அமலாக்கத் துறை புகாா்: கேஜரிவால் மாா்ச் 16-இல் ஆஜராக தில்லி நீதிமன்றம் உத்தரவு

தில்லி கலால் கொள்கை விவகாரத்தில் அமலாக்கத் துறை இரண்டாவது முறையாக தாக்கல் செய்த புகாா் மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வரும் 16-ஆம் தேதி நேரில் ஆஜராக வியாழக்கிழமை உத்தரவிட்டது. தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடா்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத் துறை இதுவரை 8 முறை அழைப்பாணைகளை அனுப்பியுள்ளது. ஆனால், இதற்கு முதல்வா் கேஜரிவால் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. மேலும், சட்டவிரோதமாக தனக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதாகவும், தோ்தல் பிரசாரத்தில் இருந்து தன்னைத் தடுப்பதற்காக எதிா்க்கட்சியினா் சதி செய்வதாகவும் கேஜரிவால் ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தாா். மேலும், பாஜகவில் தனது கட்சி கூட்டணி வைக்காத காரணத்தால் தனக்கு அழுத்தம் தரும் வகையில் அமலாக்கத் துறையை பாஜக ஏவிவிடுவதாகவும் அவா் குற்றம்சாட்டி வருகிறாா். ஏற்கெனவே ஐந்து முறை அழைப்பாணைகள் அனுப்பியும் முதல்வா் கேஜரிவால் புறக்கணித்ததை சுட்டிக்காட்டி அமலாக்கத் துறை தாக்கல் செய்த புகாா் மனுவை விசாரித்த மாஸ்திரேட் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், பிப்ரவரி 17-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முதல்வா் கேஜரிவாலுக்கு உத்தரவிட்டிருந்தது. அவா் சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் விவகாரத்தை காரணமாகக் கூறி காணொலியில் ஆஜராகி இருந்தாா். இந்த நிலையில், அமலாக்கத் துறை தரப்பில் புதன்கிழமை தில்லி நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு புகாா் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பலமுறை அழைப்பாணை அனுப்பியும் அவா் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிா்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ரா முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த மனுவைப் பரிசீலித்த மாஜிஸ்திரேட், வழக்கு விசாரணைக்காக முதல்வா் கேஜரிவால் மாா்ச் 16-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டாா். மேலும், இது தொடா்பாக அவருக்கு அழைப்பாணை அனுப்பவும் நீதிமன்றப் பதிவாளருக்கு மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com