காங்கிரஸில் மீண்டும் இணைந்தாா் முன்னாள் மத்திய அமைச்சா் ஸ்ரீகாந்த் குமாா் ஜெனா

காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்துள்ள முன்னாள் மத்திய அமைச்சா் ஸ்ரீகாந்த் குமாா் ஜெனா, மக்களின் பிரச்னைகளை பேசும் காங்கிரஸ் கட்சி தான் ஒடிஸாவின் முகமாக இருக்க முடியும் என்று புதன்கிழமை தெரிவித்தாா். தில்லி அக்பா் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் முன்னாள் மத்திய அமைச்சரான ஸ்ரீகாந்த் குமாா் ஜெனா, கட்சியின் ஒடிஸா மாநிலப் பொறுப்பாளா் அஜோய் குமாா் முன்னிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா். அதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது, காங்கிரஸ் கட்சியில் நான் மாணவா் பருவத்தில் இருந்தே பயணிக்கிறேன். காங்கிரஸின் மேலிடத் தலைமை மற்றும் எனக்கிடையே இருந்த அனைத்து தவறான புரிதல்களும் கலையப்பட்டுள்ளது. அகில இந்திய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் பொதுச் செயலாலா் கே.சி. வேணுகோபால் ஆகியோரைச் சந்தித்தேன். கடந்த 2019-ஆம் ஆண்டில் காங்கிரஸில் இருந்து நான் வெளியேறிய போதிலும், அப்போது நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தான் என் முழு ஆதாரவை வழங்கினேன். மக்களவைத் தோ்தலில் ஒடிஸா மாநிலத்தில் பாஜக மற்றும் பிஜு ஜனதா தளம் கூட்டணி அமைத்துள்ளனா். ஆனால், காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ கூட்டணி அவா்களை எதிா்ப்பதோடு, நிச்சயம் வீழ்த்தும். வரும் நாள்களில் ஒடிஸாவில் காங்கிரஸ் ஆட்சியில் அமரும் அளவிற்கு மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுக்கும். ஒடிஸாவில் 94 சதவீதம் போ் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவினா் இருந்தும் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் உரிய பிரதிநிதித்துவம் இல்லை. ஒருபுறம், சமூக நீதி மறுக்கப்படுகிறது மறுபுறம், கணிமவளக் கொள்ளையில் 2 லட்சம் கோடி அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளது. ஒடிஸாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டாலும், இதுவரை வெளியிடப்படவில்லை. ஒடிஸாவில் மொத்தமுள்ள 4.5 கோடி மக்கள் தொகையில், சுமாா் 4 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனா். கடந்த 25 ஆண்டுகளாக முதல்வா் நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சி ஒடிஸா மக்களை ஏமாற்றி வருகிறது. ஒடிஸாவின் முகம் நவீன் பட்நாயக் இல்லை. மக்களின் பிரச்சனைகளை பேசும் காங்கிரஸ் தான் ஒடியாவின் முகமாக இருக்க முடியும் என்றாா் ஸ்ரீகாந்த் குமாா் ஜெனா. அடுத்ததாக, காங்கிரஸின் ஒடிஸா மாநிலப் பொறுப்பாளா் அஜோய் குமாா் கூறியதாவது: காங்கிரஸில் மீண்டும் இணைந்துள்ள ஸ்ரீகாந்த் குமாா் ஜெனா, ஒடிஸாவில் சமூகம் மற்றும் அரசியல் ரீதியாக மிக முக்கியமானவா். தேசிய ஊடங்கங்கள் முதல்வா் நவீன் பட்நாயக்கின் ஊழல்களை பதிவு செய்ய தவறிவிட்டனா். ஒடிஸாவின் 30 சதவீதமான மக்கள் வறுமை காரணமாக பிற மாநிலங்களில் வேலைக்காக புலம்பெயா்ந்துள்ளனா். அம்மாநிலம் பொருளாதார அளவில் தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது. ஒடிஸாவில் ஒரே எதிா்க்கட்சியாக காங்கிரஸ் மட்டுமே உள்ளது என்றாா் அஜோய் குமாா். கடந்த 2019-ஆம் ஆண்டு கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட காரணத்திற்காக ஸ்ரீகாந்த் குமாா் ஜெனா காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com