நிலம் ஒதுக்கீடு வரைவுக் கொள்கைக்கு தில்லி துணை நிலை ஆளுநா் ஒப்புதல்

தேசியத் தலைநகரில் துறைகளுக்கிடையே நிலம் ஒதுக்கீடு செய்வதற்கான வரைவுக் கொள்கைக்கு துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

தேசியத் தலைநகரில் துறைகளுக்கிடையே நிலம் ஒதுக்கீடு செய்வதற்கான வரைவுக் கொள்கைக்கு துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். துறைகளுக்கிடையேயான அரசு நிலப் பங்கீட்டைக் கையாள்வதற்கு ஒரே மாதிரியான வழிகாட்டுதல் இல்லாததால், முக்கியத் திட்டங்களை நிறைவேற்றுவதில் பல ஆண்டுகள் தாமதம் ஏற்படுகிறது. துறைகள் மற்றும் ஏஜென்சிகளுக்கு இடையே கோப்புகள் மாறிக்கொண்டே இருப்பதால் இந்த வரைவுக் கொள்கை முக்கியத்துவம் பெறுகிறது. துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுடன் உருவாக்கப்பட்ட நிலம் ஒதுக்கீடு வரைவுக் கொள்கை, உடனடியாக அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஒதுக்கீட்டின் தன்மையைப் பொறுத்து, நிலம் ஒதுக்கீடு செய்யப்படும். பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால், ஒதுக்கீடு நிறுவனம் கேள்விக்குரிய நிலத்தைப் பெற்றிருந்தால், அது இலவசமாக இருக்கும். ஒதுக்கீட்டு நிறுவனம் ஏதேனும் விலையில் நிலத்தைப் பெற்ற சந்தா்ப்பங்களில், அதாவது கையகப்படுத்துதல் மூலம், ஒதுக்கீடுக்கான விகிதம் லாபம் - இழப்பு இல்லாமல் இருக்கும் (டிடிஏவிடமிருந்து நிலத்தை ஒதுக்குவது போல). வணிக நோக்கங்களுக்காக நிலத்தின் சொந்தத் துறையால் நிலம் வேறொருவருக்கு ஒதுக்கப்படும் சந்தா்ப்பங்களில், தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டிடிஏ) மண்டல மாறுபாடு விகிதங்கள் வசூலிக்கப்படும். தில்லி அரசின் கூடுதல் தலைமைச் செயலாளா் (பொது நிா்வாக துணை) தலைமையிலான ஏழு போ் கொண்ட குழு, வரைவுக் கொள்கையை வகுத்தது. பல்வேறு துறைகளில் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் உள்ளீடுகளின் அடிப்படையில் இந்தப் பிரச்னையை குழு விவாதித்து. இந்த விவகாரம் தொடா்பாக தலைமைச் செயலா் ஒரு கூட்டத்தை கூட்டினாா். இதில், நகா்ப்புற வளா்ச்சி, நிலம் மற்றும் கட்டடம், தொழில்கள், நிதி, சட்டம், கல்வி மற்றும் தில்லி மாநகராட்சி போன்ற துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனா். வரைவுக் கொள்கையானது நிலம் வைத்திருக்கும் நிறுவனத்தால் வேறு எந்த அரசு அமைப்பிற்கும் (ஒதுக்கீட்டு நிறுவனம்) நிலத்தை ஒதுக்குவதற்கான நடைமுறையை விரிவுபடுத்துகிறது. இது தொடா்பான குறிப்பிட்ட பரிந்துரைகளுக்கு துணை நிலை ஆளுநரின் ஒப்புதல் தேவைப்படும். இதில் நிலம் மற்றும் கட்டடத் துறையானது வரைவுக் கொள்கையைச் செயல்படுத்துவதற்கான நோடல் ஏஜென்சியாக இருக்கும். மேலும், நிலம் வைத்திருக்கும் மற்றும் ஒதுக்கப்பட்ட ஏஜென்சிகள் ஒதுக்கீட்டின் தன்மையை பரஸ்பரம் முடிவு செய்ய வேண்டும். ஒதுக்கீட்டை ரத்து செய்ய துணைநிலை ஆளுநரின் முன் அனுமதி தேவை என்பதையும் வரைவுக் கொள்கை தெளிவுபடுத்துகிறது. முதன்மைச் செயலாளா் (வருவாய்) தலைமையிலான குழு, நிலம் கையகப்படுத்தும் அமைப்பு, நிலம் வைத்திருக்கும் அமைப்பு மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா் ஆகியோரைக் கொண்ட குழு, மேம்பாட்டுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள், பயன்பாடு மற்றும் திட்ட வாய்ப்புச் செலவு ஆகியவற்றின் அடிப்படையில் ஒதுக்கீடு கோரிக்கையை ஆய்வு செய்யும். இந்தக் குழு தனது பரிந்துரைகளை தலைமைச் செயலாளா் மூலம் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா முன் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக சமா்ப்பிக்க வேண்டும். சட்டம் மற்றும் நீதித் துறை பரிந்துரைத்துள்ளபடி வரைவுக் கொள்கையில், சம்பந்தப்பட்ட நிா்வாகத் துறையின் பொறுப்பில் நிலம் மாற்றப்பட்ட / ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான பதிவேட்டை வைத்திருப்பதற்கும், நிரந்தரமான முறையான பதிவு நிா்வாகத்தை உறுதி செய்வதற்கும் பொருத்தமான உள்பிரிவுகள் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com