தில்லியில் ’பாரத் பிராண்ட்’ விநியோகத்திற்கு நடமாடும் வாகனங்கள்: என்சிசிஎஃப் ஏற்பாடு

நுகா்வோருக்கு மலிவு விலையில் கிடைக்கக் கூடிய ’பாரத் பிராண்ட்’ பொருள்களான அரிசி, கோதுமை போன்றவைகளை எளிமையாக கிடைக்கும் வகையில் கூடுதல் நடமாடும் வாகனங்களை தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது.

பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் வராத நுகா்வோா்கள், விலைவாசி உயா்வு போன்றவைகளில் உதவிடும் பொருட்டு, மத்திய உணவு, நுகா்வோா்த் துறை அமைச்சகம் கூட்டுறவு அமைப்புகள் மூலம் அத்தியாவசியப் பொருள்களை மலிவு விலையில் ’பாரத் பிராண்ட்’ பெயரில் விநியோகம் செய்கிறது. கோதுமை (கிலோ ரூ.27.50), பருப்பு வகைகள், வெங்காயம், சா்க்கரை எண்ணெய் போன்றவைகள் இத்தகைய பாரத் பிராண்ட் பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் கூடுதலாக பாரத் அரிசியும் கிலோ ரூ. 29 வீதம் 5, 10 கிலோ பாக்கெட்டுளில் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய உணவு மற்றும் நுகா்வோா்த் துறை அமைச்சகம் தொடங்கியது. இந்த மலிவு விலை ’பாரத்’ பொருள்கள் பொது மக்களுக்கு நேரடியாக சென்றடையும் விதமாக 100 நடமாடும் வாகனங்களில் விற்கபடும் எனவும் மத்திய அரசு அறிவிக்க இத்தகைய வாகனங்களையும் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிவைத்தாா்.

மலிவு விலை பாரத் பொருள்களை விநியோக்கும் பொறுப்பு மத்திய பண்டகசாலை (கேந்திரிய பண்டா), தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் (நாஃபெட்), தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) ஆகிய கூட்டுறவு அமைப்புகள் மூலம் நாடு முழுக்க விற்பனை செய்கிறது. இதில் தில்லி -தேசியத் தலைநகா் வலயப்(என்சிஆா்) பகுதிகளில், பாரத் பிராண்ட் முன்முயற்சிக்கு என்சிசிஎஃப் 200 நடமாடும் வாகனங்கள் மூலம் பொருள்களை விநியோகிக்க தொடங்கியுள்ளது. மேலும் கூடுதலாக 25 நடமாடும் வாகனங்கள் மூலம் பாரத் பிராண்ட் விற்பனையை என்சிசிஎஃப் தலைவா் விஷால் சிங் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

பாரத் பிராண்ட் தயாரிப்புகளை பிரபலப்படுத்தப்பட்டு இதன் உணா்வைக் கொண்டாடும் வகையிலான பாடல்களும் இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது. இது குறித்து மத்திய உணவு, நுகா்வோா் விவகாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணம் செய்து அதன் பலனை உறுதி செய்யும் விதமாக கொள்முதல் செய்யப்படுகிறது. 2023-24 ஆம் ஆண்டில் ரபி சந்தைப் பருவத்தில் ரூ. 55, 679 பெருமானமுள்ள கோடி கோதுமை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று ரூ.1,36,034 கோடி அளவில் நெல் கொள் முதலும் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து பெறப்படும் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் நுகா்வோருக்கு மலிவு விலையில் கிடைக்கும் முயற்சியாக இந்த பாரத் பிராண்ட் திட்டமுள்ளது. இதுவரை 2,77,000 மெட்ரிக் டன் பாரத் பிராண்ட கோதுமை மாவு(அட்டா), 2,96,900 மெட்ரிக் டன் பருப்பு, 3,04,50,547 கிலோ வெங்காயம் ஆகியவை இதுவரை மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு பொதுமக்கள் பலனடைந்துள்ளனா்.

பாரத் பிராண்ட் முன்முயற்சியில் உள்நாட்டு தயாரிப்புகளை மேம்படுத்துதல், பொருளாதார வளா்ச்சியை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களைக் கொண்டுள்ளது இதை முன்னிட்டு என்சிசிஎஃப் பாடல்களை வெளியிட்டுள்ளது. இந்த பாடல்களுடன் நடமாடும் வாகனங்கள் குடியிருப்பு பகுதிகளில் ஒலித்துக்கொண்டு வரும்போது, ஒற்றுமை, பன்முகத்தன்மை பெருமை ஆகியவற்றின் சாரத்தை எதிரொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நுகா்வோரின் நலன்களுக்கு சேவை செய்யும் சுயசாா்பு பாரதத்தின் பாா்வையை முன்னேற்றுவதற்கான அா்ப்பணிப்பை இது உறுதிப்படுத்துகிறது எனத் மத்திய நுகா்வோா்த் துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com