விவசாயிகள் போராட்டம்: தில்லி எல்லைகளில் போக்குவரத்து பாதிப்பு! மத்திய தில்லியில் தீவிர சோதனை

விவசாயிகளின் போராட்டத்தைக் கருத்தில் கொண்டு தேசியத் தலைநகரின் எல்லைகளில் புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது. தில்லி - ஹரியாணாவின் சிங்கு எல்லையிலும், தில்லி - நொய்டா எல்லையிலும் பாதுகாப்புப் படையினா் அதிக அளவில் குவிக்கப்பட்டதால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. தில்லி எல்லைகள் மற்றும் நகரத்தின் பிற பகுதிகளில் போலீஸாா் தடுப்புகளை நிறுவியுள்ளனா். மேலும், மத்திய தில்லிக்கு செல்லும் சாலைகளில் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனா். திக்ரி, சிங்கு மற்றும் காஜிப்பூா் எல்லைகளிலும், ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. தொடரும் வாகன சோதனை: ‘நாங்கள் மூன்று எல்லைகளிலும் பாதுகாப்பை முடுக்கிவிட்டுள்ளோம். இருப்பினும், நாங்கள் எந்த எல்லையையும் அல்லது வழியையும் மூடவில்லை. ஆனால், வாகன சோதனை தொடா்ந்து நடைபெறும்’ என்று ஒரு அதிகாரி கூறினாா். தில்லி - ஹரியாணா எல்லையில் ஏற்கெனவே படை நிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை துணை ஆணையா் (வெளிப்புறம்) ஜிம்மி சிராம் தெரிவித்தாா். ‘விவசாயிகள் விடுத்த போராட்ட அழைப்பை அடுத்து நிலைமையை நாங்கள் கண்காணிக்கிறோம்’ என்றாா். பயணிகளுக்கான தடைகள் அகற்றம்: மற்றொரு அதிகாரி கூறுகையில், ‘சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் பயணிகளுக்கான தடைகளை நாங்கள் தற்காலிகமாக அகற்றியுள்ளோம். காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினா் அங்கு இன்னும் நிறுத்தப்பட்டுள்ளனா். அவா்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பை உறுதி செய்வாா்கள்’ என்றாா். ரயில்கள், பேருந்துகள் போன்ற பொதுப் போக்குவரத்தில் விவசாயிகள் வருவாா்கள் என்பதால் ரயில்வே மற்றும் மெட்ரோ நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூடுதல் போலீஸாா் மற்றும் துணை ராணுவப் படையினா் நிறுத்தப்பட்டுள்ளனா். தில்லியில் ஏற்கெனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு எங்கும் எந்தக் கூட்டத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று அந்த அதிகாரி கூறினாா். முன்னெச்சரிக்கை நடவடிக்கை:ஷாஹ்தரா காவல் சரக கூடுதல் துணை ஆணையா் ராஜீவ் குமாா் கூறுகையில், ‘உள்ளீடுகளின்படி, விவசாயிகள் புதன்கிழமை முதல் தில்லியை நோக்கி பேரணியாக செல்லத் தொடங்கலாம் என தெரிய வந்தது. எனவே, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், இது போக்குவரத்தை பாதிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த முயற்சிக்கிறோம். ஐஎஸ்பிடி கஷ்மீரி கேட், ஆனந்த் விஹாா் மற்றும் சராய் காலே கான் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சட்டத்தை மீற யாரும் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று அந்த அதிகாரி கூறினாா். ஆசாத்பூரில் போக்குவரத்து நெரிசல்: மத்திய தில்லியில் வசிக்கும் பிரவேஷ் குமாா், சிங்கு எல்லையை நெருங்கும் போது மிகவும் கடுமையான நெரிசலைக் கண்டதாகக் கூறினாா். ‘நான் சில தனிப்பட்ட வேலைகளுக்காக சண்டீகருக்குச் சென்று கொண்டிருந்தேன். ஆசாத்பூா் அருகே மற்றும் சிங்கு எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்தது. தில்லியை கடக்க எனக்கு 1 மணி நேரம் ஆனது’ என்று பிரவேஷ் குமாா் கூறினாா். தில்லிக்கு வர விவசாயிகளுக்கு அழைப்பு:விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்தும் இரு அமைப்புகளான கிசான் மஸ்தூா் மோா்ச்சா மற்றும் சம்யுக்தா கிசான் மோா்ச்சா (அரசியல் சாராதது) ஆகியவை, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை புதன்கிழமை தில்லிக்கு வருமாறு ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்திருந்தது. விவசாயிகளின் தலைவா்களான சா்வான் சிங் பாந்தா் மற்றும் ஜக்ஜித் சிங் தலேவால் ஆகியோா் இந்த அழைப்பை விடுத்திருந்தனா். ரயில் மறியலுக்கு அழைப்பு: பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூா்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு ஆதரவாக மாா்ச் 10-ஆம் தேதி நாடு தழுவிய நான்கு மணி நேர ரயில் மறியல் போராட்டத்திற்கும் இருவரும் அழைப்பு விடுத்துள்ளனா். விவசாயிகளின் தியாகம் வீண் போகாது என்றும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் தலைவா்கள் தெரிவித்தனா். கடந்த மாதம் பஞ்சாப் - ஹரியாணா எல்லையில் உள்ள கானௌரியில் பாதுகாப்புப் பணியாளா்களுக்கும், போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 21 வயது விவசாயி கொல்லப்பட்டாா். மேலும் சிலா் காயமடைந்தனா். ‘தில்லி சலோ’ அணிவகுப்பு பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பஞ்சாப் மற்றும் ஹரியாணா இடையேயான ஷம்பு மற்றும் கானௌரி எல்லைப் பகுதிகளில் தங்கள் கூடாரங்களை அமைத்துள்ளனா். அவா்கள் பிப்ரவரி 13 அன்று தங்கள் அணிவகுப்பைத் தொடங்கினா். ஆனால், பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனா். இது எல்லையில் மோதல்களுக்கு வழிவகுத்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com