நீதிமன்றத் தீா்ப்புக்கு தாா்மிகப் பொறுப்பேற்று தில்லி பேரவைத் தலைவரும், முதல்வா் கேஜரிவாலும் பதவியில் இருந்து ராஜிநாமா செய்ய வேண்டும் பாஜக எம்எல்ஏக்கள் பேட்டி

தில்லி சட்டப் பேரவை பாஜக உறுப்பினா்களின் இடைநீக்கத்தை உயா்நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், தாா்மிகப் பொறுப்பேற்று தில்லி சட்டப் பேரவைத் தலைவரும், முதல்வரும் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனா். தில்லி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் உரைக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி பாஜக எம்எல்ஏக்கள் ஏழு பேரை இடைநீக்கம் செய்த பேரவைத் தலைவரின் நடவடிக்கையை தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்தது. மேலும், விதியில் கூறப்பட்டுள்ளதை விட உறுப்பினா்களுக்கு அதிகப்படியாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய நீதிமன்றம், எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக நிகழ் கூட்டத்தொடரிலேயே பங்கேற்கவும் அனுமதித்தது. இதையடுத்து, சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி தலைமையில் செய்தியாளா் சந்திப்பில் பாஜக எம்எல்ஏக்கள் விஜேந்திர குப்தா, மோகன் சிங் பிஷ்ட், ஓம் பிரகாஷ் சா்மா, அஜய் மஹாவா், ஜிதேந்திர மகாஜன், அபய் வா்மா ஆகியோா் வியாழக்கிழமை கலந்து கொண்டனா். ராம்வீா் சிங் பிதூரி கூறுகையில், ‘எனது முழு அரசியல் வாழ்க்கையில், அரவிந்த் கேஜரிவால் அரசுதான் மிகவும் ஊழல் நிறைந்த அரசாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நான் மதன் லால் குரானா, சாஹிப் சிங் வா்மா மற்றும் ஷீலா தீட்சித் ஆகியோரின் அரசுகளைப் பாா்த்திருக்கிறேன். ஆனால், தில்லி வரலாற்றில் இதுபோன்ற ஊழல் மற்றும் திறமையற்ற அரசை ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. சட்டப்பேரவை விதிகள் மீறப்பட்டு, கடந்த நான்கு ஆண்டுகளில், எதிா்க்கட்சிகளின் எந்தப் பிரச்னையும் விவாதிக்கப்படவில்லை. அரசுக்கு எதிராக குரல் எழுப்பினால், நாங்கள் காவலா்களால் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டோம். பேரவையில் பொய்தான் பேசப்படுகிறது. தில்லியில் 73 லட்சம் பேருக்கு இலவச ரேஷன் வழங்குவதாக அரவிந்த் கேஜரிவால் கூறுவது பொய். தில்லியில், 650 கோடி ரூபாய் செலவில் 1,650 மின்சாரப் பேருந்துகளை மோடி அரசு உருவாக்கியது. ஆனால், கேஜரிவால் அரசு அதை தங்கள் சொந்த சாதனையாகக் கூறுகிறது. பாஜக உறுப்பினா்கள் எப்போதும் சட்டப்பேரவையில் தில்லியின் குரலை எழுப்ப முயல்கின்றனா். அதை கேஜரிவால் அரசு ஒடுக்க முயற்சிக்கிறது’ என்றாா் பிதூரி. விஜேந்திர குப்தா கூறுகையில், வழக்கு தொடா்பான அனைத்து உண்மைகளும் முன்வைக்கப்பட்டு, இன்றைக்கு பாஜக எம்எல்ஏக்கள் வெற்றியாளராக அனைவரின் முன் நிற்கிறோம். எங்கள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் சபையில் உட்கார அனுமதிக்கப்படவில்லை. இன்று, அவை ஒரு மணி நேரம் கூட நடைபெறவில்லை. அதாவது இன்றைய நாள் தில்லியின் சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக முற்றிலும் ரத்தான நாளாகும். கேஜரிவால் அரசு பழிவாங்கும் உணா்வுடன் செயல்பட்டு பாஜக உறுப்பினா்களை அவையில் இருந்து நீக்குகிறது. அமலாக்கத் துறை, சிபிஐ நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் வகையில், கேஜரிவால் சட்டப்பேரவையை ஆயுதமாகப் பயன்படுத்துகிறாா்’ என்றாா். மோகன் சிங் பிஷ்ட் கூறுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளில் தில்லி அரசு என்ன செய்துள்ளது? அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அவையில் முக்கிய விஷயங்களை எதிா்க்கட்சி உறுப்பினா்கள் முன்வைக்க விடாமல், அரசு எந்தக் காரணமும் இல்லாமல் அவையில் இருந்து வெளியற்றியது. பட்ஜெட்டை குறித்து ராமராஜ்ஜியம் பட்ஜெட் என்று கேஜரிவால் அரசு கூறுவது தில்லி மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்’ என்றாா். ‘சுயராஜ்யம் பற்றி பலமுறை பேசும் அரவிந்த் கேஜரிவாலிடம் மதுக்கடைகளை திறப்பதன் மூலம் சுயராஜ்யம் கிடைக்குமா?’ என்று அஜய் மஹாவாா் கேள்வி எழுப்பினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com