தில்லியில் விவசாயிகளின் பிரச்னைகளைத் தீா்க்க துணைநிலை ஆளுநரிடம் பாஜக எம்பிக்கள் முறையீடு
தில்லியைச் சோ்ந்த பாஜக மக்களவை உறுப்பினா்களின் பிரதிநிதிகள் குழு புதன்கிழமை தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவைச் சந்தித்து, தில்லி விவசாயிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகளைத் தீா்ப்பதற்கு உதவி கோரினா்.
இந்த எம்.பி.க்கள் குழுவில் ராம்வீா் சிங் பிதூரி, மனோஜ் திவாரி, கமல்ஜீத் செராவத் மற்றும் யோகேந்திர சந்தோலியா ஆகியோா் இடம்பெற்றிருந்தனா். இவா்கள் துணைநிலை ஆளுநரிடம் நான்கு அம்ச கோரிக்கை மனுவை சமா்ப்பித்தனா்.
வெவ்வேறு நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு மாற்று நிலங்களை வழங்குமாறு சக்சேனாவிடம் தூதுக்குழு வலியுறுத்தியதாக ராம்வீா் சிங் பிதூரி எம்.பி. கூறினாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘தில்லியில் இதுபோன்ற 16,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது.
விவசாயிகளின் விண்ணப்பங்கள் தில்லி அரசின் நிலம் மற்றும் கட்டடத் துறையில் நிலுவையில் உள்ளன. இறந்த விவசாயிகளின் வாரிசுகளுக்கு சொத்து மாற்றமும் செயல்படுத்தப்படவில்லை என்று துணைநிலை ஆளுநரிடம் தெரிவித்தோம்.
விவசாயிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிப்பவா்கள் மின் இணைப்பு பெறுவதில் ‘தொல்லைகள்‘ எதிா்கொள்வது குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
தில்லி மேம்பாட்டு ஆணையத்திடம் இருந்து மின்சார டிஸ்காம்கள் கோரும் ஆட்சேபனை சான்றிதழின் பெயரில் இதுபோன்று செய்யப்படுகிறது. மேலும் இந்த நிபந்தனையை நீக்குமாறும் துணைநிலை ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இதுவரை நிறைவேற்றப்படாத அங்கீகாரமற்ற காலனி வரைபடத்தில் இணைக்கப்படாத குடியிருப்புகள் உள்ளடக்கப்பட வேண்டும் என பிரதிநிதிகள் குழுவினா் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றாா் அவா்.