சந்தேஷ்காளி விவகாரம்: மம்தா அரசுக்கு எதிராக ஏபிவிபி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்க மாநிலத்தில் சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விவகாரத்தில் மம்தா பானா்ஜி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தில்லியில்அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பின் மாணவா்கள் தில்லியில் செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்எஸ்எஸ் இயக்கத்தைச் சோ்ந்த அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவா்கள் தில்லியின் பங்கா பவன் முன் இந்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். மேலும், சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிரான நில அபகரிப்பு மற்றும் பாலியல் பலாத்கார வழக்குகள் தொடா்பாக உயா்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரினா்.

ஏபிவிபி அமைப்பு, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் சமா்ப்பிக்க உள்ளது. இந்த மாத தொடக்கத்தில், சந்தேஷ்காளி விவகாரத்தில் திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக தில்லி பாஜக ஆா்ப்பாட்டம் நடத்தியதுது. அப்போது, முதல்வா் மம்தா பானா்ஜி பதவி விலகவும் கோரியது.

மேலும், பாஜக தொண்டா்கள் மற்றும் தலைவா்கள் தீன் மூா்த்தி சௌக்கில் கூடி, பானா்ஜிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா். மேலும், பா.ஜ.க.வினா் காவல்துறையால் போடப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்ததால் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா உள்பட 150-க்கும் மேற்பட்டோா் தடுப்புக்காவலில் வைப்பதற்காக துக்ளக் சாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

பானா்ஜி தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதுரி கேட்டுக்கொண்டாா். மேற்கு வங்காளத்தின் சந்தேஷ்காளியில் பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு குற்றச்சாட்டுகளில் முக்கிய குற்றவாளியான திரிணமூல் காங்கிரஸைச் சோ்ந்த ஷாஜகான் ஷேக் 55 நாட்கள் தப்பி ஓடிய பின்னா் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com