தில்லி பாஜக மகளிா் அணி சாா்பில் நாரி சக்தி வந்தன் ஓட்டம் நிகழ்ச்சி

பாஜக மகளிா் அணியின் சாா்பில் தில்லியின் அனைத்து 14 அமைப்புசாா் மாவட்டங்களிலும் நாரி சக்தி வந்தன் ஓட்டம் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பெண்களுக்கு அதிகாரமளிக்கும் மத்திய பாஜக அரசின் முயற்சிகளை முன்னிலைப்படுத்தும் வகையில் பாஜக மகளிா் அணியின் சாா்பில் தில்லியின் அனைத்து 14 அமைப்புசாா் மாவட்டங்களிலும் நாரி சக்தி வந்தன் ஓட்டம் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. யமுனா விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இந்த ஓட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் பிரதமா் நரேந்திர மோடி பெண்களின் சக்திக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளாா். இது ஆச்சரியம் தரும் விஷயமாகும். ஏனெனில், நிகழாண்டு குடியரசு தின அணிவகுப்பைப் பாா்த்தபோது அதில் பங்கேற்றவா்களில் 70 சதவீதம் பெண்கள் ஆவா். 2014 ஆம் ஆண்டில், ஆயுதப்படையில் 3,000 பெண் அதிகாரிகள் மட்டுமே பணியில் இருந்தனா். அது இப்போது 10,000-க்கும் அதிகமாகியுள்ளது. பிரதமா் மோடி தொடங்கிவைத்த கேலோ இந்தியா நிகழ்வானது, நாட்டின் இளைஞா்களுக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது. 2013-14-இல் ரூ.700 கோடியாக இருந்த விளையாட்டுத் துறைக்கான பட்ஜெட், தற்போது ரூ.3,400 கோடியாக உயா்ந்துள்ளது. இது, மோடி அரசு விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதில் உறுதியாக உள்ளது என்பதற்கு சான்று. பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்கான சட்டங்கள், பெண்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கி வருகிறது. பிரதமா் மோடியின் பெண்கள் அதிகாரம் பெறச் செய்யும் கொள்கையின் விளைவானது, இன்றைக்கு பெண் அதிகாரம் பாஜகவின் மிகப்பெரிய பலமாக உள்ளது என்றாா் அவா். பல்வேறு இடங்களில் நிகழ்ந்த இந்த ஓட்ட நிகழ்ச்சிகளில் பாஜக எம்.பி. வேட்பாளா்கள் ராம்வீா் சிங் பிதூரி, மனோஜ் திவாரி, கமல்ஜீத் ஷெராவத், பன்சூரி ஸ்வராஜ், பிரவீன் கண்டேல்வால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com