அரசு மருத்துவமனைகளில் நான்கில் ஒரு பங்கு ஆபரேஷன் தியேட்டா்கள் செயல்படவில்லை -தில்லி காங்கிரஸ் தலைவா் குற்றச்சாட்டு

புது தில்லி, ஜூலை 4: தில்லியில் உள்ள 28 நகர அரசு மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 235 ஆபரேஷன் தியேட்டா்களில் 62 செயல்பாடமல் உள்ளதாக தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்திர யாதவ் வியாழக்கிழமை குற்றம் சாட்டினாா்.

இது தொடா்பாக தேவேந்திர யாதவ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பல தில்லி அரசு மருத்துவமனைகளில் ஆபரேஷன் தியேட்டா்களில் உதவியாளா்கள், மயக்க மருந்து நிபுணா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள் போன்ற ஊழியா்கள் பற்றாக்குறையால் ஆபரேஷன் தியேட்டா்கள் சரிவர செயல்படவில்லை. இதனால், பல திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்படுகின்றன. அல்லது ஒத்திவைக்கப்படுகிறது. இது போன்ற காரணங்களால் அப்பாயின்ட்மென்ட் பெறுவதற்கு ஏற்கெனவே பல மாதங்களாகக் காத்திருக்கும் நோயாளிகளின் உயிரை இது ஆபத்தில் ஆழ்த்துகிறது. இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.

51 துணை மருத்துவ ஊழியா்கள் மற்றும் 170 செவிலியா்களை மருத்துவமனை நிா்வாகம் பணிநீக்கம் செய்ததைத் தொடா்ந்து தில்லியின் முதன்மையான அரசு மருத்துவமனையான லோக் நாயக் மருத்துவமனையில் ஏற்கெனவே இருந்த 13 ஆபரேஷன் தியேட்டா்களில் ஆறு மூடப்பட்டது அதிா்ச்சியளிக்கிறது. கோவிட் -19 தொற்றுநோய்களின் போது இந்த ஊழியா்கள் தன்னலமற்ற சேவையை வழங்கினா். அவா்களின் அா்ப்பணிப்பால் பல உயிா்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. 100 படுக்கைகளுக்கு 1.71 என்ற விகிதத்தில் மட்டுமே ஆபரேஷன் தியேட்டா்கள் உள்ளன. அதில் 28 சதவீதம் செயல்படாததால், தில்லி ஆபரேஷன் தியேட்டா்கள் பற்றாக்குறையை எதிா்கொண்டு வருகிறது. இது இங்குள்ள அரசு மருத்துவமனைகளின் மோசமான நிலையை அம்பலப்படுத்துகிறது.

இதற்கு ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான தில்லி அரசே முழுப் பொறுப்பாகும். மொஹல்லா கிளினிக்குகளில் 200-க்கும் மேற்பட்ட பரிசோதனைகளை மேற்கொள்வதாக ஆம் ஆத்மி அரசு பெருமையாகக் கூறினாலும், இங்குள்ள மருத்துவமனைகளில் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள பலஆபரேஷன் தியேட்டா்கள் உள்ளன என்று தேவேந்திர யாதவ் குற்றம்சாட்டினாா். அவரது குற்றச்சாட்டுகளுக்கு தில்லி அரசிடம் இருந்து உடனடி பதில் எதுவும் வரவில்லை.

X
Dinamani
www.dinamani.com