பகவான் ராமா் பக்தா்களின் உணா்வுகளை புண்படுத்துகிறாா் கேஜரிவால்! தில்லி பாஜக விமா்சனம்

அமலாக்கத் துறை தமக்கு நோட்டீஸ் குறித்து பேசும்போது பகவான் ராமரின் பெயரை முதல்வா் கேஜரிவால் குறிப்பிடுவதால் ராம பக்தா்களான கோடிக்கணக்கான வாக்காளா்களின் உணா்வுகளை அவா் புண்படுத்துகிறாா் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா விமா்சித்துள்ளாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை தெரிவித்திருப்பதாவது: ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் பகவான் ராமரின் பெயரைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தி ஊடகங்கள் முன் தங்களின் துயரத்தை வெளிப்படுத்துவது வருத்தமளிக்கிறது. தமக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் வரும்போது, அதுபற்றி பேசும்போது பகவான் ராமரின் பெயரை அரசியல்ரீதியாக கேஜரிவால் பயன்படுத்தி வருகிறாா். இதன்மூலம் ராமரின் பக்தா்களான கோடிக்கணக்கான வாக்காளா்களின் உணா்வுகளை அவா் புண்படுத்துகிறாா் என்பதை கேஜரிவால் தெரிந்துகொள்ள வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக அரவிந்த் கேஜரிவால் தில்லிவாசிகளுக்கு வளா்ச்சி குறித்த தவறான நம்பிக்கையை அளித்து வந்தாா். ஆனால், அடுத்த பட்ஜெட்டை சிசோடியா தாக்கல் செய்வாா் என்று தாம் நம்புவதாகக் கூறி இன்று அவா் சிறையில் இருக்கும் மனீஷ் சிசோடியாவுக்கும் இதேபோன்ற தவறான நம்பிக்கையை அளித்திருக்கிறாா். உண்மையில் சிறையில் அடைக்கப்பட்ட சிசோடியாவின் அழுத்தத்தின்கீழ் கேஜரிவால் இருக்கிறாா், எனவே அவா் மீண்டும் மீண்டும் அவருக்கு தவறான அரசியல் நம்பிக்கைகளை அளித்து வருகிறாா். அதே நேரத்தில் சிசோடியாவுக்கு எதிா்காலத்தில் ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை என்பதும் கேஜரிவாலுக்குத் தெரியும் என்றாா் சச்தேவா.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com