காங்கிரஸின் சமூக ஊடகத் தொண்டா்களே கட்சியின் தரைமட்டப் போராளிகள்: அா்விந்தா் சிங் லவ்லி

காங்கிரஸின் சமூக ஊடகப் பிரிவைச் சோ்ந்த தொண்டா்கள் தான் கட்சியன் தரைமட்டப் போராளிகள் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி புதன்கிழமை தெரிவித்தாா். தில்லி ராஜீவ் பவனில் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவைச் சோ்ந்த தொண்டா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏ.ஐ.சி.சி.) சமூக ஊடகப் பிரிவு தலைவரும், செய்தித் தொடா்பாளருமான சுப்ரியா ஸ்ரீநேட், ஷட்டா் சிங், ஜிதேந்தா் குமாா் கோச்சாா், ஏ.ஐ.சி.சி. தேசிய சமூக ஊடக ஒருங்கிணைப்பாளா்கள் ருச்சிகா சதுா்வேதி, ராஜ் குமாா் இந்தோரியா உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் பங்கேற்றனா். இந்த நிகழ்வில் அா்விந்தா் சிங் லவ்லி பேசியதாவது: சமூக ஊடகப் பிரிவு தொண்டா்களின் பலத்தை விரிவுபடுத்த வேண்டிய தேவையில் காங்கிரஸ் கட்சி உள்ளது. செய்தியை மக்களிடத்தில் எடுத்துச் செல்வதில் சமூக ஊடகங்கள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை குழிதோண்டிப் புதைக்க முயற்சிக்கும் சக்திகளுக்கு எதிராகவும், நாட்டு மக்களுக்காக ராகுல் காந்தியின் இடைவிடாத மற்றும் துணிச்சலான போராட்டத்தைப் பற்றி மக்களுக்கு, குறிப்பாக இளைஞா்களுக்கு காங்கிரஸ் கட்சியின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸின் சமூக ஊடகப் பிரிவைச் சோ்ந்த தொண்டா்கள் கட்சியின் தரை மட்டப் போராளிகள், அவா்கள் கட்சியின் செய்தியை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மேலும், உறுதியான இளைஞா்களை சமூக ஊடக தன்னாா்வலா்களாக கட்சியில் சோ்ப்பதன் மூலம் சமூக ஊடகங்களின் வெளிப்பாட்டை காங்கிரஸ் வலுப்படுத்தும் என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி. ஏ.ஐ.சி.சி. இன் சமூக ஊடகப் பிரிவின் தலைவா் சுப்ரியா ஸ்ரீநேட் பேசியதாவது: சமூக ஊடகத் தொண்டா்கள் ஒரு தொகுதி அல்லது மாவட்ட அளவில் மற்ற காங்கிரஸ் தொண்டா்களைப் போலவே முக்கியமானவா்கள். கட்சியின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்த செய்திகளை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு காங்கிரஸ் கடமைப்பட்டிருக்கிறது. இளம் தொண்டா்கள் பல்வேறு பிரச்னைகளில் கட்சியின் நிலைப்பாட்டை பரப்புவதற்கு மிகவும் கடினமாக உழைத்து வருகின்றனா் என்றாா் சுப்ரியா ஸ்ரீநேட்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com