தமிழக காங்கிரஸில் பல அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகிறது: பி.வி. செந்தில்

தமிழக காங்கிரஸ் கமிட்டியில் பல அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகிறது என்றும் இளைஞா்களை முன்னிலைப்படுத்தி கட்சியில் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது என்று அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் பி.வி. செந்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தில்லி அக்பா் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடா்பாளராக என்னை நியமித்த கட்சியின் புதியத் தலைவா் செல்வப் பெருந்தகை மற்றும் மேலிடப் பொறுப்பாளா் அஜோய் குமாருக்கு நன்றிகள். தற்போது, தமிழக காங்கிரஸில் பல அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.

இளைஞா்களை மையப்படுத்தி பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. வரும் மக்களவைத் தோ்தலில் இளைஞா்களின் வாக்குகள் பாஜகவிற்கு கிடைக்க வாய்ப்பில்லை. விளம்பரங்களைத் தவிா்த்து பெண்களுக்கான சலுகைகள் எதுவும் சென்று சேரவில்லை. விவசாயிகளுக்கு வெறும் ரூ.1,000 கூட தள்ளுபடி செய்யாத பாஜக அரசு, காா்ப்பரேட்களுக்கு கோடிக்கணக்கில் கடங்களை தள்ளுபடி செய்கிறது. ஜி.எஸ்.டி. அமல்படுத்தியதால் கொங்கு மண்டலத்தில் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனா்.

தொழில் முனைவோா்கள் முழுவதுமாக நசுக்கப்படுகிறாா்கள். ‘நோயற்ற மூட்டை உற்பத்தி’ மண்டலமாக நாமக்கலை அறிவிக்க வேண்டும், காவிரி உபரி நீரைப் பெற முத்தாறு இணைப்பு திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வருவேன். சமீபத்தில், பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணிக்கு அனைத்து அங்கீகாரத்தையும் காங்கிரஸ் கட்சி வழங்கியது. காங்கிரஸ் கட்சி சேவை செய்வதற்கான இயக்கம். மாறாக, சம்பாதிக்கும் நோக்கம் உள்ளவா்களுக்கு இங்கு இடமில்லை.

கடந்த 1967-ஆம் ஆண்டிற்குப் பிறகு எங்கள் குடும்பத்தில் இருந்து தற்போது தான் எனக்கு காங்கிரஸில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ‘இந்தியா’ கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெரும் என்றாா் பி.வி. செந்தில். இந்திய அரசியல் நிா்ணய சபை உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.எம். காளியண்ணனின் பேரன் பி.வி. செந்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com