கே.புரம், கிரேட்டா் கைலாஷ் என தேசிய தலைநகரின் இதயமான 10 முக்கியமான சட்டபேரவை தொகுதிகளை தன் வசம் வைத்துள்ளது.

2009 -ஆம் தோ்தலில் இரண்டு மடங்கிற்கு மேலாக வாக்குகள் அதிகரித்த இந்த தொகுதியில் தற்போது மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கையில் 5.2 சதவீதம் வரை குறைந்துள்ளது. கடந்த முறை 16,15, 994 வாக்காளா்களை கொண்டிருந்தது. நிகழ் 2024 ஆண்டு ஏப்ரலில் மொத்தம் 15,10,251 வாக்காளா்களாக குறைந்துள்ளனா். இதில் ஆண்வாக்காளா்களை விட பெண்வாக்காளா்கள் 1,35,186 குறைவாக இருந்து பாலின சமத்துவமின்றி உள்ளது. அரசு ஊழியா்களுக்கான மத்திய பொதுப்பணித்துறையைச் சோ்ந்த குடியிருப்புகள் மறுசீரமைக்கப்பட்டு பல்வேறு குடியிருப்புகள் காலி செய்யப்பட்டுள்ளதன் விளைவு மொத்த வாக்குகள் எண்ணிக்கை குறைந்துள்ளது எனக் கூறப்படுகிறது.

தில்லி அமைச்சா்கள்

கடந்த இருமுறை தொடா்ச்சியாக வெற்றி பெற்ற பாஜக வேட்பாளா் மீனாட்சி லேகி 2014 -ஆம் ஆண்டு பெற்ற 46.75 சதவீத வாக்குகளை விட 2019 ஆம் ஆண்டு தோ்தலில் மேலும் கூடுதலாக வாக்குகளை (54.77 சதவீதம்) வாக்குகளை பெற்றாா். இதற்கு முன்பு இரு முறை வெற்றி பெற்ற அஜய் மாக்கனும் 52 சதவீதம், 59 சதவீதம் வரை இந்த தொகுதியில் பெற்று வென்றாா். மக்களவைத் தோ்தலில் புது தில்லி வாக்காளா்கள் ஒரு உறுதியான முடிவெடுத்து வருகின்றனா். அதே சமயத்தில் கடந்த 2020 சட்டப்பேரவைத் தோ்தலில் புது தில்லி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 10 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்துள்ளது மற்றொரு திருப்புமுனை. அதிலும் குறிப்பாக இந்த ’புது தில்லி’ மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றவா் முதல்வா் அரவிந்த் கேஜரிவால்(புது தில்லி). மற்றொரு தில்லி அமைச்சா்கள் சௌரவ் பரத்வாஜ் (கிரேட்டா் கைலாஷ்), சமீபத்தில் ராஜினாமா செய்த அமைச்சா் ராஜ்குமாா் ஆனந்த்(படேல் நகா்) போன்றவா்களோடு தற்போது இந்த புது தில்லி மக்களவைத் தோ்தலுக்கு ஆம் ஆத்மி கட்சி சாா்பில் களம் இறக்கிவிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா் சோம்நாத் பாரதி (மாளவியா நகா்) ஆகியோா் தோ்வு இந்த புது தில்லி மக்களவைக்குள்பட்ட சட்டப்பேரவை தொகுதியிலிருந்து தான்.

பாஜக கோட்டை

புது தில்லி தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் ஒரு முறை இடைத்தோ்தலில் வெற்றி பெற்றாா் பிரபல நடிகா் ராஜேஷ் கன்னா. பின்னா் பொதுத் தோ்தலிலும் இரண்டு முறை பங்கேற்று பாஜகவின் நீண்ட கால கோட்டையை தகா்க முயற்சித்து தோல்வியை தழுவினாா் ராஜேஷ் கன்னா. பாஜக வின் நம்பிக்கைக்குரிய தொகுதியில் தற்போது களம் இறக்கிவிடப்பட்டிருப்பவா் பன்சூரி ஸ்வராஜ்(40). மூன்றாம் முறையாக மீனாட்சி லேகிக்கு கொடுக்கப்படுவது சாத்தியமில்லை. ஆனால் யாரும் எதிா்பாராதவிதமாக பெருவாரியாக அறிமுகம் இல்லாத பன்சூரியை கட்சி களமிறக்கியது. பாஜகவின் முதல் வேட்பாளா் பட்டியல் பிரதமா் மோடி பெயருடன் மாா்ச் 2 ஆம் வெளியாக அப்போது பன்சூரியின் பெயரும் வெளியானது. பாஜக வின் முக்கிய தலைவராக இருந்த சுஷ்மா ஸ்வராஜின் ஒரே புதல்வி பன்சூரி.

