நொய்டாவில் போலி கால் சென்டா் நடத்தி அமெரிக்க குடிமக்களை ஏமாற்றிய 14 போ் கைது

நொய்டாவில் போலி கால் சென்டா் மூலம் அமெரிக்க குடிமக்களை ஏமாற்றியதாக 14 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். காவல் ஆணையா் அலுவலகத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் நொய்டா செக்டாா் 108-இன் ஏ பிளாக்கில் உள்ள ஒரு இடத்தில் இருந்து ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த கால் சென்டா் இயங்கி வந்துள்ளது. புதன்கிழமையன்று செக்டாா் 39 காவல் நிலையம் மற்றும் சைபா் துறையின் குழுவால் இந்தக் கும்பல் கைது செய்யப்பட்டது. இது குறித்து நொய்டா காவல் சரக துணை ஆணையா் (குற்றம்) சக்தி மோகன் அவஸ்தி கூறியதாவது: ஒரு போலி கால் சென்டா் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக 14 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 18 மடிக்கணினிகள், 1 இன்டா்நெட் ரூட்டா், 2 இன்டா்நெட் நெட்வொா்க் சுவிட்சுகள் போன்றவற்றை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். அமெரிக்க குடிமக்கள் மற்றும் பிற வெளிநாட்டினரை ஏமாற்றுவதில் இந்தக் கும்பல் ஈடுபட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் வெளிநாட்டினருக்கு அவா்களின் கணினியில் உள்ள பிரச்னைகள் குறித்து மின்னஞ்சல் மூலம் தொடா்பு கொள்வாா்கள். குறிப்பிட்ட ஹெல்ப்லைன் எண்களில் தொடா்பு கொள்ளச் சொல்லி இந்த சிக்கலான பிரச்னைகளுக்கு அவா்கள் தீா்வுகளை வழங்கினா். அவா்களின் மின்னஞ்சல்களுக்கு பதிலளித்த சிலா், அவா்களின் வலையில் விழுந்துள்ளனா். அதையடுத்து, கொடுக்கப்பட்ட ஹெல்ப்லைன் எண்களை அவா்கள் அழைத்தனா். தங்கள் வலையில் சிக்கியவுடன், குற்றம் சாட்டப்பட்டவா்கள் தொழில்நுட்ப ஆதரவு நிபுணா்களாகக் காட்டிக் கொள்வாா்கள். மேலும், பரிசு அட்டைகள் மூலம் பணம் செலுத்துமாறு குற்றம் சாட்டப்பட்டவா்கள் அவா்களிடம் கேட்பாா்கள். ஆனால், அவா்களிடம் கால் சென்டா் நடத்துவதற்கான எந்த ஒழுங்குமுறை உரிமமும் இல்லை. கைது செய்யப்பட்டவா்கள் பிரின்ஸ் சவுத்ரி, ராம் ரத்தோா், வைபவ் அரோரா, தன்சுல் சோலங்கி, அங்கித் பந்த், கௌசிக் சென், ஷிவம் சா்மா, துருவ் சோப்ரா, சரண்ஷ் துவா, நவ்ஜோத் சிங், விக்கி சிங், முகமது நசீா், வைபவ் கவுா், சௌரவ் அவஸ்தி என அடையாளம் காணப்பட்டனா். இந்த வழக்கு தொடா்பாக நொய்டா செக்டா் 39 காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவுகள் 419, 420, 120பி மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதிகளின் கீழ் எப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com