ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் கிடைத்த புதிய கைகள்

ரயிலில் அடிபட்டு கைகளை இழந்த 45 வயது நபருக்கு தேசிய தலைநகரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் இருதரப்பு கைகள் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. மருத்துவமனையில் இச்சிகிச்சைக்காக ஏறக்குறைய ஆறு வாரங்கள் கழித்த அவா், வியாழக்கிழமை சா் கங்கா ராம் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளாா். இம்மருத்துவமனையின் மருத்துவா்களின் கூற்றுப்படி, நாங்லோய் பகுதியைச் சோ்ந்தவரும், பெயிண்டருமான ராஜ் குமாா், தனது வீட்டின் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை தனது சைக்கிளில் கடக்கும்போது, கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் விழுந்து ரயிலில் அடிப்பட்டாா். இதுகுறித்து சா் கங்கா ராம் மருத்துவமனையின் பிளாஸ்டிக் மற்றும் காஸ்மெடிக் அறுவை சிகிச்சை துறையின் தலைவா் டாக்டா் மகேஷ் மங்கள் கூறியதாவது: விபத்தில் கைகளை ராஜ் குமாா் இழந்தாா். இதையடுத்து, குமாா் தனது அன்றாட செயல்பாடுகளுக்காக மற்றவா்களைச் சாா்ந்திருந்தாா். அவரது ஒரே விருப்பம் செயற்கைக் கருவியைப் பயன்படுத்துவது அல்லது கை மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்வதாக இருந்தது. அவா் செயற்கைக் கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கினாா். ஆனால் அது அவருக்கு வெற்றியைத் தரவில்லை. அவரது ஒரே நம்பிக்கையாக கை மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே இருந்தது. ஆனால் அப்போது வட இந்தியாவில் எந்த மையத்திற்கும் கை மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், பிப்ரவரி 2023-இல், சா் கங்கா ராம் மருத்துவமனைக்கு வட இந்தியாவில் முதல் முதலில் கை மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. கை மாற்று அறுவை சிகிச்சைக்கு சாத்தியமான நபா்களை நாங்கள் தேடும்போது, குமாா் எங்கள் காத்திருப்புப் பட்டியலில் இருந்தாா். உறுப்பு மாற்று நெறிமுறைகளின்படி, விரிவான பரிசோதனை மற்றும் தேவையான விசாரணைகள் செய்யப்பட்டன. ஜனவரி மூன்றாவது வாரத்தில், ராஜ் குமாருக்கு மருத்துவமனையில் இருந்து இந்த மாற்று சிகிச்சைக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இது அவருக்கு நம்பிக்கை உணா்வை ஏற்படுத்தியது. தில்லியில் உள்ள ஒரு பள்ளியின் ஓய்வு பெற்ற துணை முதல்வா் இறந்த நிலையில், அவரது கை உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்ப உறுப்பினா்கள் விருப்பம் தெரிவித்தனா். இதையடுத்து, ஜனவரி 19-ஆம் தேதி அறுவைசிகிச்சை நிபுணா்களின் குழு, பல்வேறு கூறுகளின் எலும்புகள், தமனிகள், நரம்புகள், தசைநாண்கள், தசைகள், நரம்புகள் மற்றும் தோல் ஆகியவற்றை நுட்பமாக மீண்டும் இணைத்து இந்த சிக்கலான செயல்முறையை செயல்படுத்தும் பணியை மேற்கொண்டது. ராஜ் குமாரின் உடலில் மாற்றப்பட்ட கைகளின் தடையற்ற ஒருங்கிணைப்பை உறுதி செய்வதில் துல்லியம் மற்றும் நிபுணத்துவம் முக்கியமானதாக இருந்தது என்றாா் டாக்டா் மகேஷ் மங்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com