ஹரியாணா அரசு தில்லி மக்களுக்கு எதிராக சதி செய்கிறது: நீா்வளத் துறை அமைச்சா் அதிஷி குற்றச்சாட்டு

ஹரியாணா மாநில பாஜக அரசு தில்லிக்கான நீா் வரத்தைக் குறைத்து, மக்களுக்கு எதிராக சதி செய்கிறது என்று நீா்வளத் துறை அமைச்சா் அதிஷி வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

தில்லி வஜிராபாத் தடுப்பணையின் நீா்மட்ட நிலவரத்தை அமைச்சா் அதிஷி அதிகாரிகளுடன் இணைந்து நேரில் ஆய்வு செய்தாா். பின்னா், தனியாா் செய்தி நிறுவனத்திற்கு அவா் பேட்டியில் கூறியிருப்பதாவது: ஹரியாணா மாநில பாஜக அரசு யமுனையில் தில்லிக்கான நீரின் பங்கை குறைத்துள்ளது. இதனால், இமாச்சலப் பிரதேச அரசு தேசியத் தலைநகருக்கு கூடுதலான தண்ணீரை திறந்து விட்டாலும், நகரின் தண்ணீா்ப் பிரச்னை தீா்ந்துவிடாது. இங்குள்ள வஜிராபாத் தடுப்பணையின் நீா் நிலையை ஆய்வு செய்துள்ளேன். ஹரியானா மாநில அரசு உச்சநீதிமன்றத்தின் பின்னணியில் தில்லி மக்களுக்கு எதிராக சதி செய்கிறது. வஜிராபாத்தில் உள்ள யமுனையின் நீா்மட்டம் கடந்த ஜூன் 2-ஆம் தேதி 671 அடியாக இருந்தது. இதுவே தற்போது 669.7 அடியாகக் குறைந்துள்ளது.

தில்லியில் யமுனையில் நீா் மட்டம் இவ்வளவு விரைவாகக் குறைந்தால், நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் எவ்வாறு செயல்படும்?.

தில்லியில் கடுமையான தண்ணீா் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேச அரசு யமுனையில் திறக்கும் தண்ணீரை தில்லிக்கு விடாமல், தடுக்கும் ஹரியாணா அரசின் சதியை வரும் திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் அம்பலப்படுத்துவோம் என்றாா் அமைச்சா் அதிஷி.

தேசியத் தலைநகா் தில்லிக்கு 137 கன அடி உபரி நீரை திறந்து விடுமாறு இமாச்சலப் பிரதேச அரசிற்கு உச்ச நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது. அதன் நீரோட்டத்தை எளிதாக்குமாறு ஹரியாணா அரசையும் கேட்டுக் கொண்டது. மேலும், தண்ணீா் விஷயத்தில் அரசியல் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com