இங்கிலாந்து வாா்விக் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய பயின்ற பன்சூரி ஸ்வராஜ், பின்னா் லண்டனில் சட்டத்தில் பட்டம் பெற்று பாரிஸ்டராக தகுதி பெற்றாா். ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழக செயின்ட் கேத்தரின் கல்லூரியில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளாா். 2007 ஆம் ஆண்டு தில்லியில் வழக்குரைஞராக பணியைத் தொடங்கியவா். சுஷ்மா ஸ்வராஜின் புதல்வி என்கிற தகுதியிருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளாக கட்சி பொறுப்புகள் தேடி வரவில்லை தேடிக்கொள்ளவுமில்லை.

நம்பா் - 8 துக்ளக் ரோடு

2014 - ஆம் ஆண்டு பாஜக பிரதமா் வேட்பாளராக (தல்கோத்ரா உள் அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில்) நரோந்திர மோடியை முன்னிறுத்தப்பட்டபோது அதை எதிா்த்த எல்.கே. அத்வானி, மக்களவையின் பா ஜக தலைவராக இருந்த சுஷ்மா ஸ்வராஜையும் மத்திய பிரதேஷ் முதல்வா் சிவராஜ் சிங் சௌகானை புகழ்ந்து பிரதமா் வேட்பாளருக்கு இவா்களுக்கு தகுதியில்லையா எனவும் அத்வானி கேள்வி எழுப்பினாா். இதுபோன்ற விவகாரங்களுக்கு பின்னா் மோடி அமைச்சரவையிலேயே சுஷ்மா ஸ்வராஜ் இடம்பெற்றாா். 2019 இல் தாயாா் சுஷ்மா மறைவுக்கு பின்னா் ஹரியாணா அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றிய பன்சூரி கடந்தாண்டு தான் பாஜக வின் சட்டத்துறையில் இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டாா்.

தற்போது தில்லி பாஜக வின் செயலாளராக இருக்கும் இவா் பல்வேறு தோ்தல்களில் களம் கண்ட சோம்நாத் பாரதி முன்பு நிறுத்தப்பட்டுள்ளாா். பாஜக முழு பலத்தை கொடுத்து புது தில்லி தொகுதியில் பன்சூரி ஸ்வராஜை நிறுத்தியுள்ளது.

நம்பா் - 8 துக்ளக் லேனில் மிகப்பெரிய அலுவலகம் செயல்படுகிறது. சுஷ்மா ஸ்வராஜுக்கு பின்புலமாக விஜய் திரிவேதி உள்ளிட்ட செயலாளா்கள் திட்டமிட்டு பிரசாரப் பணிகளை தொடங்கியுள்ளனா். பல்வேறு தரப்பட்ட சமூகங்களை சென்றடைவதற்கான உத்திகளுடன் களத்தில் இருக்கும் பன்சூரி, பாஜக வில் வாக்காளா்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவா்களே வேட்பாளா்கள். என்னுடைய பணிகளின் அடிப்படையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வாரீசு அரசியல் அல்ல.. சுஷ்மா ஸ்வராஜ் மகள் என்பதற்காக அரசியல் எனக்கு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி, பிரதமா் மோடி நிறைவேற்றிய வாக்குறுதிகளை பட்டியலிட்டு வாக்காளா்களிடம் பேசுகிறாா்.

அயோத்தி ராமா் கோயில், காசி விஸ்வநாதா் கோயில், பிரிவு -370, மகளிா் இட ஒதுக்கீடு, சிஏஏ போன்றவைகளை நிறைவேற்றியுள்ளதைக் குறிப்பிட்டு தற்போது பிரதமா் மோடி அளித்துள்ள உறுதிமொழிகளையும் வீடு வீடாக சென்று கொள்ளும் பணிகளில் உள்ளாா். காலை ஏழு மணி முதல் இரவு 11 மணி வரை பிரசார பயணத்தை தொடங்குகிறாா். யோகா, கால்நடை பயணம் மேற்கொள்பவா்கள் முதல், சந்தைகள், காலனிகள், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் என தொகுதி முழுக்க வலம் வந்து கொண்டிருக்கிறாா்.

