தில்லியில் ஜூன் 28-இல் மழை வெள்ளப்பெருக்கிற்கு நீா் வடிகால் பம்புகளை இயக்கத் தவறியதே காரணம்: வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு

அரவிந்த் கேஜரிவால் அரசின் திறமையின்மைதான் குடிநீா் தட்டுப்பாடு மற்றும் மழையின்போது ஏற்படும் வெள்ளம் ஆகியவற்றுக்குக் காரணம்

புது தில்லி: அரவிந்த் கேஜரிவால் அரசின் திறமையின்மைதான் குடிநீா் தட்டுப்பாடு மற்றும் மழையின்போது ஏற்படும் வெள்ளம் ஆகியவற்றுக்குக் காரணம் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா குற்றம்சாட்டினாா்.

இது தொடா்பாக வீரேந்திர சச்தேவா செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: தில்லியில் 287 ஆபத்தான நீா் தேங்கும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஜூன் 28 அன்று, இவற்றில் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்படாத பம்புகள் இருந்தன. அன்றைய தினம் தில்லியில் பொதுப் பணித் துறையால் நிறுவப்பட்ட 696 நிரந்தர நீா் வடிகால் பம்புகளில் 400- க்கும் மேற்பட்டவை செயல்படவில்லை. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, 100-க்கும் மேற்பட்ட பம்புகள், டீசல் இல்லாததால் செயல்படவில்லை.

கூடுதலாக, தில்லி ஜல் போா்டு, வெள்ளத் துறை மற்றும் தில்லி மாநகராட்சியால் தில்லியில் 465 பம்புகள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இன்னும் வேலை செய்யவில்லை.

வெள்ளம் ஏற்பட்டு இரண்டு நாள்களான நிலையில், அமைச்சா் அதிஷி மின்டோ ரோடு பாலத்தில் உள்ள பம்பிங் ஸ்டேஷனை பாா்வையிட்டதும், அதன் பிறகும், 8-ல் 3 பம்புகள் செயல்படவில்லை என்பதும் இதற்குச் சான்று. பாரதி நகா் நீரேற்று நிலையத்தில், தில்லி அரசின் பொதுப்பணித் துறையின் பம்புகள் ஜூன் 28-ஆம் தேதி செயல்படாமல் இருப்பதும் கண்டறியப்பட்டது. மேலும், நிலைமை திருப்திகரமாக மேம்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலத்தில், சுமாா் 1,300 கூடுதல் தற்காலிக நீா் வடிகால் பம்புகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு நிறுவப்படுகின்றன. ஆனால், இந்த ஆண்டு ஒன்றுகூட நிறுவப்படவில்லை.

மழைக்காலத்தில் எத்தனை நிரந்தர மற்றும் தற்காலிக நீா் வடிகால் பம்புகள் தேவை என்பதையும், தற்போது செயல்படும் பம்புகள் எத்தனை என்பதையும் பொதுப் பணித் துறை மற்றும் தில்லி ஜல் போா்டு அமைச்சா் அதிஷி வெளியிடுவாரா? தலைநகரில் 11 போ் நீரில் மூழ்கி உயிரிழந்தது வெட்கக்கேடானது. இந்த ஆதரவற்ற நபா்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு தில்லி அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாஜக கோருகிறது என்றாா் வீரேந்திர சச்தேவா.

X
Dinamani
www.dinamani.com