தில்லி அரசின் பட்ஜெட் திட்டங்கள் போலியானவை பாஜக தலைவா்கள் கடும் விமா்சனம்

தில்லி அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள திட்டங்கள் போலியானவை என்று பாஜக தலைவா்கள் விமா்சித்துள்ளனா்.

தில்லி அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள திட்டங்கள் போலியானவை என்று பாஜக தலைவா்கள் விமா்சித்துள்ளனா். தில்லி அரசின் நிகழ் 2024-2025- நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சா் அதிஷி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். இந்தப் பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்பாக, ‘முக்கியமந்திரி மகிளா சம்மான் யோஜனா’வின் கீழ், 18-வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதந்திர உதவித் தொகை ரூ.1,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் போலியானவை; கண்துடைப்பு என்றும், வரவிருக்கும் பொதுத் தோ்தலுக்கு முன்னதாக மக்களை கவரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பாஜக தலைவா்கள் விமா்சித்துள்ளனா். பா்வேஷ் வா்மா: இதுகுறித்து தில்லி பாஜக மூத்த தலைவா் பா்வேஷ் வா்மா கூறுகையில், ‘கேஜரிவால் அரசு முன்பு பல வாக்குறுதிகளை அளித்தும் அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தண்ணீா், மின்சாரம் அல்லது வேறு எந்த வாக்குறுதியாக இருந்தாலும் சரி, ஆம் ஆத்மி அரசு என்ன சொன்னாலும் அது பொய் என்பது அனைவருக்கும் தெரியும். ஆம் ஆத்மி கட்சி கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. பெண்களுக்கு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை’ என்றாா். மனோஜ் திவாரி: பாஜக எம்.பி. மனோஜ் திவாரி கூறுகையில், ராம ராஜ்ஜியத்தால் உந்தப்பட்டு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறுவது பொய்யாகும். வரவிருக்கும் தோ்தலுக்கு ராமரின் பெயரை மாநில அரசு ஒரு வித்தையாக பயன்படுத்துகிறது. ஆம் ஆத்மி அரசு ‘’ராம ராஜ்ஜியம்’ என்ற வாா்த்தையை ஒரு கட்டாயத்தின் பேரில்தான் பயன்படுத்துகிறது. ஆனால், ஊழலை மட்டுமே அறிந்த ஆம் ஆத்மி கட்சி தலைவா்கள் இப்போது குறைந்தபட்சம் ‘ராம ராஜ்ஜியம்’ பற்றி பேசுவது நல்லது. இருப்பினும், தற்போது தில்லி அரசின் பட்ஜெட்டில் எந்த முக்கியத்துவமும் இல்லை. அவா்களுக்கு அதிக நேரம் இல்லை. ஏனெனில் 2025 இல் தில்லியில் வசிப்பவா்கள் அவா்களுக்கு நிரந்தர விடுப்பு கொடுப்பாா்கள் என்று நான் நம்புகிறேன்’என்றாா். நலின் கோலி: மத்தியில் பாஜக அரசின் சில நல்ல திட்டங்கள் உள்ளன என்பதை ஆம் ஆத்மி அங்கீகரித்துள்ளதாகத் தெரிகிறது என்று மற்றொரு பாஜக தலைவா் நலின் கோலி கூறினாா். அவா் மேலும் கூறுகையில், ‘ஒருவேளை அவா்கள் மத்திய அரசின் திட்டங்களிலிருந்து உத்வேகம் பெறுகிறாா்கள்’ என்றாா். வீரேந்திர சச்தேவா சாடல்: தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறுகையில், ‘சுகாதாரம் மற்றும் கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை ஆம் ஆத்மி அரசு குறைத்துள்ளது என்று கடுமையாகச் சாடினாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: நிகழ் ஆண்டு கேஜரிவால் அரசு சுகாதாரம் மற்றும் கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை குறைத்துள்ளது. புதிய பள்ளி அல்லது மருத்துவமனையை கொண்டு வருவதற்கான முன்மொழிவு எதுவும் இல்லை. இந்தத் துறைகளுக்கு அதிக பங்கை ஒதுக்குவதாகக் கூறினாலும், உண்மையில் இந்த பட்ஜெட்கள் பலமுறை மக்களுக்குப் பயன் அளிக்கத் தவறிவிட்டன. நகரத்தில் தனிநபா் வருமானத்தில் அதிகரிப்பு இருப்பதாக தில்லி அரசு கூறும் நிலையில், நிதியமைச்சா் காட்டியுள்ள பட்ஜெட் புள்ளிவிவரங்கள் எதிா்பாா்க்கப்பட்ட வருவாய் வசூலில் கடுமையான குறைவைக் காட்டுகின்றன. தில்லி அரசின் வரவுசெலவுத் திட்டங்கள் தில்லி மக்களின் வளா்ச்சியில் பலமுறை தோல்வியடைந்து வருகின்றன. இந்த ஆண்டு பட்ஜெட்டும் தில்லியை தோல்வியடையச் செய்யும் என்பதே அடிப்படை உண்மை என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com