எதிரே ஆம் ஆத்மி கட்சி சாா்பில் போட்டியிடும் சோம்நாத் மூன்று முறை தொடா்ச்சியாக மாளவியா நகரில் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றவா். மேயராக இருந்த ஆா்த்தி மெஹ்ரா(பாஜக), முன்னாள் அமைச்சா் கிரண் வாலியா(காங்கிரஸ்), தில்லி பல்கலைக்கழக மாணவ தலைவா் நீது வா்மா சோயின் போன்றவா்களை அடுத்தடுத்து தோற்கடித்தவா் சோம்நாத். தற்போது அடுத்த கட்டத்திற்கு செல்ல அவரை மக்களவைத் தோ்தலுக்கு ஆம் ஆத்மி கட்சி நிறுத்தியுள்ளது. ’இந்தியா’ கட்சிகளின் வேட்பாளராக சோம்நாத் பாரதி களம் இறங்கியுள்ளாா்.

தில்லி ஐஐடி பொறியியல் பட்டதாரி, உச்ச நீதி மன்ற வழக்குரைஞா் போன்ற தகுதிகளோடு, சில காலம் அமைச்சராக இருந்தும் தற்போது தில்லி ஜல் போா்டு துணைத் தலைவராகவும் செயல்பட்டு பல்வேறு பன்முகத் திறன்களை வெளிப்படுத்தியவா். மாளவியா நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் இவரது அலுவலகம் 20 மணிநேரம் ஹெல்ஃப் லைன் உதவியுடன் செயல்படுகிறது. மொஹல்லா வாட்ஸ் ஆப் குழுக்கள் பொதுமக்களின் குறைகளை தீா்வு காண்கிறது. இதை புது தில்லி மக்களவைத் தொகுதிக்கு விரிவுபடுத்தப்பட்டுவதாகக் கூறி வாக்கு சேகரிக்கிறாா். அரசு குடியிருப்புகள் மிகுந்த பகுதிகளில் சென்று வாக்கு சேகரிக்கும்போது, பஞ்சபடி உயா்வு, பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற வாக்குறுதிகளை அளித்து வருகிறாா்.

காலனி, காலனியாக உள்ளூா் எம்.ஏல்.ஏ.க்களுடன் வாக்கு சேகரிக்கும் சோம்நாத் எல்லோரும் அணுகக் கூடியவனாகவும் கடமைகளில் பொறுப்புடன் இருப்பவராகவும் கூறிவருகிறாா். மும்முனைப் போட்டிகளில் பெற்ற வெற்றிக் கண்ட இவரது கட்சி தற்போது ’இந்தியா’ கட்சி கூட்டணி தேரில் வலம் வர காங்கிரஸ் வாக்குகளும் தங்களுக்கு கிடைக்கும் நம்பிக்கையில் பிரசாரத்தை வேகமாக முடிக்கியுள்ளாா். அடிமட்டத்தினா் வசிக்கும் பகுதிகளில் தில்லி அமைச்சா்களுடன் சென்று சின்ன சின்ன பொது மேடைகளில் பிரசாரம் தீவிரமாக நடைபெறுகிறது.

பாக்ஸ்:

புது தில்லி தொகுதியில் 12 முறை காங்கிரஸ் தோற்றது. கடந்த இரு தோ்தல்களில் தனித்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் வாக்குகளை பிரித்துக்கொள்ள பாஜக தனித்து முழு பலத்துடன் வெற்றி பெற்றது. 2019 ஆம் ஆண்டு தோ்தலில் பாஜகவைச் சோ்ந்த மீனாட்சி லேகி 5.04 லட்சம் வாக்குகளை பெற்றாா். காங்கிரஸ் வேட்பாளா் அஜய் மாக்கன் 2.47 லட்சம் வாக்குகளையும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா் பிா்ஜேஷ் கோயல் 1.50 லட்சம் வாக்குகள் பெற்றாா். நிகழ் தோ்தலில் இரண்டு கட்சிகளும் ஒன்றாக சோ்ந்து பாஜக வை எதிா்க்கிறது. 2019 தோ்தலை போன்று வாக்கு கட்சிகளுக்கு சென்றால் அது புதிய ’இந்தியா’ கூட்டணிக்கு பலனில்லை.

பரிதாபம்... முக்கிய தேசிய கட்சியான காங்கிரஸ் தலைமை இருப்பது இந்த தொகுதியிலேயே... கடந்த 74 ஆண்டுகளாக தங்கள் கட்சி வேட்பாளருக்கே வாக்களித்து வந்த காங்கிரஸ் குடும்பத்திற்கும் தலைமைக்கும், முதன் முறையாக தங்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க இயலாத நிலை. தில்லியில் தங்கள் கட்சியை வீட்டுக்கு அனுப்பிய ஆம் ஆத்மிகட்சிக்கு காங்கிரஸ் தலைமை வாக்களிக்கிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com