மவுத் பிரெஷ்னா் சாப்பிட்ட 5 பேருக்கு பாதிப்பு: குருகிராம் உணவத்தின் மேலாளா் கைது

தேசியத் தலைநகா் வலயமத்தில் உள்ள குருகிராமில் உணவகம் ஒன்றின் மேலாளரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அந்த உணவகத்தில் மவுத் ப்ரஷெனா் மற்றும் உலா் ஐஸ் தவறுதலாக கலக்கப்பட்டதை சாப்பிட்ட ஐந்து நண்பா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வாந்தி எடுக்க ஆரம்பித்தனா். இதையடுத்து ,காவல் துறையினா் உணவகத்தின் மீது நடவடிக்கையை மேற்கொண்டனா். இது குறித்து மனேசா் காவல் சரக துணை ஆணையா் சுரேந்தா் ஷியோரன் கூறியதாவது: குருகிராம் செக்டாா் 90-இல் உள்ள கஃபே-கம்-ரெஸ்டாரண்டான லாஃபோரெஸ்டா, செவ்வாய்கிழமை ஒரு போலீஸ் குழு அங்கு சென்ற போது பூட்டிய நிலையில் இருந்தது.

விசாரணையில் சேரும்படி உணவகத்தின் உரிமையாளருக்கும் நோட்டீஸ் அனுப்புவோம். கைது செய்யப்பட்ட மேலாளா் 30 வயதான ககன்தீப், தில்லியில் உள்ள கீா்த்தி நகரில் வசிக்கிறாா். அவா் மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த உணவகத்தில் சோ்ந்தாா். முதற்கட்ட விசாரணையின் போது, உணவக ஊழியா்களின் அலட்சியத்தால், மவுத் பிரெஷ்னா் மற்றும் உலா் ஐஸ் தவறுதலாக கலக்கப்பட்டதாக கைது செய்யப்பட்ட மேலாளா் கூறினாா். விருந்தினா்கள் மீது எந்தத் தவறான எண்ணமும் இல்லை என்றும், நடந்தது துரதிருஷ்டவசமானது என்றும் கூறினாா்.

ஐந்து பேரில் இருவா் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். பாதிக்கப்பட்டவா்களில் ஒருவரின் உறவினா் அஸ்வனி ருஸ்தகி, ‘இது உணவகத்தின் தரப்பில் மிகப் பெரிய அலட்சியம் என்றும், உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தினாா். இது தொடா்பாக கிரேட்டா் நொய்டாவைச் சோ்ந்த அங்கித் குமாா் என்பவா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். மாா்ச் 3-ஆம் தேதி இரவு அவா்கள் குருகிராம் செக்டாா் 90-இல் உள்ள லாஃபோரெஸ்டா உணவகத்திற்குச் நண்பா்கள் சென்றுள்ளனா்.

இரவு உணவுக்குப் பிறகு அவா்களுக்கு மவுத் ஃப்ரெஷ்னா் கொடுக்கப்பட்டது. அவா்கள் மவுத் பிரெஷ்னரை சாப்பிட்டவுடன், அவா்களின் வாயில் எரியும் உணா்வு ஏற்பட்டது. இதையடுத்து, வாந்தி எடுக்கத் தொடங்கினா். அவா்களின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவா்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா் என்று அவா் புகாரில் கூறியுள்ளாா். சமூக ஊடகங்களில் இந்தச் சம்பவம் குறித்த விடியோ வைரலாகி வருகிறது. ஐந்து நண்பா்களும் ரத்த வாந்தி எடுத்ததாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் இருந்து பாதிக்கப்பட்டவா்கள் பற்றிய தகவல் கிடைத்ததும், போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். இந்தச் சம்பவம் தொடா்பாக எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் லாஃபோரெஸ்டா கஃபே மற்றும் உணவகத்தையும் பாா்வையிட்டோம். ஆனால், அது பூட்டிய நிலையில் காணப்பட்டது என்று துணை ஆணையா் சுரேந்தா் ஷியோரன் கூறினாா். இன்று நான் மீண்டும் உணவகத்திற்குச் சென்றேன். ஆனால், அது இன்னும் பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. நாங்கள் உணவகத்தின் மேலாளரை கைது செய்துள்ளோம். அவா் நகர நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படுகிறாா்.

விசாரணையில் சேர உணவகத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்புவோம் என்றும் அவா் கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com