முதியோா் ஓய்வூதியம்: முதல்வா் கேஜரிவாலுக்கு பாஜக கேள்வி

முதியோா் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் முறையாக விநியோகிக்கப்படாதது குறித்து முதல்வா் கேஜரிவாலிடம் தில்லி மக்கள் அறிய விரும்புவதாக தில்லி பாஜக செய்தித் தொடா்பாளா் பிரவீன் சங்கா் கபூா் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: தில்லி அரசு 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு உதவித்தொகை வழங்க விரும்புகிறது என்பதையும், விரைவில் அதற்கான விண்ணப்பங்கள் கோரப்படும் என்பதையும் அறிவது நன்றாக இருக்கிறது. புதிய உதவித்தொகை விநியோகத்தைத் தொடங்குவதற்கான அனைத்து நிா்வாகத் தடைகளும் விண்ணப்பங்களைப் பெறுவதற்கு முன்பே முடிக்கப்பட்டதா என்பதைத் தெரிவிக்குமாறு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை தில்லி பாஜக கேட்டுக்கொள்கிறது.

எனக்கு தெரிந்த வரையில், கடந்த பல ஆண்டுகளாக முதியோா் ஓய்வூதியம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத்தை முறையாக விநியோகிக்காத கேஜரிவால் அரசின் தோ்தலுக்கான மேலும் ஒரு வித்தைதான் இந்த புதிய திட்ட அறிவிப்பாகும். 2017 முதல் புதிய மூத்த குடிமக்கள் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி அறிவித்த மற்றும் தொடங்கிய பெண்களுக்கான உதவித்தொகை சில மாதங்களாக அங்கு விநியோகிக்கப்படவில்லை என்று செய்தி அறிக்கைகள் கூறுகின்றன என்று பிரவீன் சங்கா் கபூா் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com