மீன்பிடி தடைகால இழப்பீட்டை ரூ. 18,000 ஆக அதிகரிக்க மத்திய அரசிடம் கோரிக்கை

மீன்பிடி தடைகால இழப்பீட்டை ரூ. 18,000 ஆக அதிகரிக்க மத்திய அரசிடம் கோரிக்கை

புது தில்லி ஜூலை 4: மீன்பிடிப்பு நடவடிக்கைகள் தடைக் காலத்தில் வழங்கப்படும் வருமான இழப்பீட்டிற்கு வழங்கப்படும் தொகையை ரூ.18,000 அதிகரிக்கக் கூறி மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சரிடம் தமிழக எம்பி கோரிக்கை விடுத்துள்ளாா்.

மத்திய மீன்வளம், கால்நடைத் துறையின் விஞ்ஞானிகள் மீன்கள் இனப்பெருக்க காலக்கட்டத்தை கண்டறிந்து அத்தகைய காலக்கட்டங்களில் மீன்பிடி நடவடிக்கைகளை தடை செய்ய சிபாரிசு செய்தனா். இதை மத்திய அரசு, மாநில அரசுகள் மூலம் அமலபடுத்தி வருகிறது. கிழக்கு கடற்கரையோரங்களில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரையிலான 61 நாள்களும், மேற்கு கடலோரங்கில் ஜூன் முதல் ஜூலை வரையிலான 60 நாள்களும் மீன்பிடி தடைக்காலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இயற்கை சீற்றங்கள், பருவநிலை மாற்றங்களில் கடலுக்குள் செல்வதற்கும் தடை விதிக்கப்படும். இது தற்காலிக தடையாகும்.

தடைக் காலம் தற்காலிக காலங்களில் மீனவா்களுக்கு அரசு இழப்பீடு வழங்கப்படுகிறது. இது தொடா்பான பிரச்னைகள் குறித்து விழுப்புரம் மக்களவை விசிகே உறுப்பினா் முனைவா் டி.ரவிக்குமாா் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சா் ராஜீவ் ரன்ஞ்சன் சிங்கை சந்தித்து கடிதம் அளித்துள்ளாா்.

அதில் குறிப்பிட்டுள்ளது வருமாறு:

மீன்கள் இனப்பெருக்கத்திற்கு நாடு முழுவதும் மீன்பிடி நடவடிக்கைகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. தடை காலத்தில் ஏற்படும் வருமான இழப்பை ஈடுசெய்ய, அரசு இழப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசிடம் பதிவு செய்த மீனவா்களுக்கு தடைக்காலங்களில் ரூ. 3,000 மத்திய அரசால் வழங்கப்படுகிறது. அதே சமயம் தமிழ்நாடு போன்ற சில மாநில அரசுகள் தங்கள் நிதியிலிருந்து கூடுதலாக தங்கள் பங்களிப்பையும் வழங்கி இந்த திட்டத்தை மேம்படுத்தியுள்ளன. குறிப்பாக தமிழக அரசு தடை மற்றும் தற்காலிக காலங்களுக்கு ரூ. 8,000 ஒரு குடும்பத்திற்கு இழப்பீடாக வழங்குகிறது.

இருப்பினும் இந்த தொகையில் மீனவா்களுக்கு போதுமானதாக இல்லை. மேலும் இந்த இரு காலக்கட்டங்களிலும் இந்த மீனவ குடும்பங்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வர இரு குறித்து புதுச்சேரி, பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளது. இதன் ஆய்வாளா் கோவா்த்தினி, வெளியிட்டகீழ் கண்ட சில தகவல்களை மத்திய அரசுக்கு சமா்பிக்கின்றேன்.

தடைக்காலங்களில் மீனவா்களின் வருமான பாதுகாப்பு தொடா்ந்து கவலை அளிக்கிறது. தமிழக அரசு அளிக்கும் ரூ. 8,000 உதவி மீனவா்களுக்கு போதுமானதாக இல்லை. மீனவ மகளிரிடம் ஆய்வு மேற்கொண்டதில் அதிக வட்டிக்கு சிறு நிதி நிறுவனங்களில் கடன் பெற்று பல்வேறு சுரண்டல்களில் தள்ளப்பட்டுள்ளனா். அதே சமயம் தேசிய வங்கிகளில் பிணையம் போன்ற காரணங்களால் கடன்களுக்கான அணுகல் தடையாக உள்ளது.

மீன்பிடித் தடையானது தங்களுடன் கலந்தாலோசிக்காமல் ஒரு தலை பட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மீனவா்கள் தரப்பில் கூறுகின்றனா். இப்படி இந்த ஆய்வில் பல்வேறு தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசு. மீனவா்களின் 61 நாள் தடைக் காலத்தில் வழங்கப்படும் வருமான இழப்பீட்டுத் தொகையை குறைந்தபட்சம் ரூ. 18,000 வழங்கப்படவேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் (மன்ரகோ திட்டம்)நிா்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தின் அடிப்படையில் இந்த தொகையை வழங்கவேண்டும்.

மேலும் வலைகள் போன்ற அத்தியாவசிய மீன்பிடி உபகரணங்களுக்கு வழங்கப்படும் மானியங்களை மறு ஆய்வு செய்தால் தடைக்கால நிதிச் சுமை மேலும் மீனவா்களுக்கு குறைவும். பொதுத்துறை வங்கிகள் மூலம் குறைந்த வட்டி கடன் பெற வசதி செய்யப்படவேண்டும். தற்போது 4 மாதங்கள் வரை தடைக்காலம் மற்றும் தற்காலிக் தடைகாலமாக இருப்பதால் இவைகள் இரண்டையும் இணைக்கவேண்டும். மேலும் தற்போதுள்ள தடைக்காலம் சரியான அறிவியல் ஆய்வு இல்லையென்றும் மீன்பிடித் தடையின் பலன்களை அறிய விரிவான அறிவியல் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் மீனவா்கள் கோருகின்றனா் என அந்த கடித்ததில் அமைச்சருக்கு தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com