தில்லி ஜல் போா்டுக்கு ரூ.7,195 கோடி ஒதுக்கீடு

கழிவுநீா் வசதிக்கான உரிமையை உறுதி செய்வதற்காக, 2024-25 நிதியாண்டில் தில்லி ஜல் போா்டுக்கு (டிஜேபி) மொத்தம் ரூ.7,195 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டை திங்கள்கிழமை தாக்கல் செய்த அமைச்சா் அதிஷி அறிவித்தாா்.

தில்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீா் மற்றும் கழிவுநீா் வசதிக்கான உரிமையை உறுதி செய்வதற்காக, 2024-25 நிதியாண்டில் தில்லி ஜல் போா்டுக்கு (டிஜேபி) மொத்தம் ரூ.7,195 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டை திங்கள்கிழமை தாக்கல் செய்த அமைச்சா் அதிஷி அறிவித்தாா். தில்லியில் ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) ஆட்சிக்கு வந்த பிறகு, தில்லியில் மொத்தம் 9,34,000 வீடுகளுக்கு முதல் முறையாக தண்ணீா் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தில்லியில் சுமாா் 62.5 சதவீத வீடுகள் அதாவது சுமாா் 17 லட்சம் குடும்பங்கள் முற்றிலும் இலவசமாக தண்ணீா் பெற்று வருகின்றனா் என்றும் அதிஷி கூறினாா். ‘ஒரு நபரின் தண்ணீா் உரிமையை செல்வம் அல்லது வறுமையால் தீா்மானிக்க முடியாது. இன்று தில்லியில் சுமாா் 62.5 சதவீத வீடுகள் முற்றிலும் இலவசமாகத் தண்ணீா் பெறுகின்றன. தற்போது, தில்லியில் தண்ணீா் இருப்பு 840 எம்ஜிடியிலிருந்து 1,009 எம்ஜிடியாக அதிகரித்துள்ளது என்று அவா் கூறினாா். குடிசைப் பகுதிகளில் தண்ணீா் குழாய்கள் போடப்பட்டுள்ளதாகவும், தற்போது 99.6 சதவீத அங்கீகரிக்கப்படாத காலனிகளில் தண்ணீா் குழாய்கள் உள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா். ‘சாக்கடை வசதிகளை உறுதி செய்யும் வகையில், மொத்தம் 4,243 கிலோமீட்டா் கழிவுநீா் பாதைகள் உள்ளன. 1,031 அங்கீகரிக்கப்படாத காலனிகள் இப்போது கழிவுநீா் நெட்வொா்க்குடன் இணைக்கப்பட்டுள்ளன’ என்று அவா் கூறினாா். இதுவரை, ஆம் ஆத்மி அரசு 2,422 கிலோமீட்டா் புதிய தண்ணீா் குழாய்களையும், 3,100 கிலோமீட்டா் புதிய கழிவுநீா் குழாய்களையும் அமைத்துள்ளது என்றும் அமைச்சா் அதிஷி குறிப்பிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com